Saturday 31 August 2024

தமிழ் நூல்களுக்குத் தடையா?


 பொதுவாகவே நமது அரசாங்க நூல்நிலயங்களில்  தமிழ் நூல்கள் இடம் பெறுவதில்லை  என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.  தமிழ் புத்தகங்களையே இடம் பெறச் செய்யாமல் அப்படி ஒரு நிலையை உருவாக்கி விட்டார்கள் பதவியில் இருந்தவர்கள்.  அதாவது இந்தியர்கள் நூல்நிலையங்களுக்குள்  வரவேண்டாம், படிக்க வேண்டாம்  என்பதில் கவனமாக இருந்தார்கள்.  அதனாலேயே  நாம் நூல்நிலையங்களுக்குச் செல்லுகின்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது.

அப்போது அப்படி இருந்தது என்பது உண்மை. ஆனால் எப்போதும் அப்படி இருக்க முடியாது.  சீன மொழி புத்தகங்கள் இருக்கும் போது அது ஏன் தமிழ் மொழி புத்தகங்களுக்கு மட்டும் தடை?   இந்தியர்கள் மட்டும்  படிக்கக் கூடாது என்பதில் ஏன் அவ்வளவு அக்கறை?

இப்போது தமிழ் எழுத்தாளர் சங்கம்  நல்லதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.  மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் தமிழ் நூல்கள்  இடம் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை  தமிழ் எழுத்தாளர் சங்கம்  வைத்திருக்கிறது.

நாட்டில் மூன்று இனங்கள் வாழ்கின்றோம்.  அது ஏனோ அரசாங்கமே  பிரித்து ஆள்கின்ற  வேலையைச் செய்கின்றது. நாட்டில் மூன்று மொழிகள். தேசிய மொழி, சீன மொழி, தமிழ் மொழி. இதனை  நூல்நிலையங்களில்  உள்ளவர்கள் அறியாதவர்களா என்ன?  சீன மொழி பத்தகங்கள் வைக்கும் போது, தமிழ்ப்புத்தகங்களும்   வைக்கைப்பட வேண்டும்  என்பது மட்டும் அவர்கள் ஏன் அறியாதவர்களாக இருக்கின்றனர்?  அறியாதவர்கள் என்பதைவிட அவர்கள் புறக்கணிக்கின்றனர்  என்பது  அவர்களுக்கே தெரியும்.  நிச்சயமாக அங்குப் பணிபுரியும் நூலகர் தான் அதற்கானப் பழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இது போன்று தங்களது வேலையில் அலட்சியமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.

அதே போல நாமும் நமது பங்குக்கு அந்த  நூல்நிலையங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நமது கடமைகளில் ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.   குறைந்தபட்சம் நூல்நிலையங்களின் அருகே இருப்பவர்கள், வாய்ப்பு உள்ளவர்கள்  தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

Friday 30 August 2024

என்ன சாபமா?

 

சாபம் என்பது உண்மையா பொய்யா என்கிற பட்டிமன்றத்திற்குள்  நான் போக விரும்பவில்லை.

ஆனால் சமீபகாலமாக  நம் இந்தியர்களிடையே பேசுபொருளாக இருப்பது இந்த சாபம்.  யார் மீது இந்த சாபம்?  இந்த அரசாங்கத்தின் மீது தான்.  அரசாங்கம் என்றாலும் குறிப்பாக நம் பிரதமர் மீது  நமது மக்களின் வயிற்றெரிச்சல் கொஞ்சம் அதிகம் என்பது  மிகத் தெளிவாகவே தெரிகிறது. ஏமாற்றிவிட்டார் என்பது தான் காரணம்.

அப்படி என்ன தான் பிரச்சனை? ஒன்றா, இரண்டா? எல்லாமே பிரச்சனை தான்.  நமது மக்கள் ஒவ்வொன்றுக்கும் இந்த அரசாங்கத்தோடு போராட வேண்டியுள்ளதே?  நம் இனத்தவர் தவிர வேறு இனத்தவர் யாராவது  போராடுகிறார்களா? அப்படி ஒன்றும் தெரியவில்லையே!

முதலில் வேலையில்லா பிரச்சனை.  இதற்கு முன்பெல்லாம் எப்படியோ ஏதோ ஒரு வேலை கிடைக்கும். குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். இப்போது அந்த நிலையும் மாறிவிட்டது.  வேலையில்லை என்பது முக்கிய பிரச்சனை.. இப்போது பெரும்பாலோர் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கின்றனர்.  அந்த சிறிய தீவு நம் மக்களுக்கு வேலைகளைக் கொடுக்கின்றனர். இவ்வளவு பெரிய நாடு  நம்மைக் கைகழுவுகின்றது!

வேலையில்லாப் பிரச்சனை, சிறு தொழில்கள் செய்ய அனுமதி கொடுப்பதில்லை,  குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை, தங்க வீடில்லை வாசலில்லை - இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.  ஆனால் தலையாயது வேலையில்லாப் பிரச்சனை. 

இப்போதைய மக்களின்  கேள்வி எல்லாம்   - குறிப்பாக இந்தியர்கள் -  எப்போதிலிருந்து பிரச்சனைகள் ஆரம்பமாயின என்பது தான்.  15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்,  அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆன  பின்னரே  இந்தியர்கள் பல துயரங்களைச் சந்திக்கின்றனர்  என்பது தான் பொதுவான அபிப்பிராயம்.  அதற்கு முன்னர் இல்லாத பிரச்சனைகள் எல்லாம் இப்போது மட்டும்  ஏன், எப்படி வந்தன  என்பது தான்.

அதனால் தான் இந்தியர்கள் தங்களது வயிற்றெரிச்சலையும், சாபத்தையும்   அன்வார் அரசாங்கத்தின் மீது   கொட்டுகின்றனர் என்று கூறப்படுகின்றது. அதற்குச் சாட்சி தான்  சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் அகால மரணம்.  இது போன்று இன்னும் வரலாம் என்று கூறப்படுகின்றது.

நமக்குச் சாபம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. சாபம் மீது நம்பிக்கை உண்டு என்றாலும்  நாட்டின் மீது எப்படி? மதுரையை எரித்தாளே  கண்ணகி அது போன்றா? ஒரு வேளை இன்னும் சோதனைகள் உண்டோ? 

Thursday 29 August 2024

உணவ்கங்களுக்கு என்ன ஆயிற்று?


 என்ன கஷ்டகாலமோ தெரியவில்லை. நமது உணவகங்கள் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கின்றன.

சாக்குப்போக்குச் சொல்லுவதில் பயனில்லை. ஆள் பற்றாக்குறை என்றெல்லாம் சொல்லி அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிகள் வேண்டாம்.  உங்களுக்கு ஆள் பற்றாக்குறை என்பதற்காக நீங்கள்  எதையாவது போடுவீர்கள், வாடிக்கையாளர்கள் அதனைச் சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் எங்களுக்கு இல்லை.

எது எப்படியோ  இப்போது எல்லா உணவகங்களின் மீதும் நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.  யாரையும் நம்புவதற்கில்லை.  ஆள் பற்றாக்குறை  என்கிற குறை ஒரு பக்கம்,  போதுமான   ஆள்கள் இருந்தாலும்  அங்கும் இது போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம்.

எந்த உணவகங்களாக இருந்தாலும் நமக்கு சுத்தமே  முதல் தகுதியாக  பார்க்கிறோம்.  சுத்தத்திற்கே  முதலிடம்.   ஆனால் நமது உணவகங்களில் முதல் எதிரி  கரப்பான் பூச்சிகள்  தான்.  இன்னும் எலிகள் தொல்லையும் உண்டு. அதோடு பாத்திரங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. அரைகுறையாக சுத்தம்  செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இத்தனை ஆண்டுகள்  எப்படியோ உணவகங்கள் தப்பித்தன.  கொஞ்சம் 'சம்திங்' கொடுத்து தப்பித்துக் கொண்டனர்.  இல்லை என்று யாரும்  சொல்லிவிட முடியாது.  ஆனால் எல்லா காலங்களிலும் அப்படியே தப்பித்துக் கொள்ளலாம்  என்று  சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அன்று  உங்களுக்கான நேரம்.  இப்போது எங்களுக்கான நேரம்.  அவ்வளவுதான் சொல்ல முடியும்.

ஆனால் நமது இனத்தவர்கள் நடத்தும் உணவகங்களில் இது போன்ற பிரச்சனைகள் வரும் போது  அதற்காக நாம் மகிழ்ச்சியடையப் போவதில்லை. அதில் நமக்குச் சந்தோஷமுமில்லை.  உணவகங்களுக்கும் ஏகப்பட்ட நஷ்டம்.  நீங்கள் நஷ்டமடைவதால்  இந்த சமுதாயத்திற்கும்  நஷ்டம் தான்.  முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்கள் இப்போது தவறான முன்மாதிரியாக மாறிவிட்டீர்கள்.

நமது அறிவுரை எல்ல்லாம் இது போன்று மீண்டும் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்பது தான்.

Wednesday 28 August 2024

எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது.

                                                    அவள் பறந்து போனாளே!

வேறு என்ன சொல்ல?  எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ ஒரு வெளிநாட்டில் இப்படி  ஆகும் என்று கனவு கூட கண்டிருக்கமாட்டார். ஆனால் நடந்துவிட்டது. நடந்தது நடந்தது தான்!  எந்த மாற்றமும் இல்லை.

ஆனாலும் நாமும் ஒன்பது நாள்கள் காத்துத்தான் கிடந்தோம்.  செய்திகளைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம்.  அதைத்தான் நம்மால் செய்ய முடியும்.  அவருக்காக கடவுளை வேண்டினோம்.  எதுவும் நடக்கவில்லை.

ஒரு சுற்றுப்பயணியான விஜயலெட்சுமி  இந்தியா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.  கப்பல் ஏறுவதற்கு முதல் நாள் மஸ்ஜித் இந்தியா நடைபாதையில் நடந்து கொண்டிருந்த போது நிலம் தீடீரென  உள்வாங்கியதில்  அத்தோடு  அவரது பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. 

அதன் பிறகு தீயணைப்புப்படை களம் இறக்கப்பட்டது.  காவல்துறை மற்றும் ஏனைய பணியாளர்கள் - சுமார் நூறுக்கு மேல் - அத்தோடு மோப்ப நாய்கள் என பெரும்படையே களமிறங்கியும் எதுவும் ஆகவில்லை.  

இனியும் பணிகளைத் தொடர்ந்தால்  இருக்கின்ற கட்டடங்களுக்கும் ஆபத்து நேரிடும் என்கிற பயமும் சேர்ந்து கொள்ளவே அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன.  யாரையும் குறை சொல்லுவதற்கில்லை.  முடிந்தவரை தத்தம் பணிகளைச் சிறப்பாகவே செய்தனர். இறந்தவரின் சடலமாவது கிடைத்திருந்தால்  அந்த குடும்பத்தோடு சேர்ந்து நமக்கும்  ஒரு மனநிறைவு ஏற்பட்டிருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கில் பயணிகள் நாட்டுக்கள்  வருகின்றனர். இப்படி ஒரு செய்தி என்பது இது தான் முதல் தடவை. ஏதோ நம் கண்முன்னே நடந்தது போல, நம்மில் ஒருவர் போல எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

இனி இது போன்ற விபத்துகள் நடக்கவே வேண்டாம்  என இறைவனை மன்றாடுவோம்.

Tuesday 27 August 2024

நாய்களே நன்றி!


 என்ன தான் மனிதர்கள் பல முயற்சிகளை  மேற்கொண்டாலும் , அந்த முயற்சிகள் பயனளிக்காத போது நாய்களைத்தான் மனிதர்கள் நம்பவேண்டியுள்ளது.

நூறுக்கு மேற்பட்ட மனிதர்கள் - காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள, இண்டாவாட்டர் பணியாளர்கள் -  இன்னும் வேறு துறைகளில் உள்ளவர்கள், இப்படி எண்ணற்றவர்கள் இருந்தும்,  முடியாத போது,   கடைசியில் மோப்ப நாய்களைத்தான் கொண்டுவர வேண்டியுள்ளது!  நிச்சயமாக மனிதர்களை விட அவைகளுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் என்று நம்பலாம்.

குழியில் இறங்குவதற்கு முன்னரே  அந்த நாய்கள் ஓரளவு கணித்து விட்டதாகவே நமக்குத் தோன்றுகிறது.  இருந்தாலும் பிரச்சனை என்னவெனில்  அடியில் நீரோட்டத்தின் வேகமே  அவர்களுக்குத் தடையாக இருந்தது.  அதனால் எந்தவொரு தேடுதலும் மீட்புக் குழுவினருக்குச் சாதகமாக இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

உண்மையில் இந்நிகழ்வு பெரியதொரு பேரிடர் என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.  உண்மையைச் சொன்னால் அது ஒரு விபத்து.  ஆனால் நடக்கக் கூடாத விபத்து.  மனித நடைபாதையில் இப்படி ஒரு விபத்தை நாம் கேளவிப்பட்டதில்லை.  

இது எப்படி நடக்க முடியும் என்கிற கேள்வி நம்முள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.  நடைபாதைகளை  அமைக்கும்  குத்தகையாளர்களின் தகுதி பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது  நம்மைப்போன்றவர்கள் வேறு என்ன செய்ய முடியும?  

எத்தனை பேர் முயற்சிகள் செய்கின்றனர்?  மனிதர்களால் முடியவில்லை என்றான பிறகு  நாய்கள் தான் கதாநாயகர்களாகத்  தெரிகின்றன!  நம்முடைய பிரார்த்தனை எல்லாம் எந்த ஒரு உயிர் சேதமும்  ஏற்படக்கூடாது  என்பது தான்.  நாய்களே ஜாக்கிரதை என்று தான் படித்திருக்கிறோம். இப்போது அந்த நாய்களையே நம்பவேண்டிய சூழல்! இது தான் காலத்தின் கோலமோ!

நல்லதையே எதிர்பார்ப்போம்!  அந்த நாலு நாய்களுக்கும் நன்றி!

Monday 26 August 2024

இதென்ன நாய் பாசம்?



பெரும்பாலான மனிதர்களைப் பொறுத்தவரை  நாய்களை நாய்களாகத்தான் பார்ப்பார்கள்.  பூனைகளைப் பூனைகளாகத்தான் பார்ப்பார்கள்.  ஒரு சிலர் தான் அவைகளைக்  குழந்தைகளைப்போல் பார்ப்பார்கள்,  வளர்ப்பார்கள்!  அதென்னவோ பாசத்தை அப்படிக் கொட்டுவார்கள்.

அதையெல்லா குறை சொல்ல வரவில்லை. அந்தப் பாசத்தை  வீட்டோடு வைத்துக் கொண்டால்  குறை ஏதும் இல்லை கண்ணா! வெளியே வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன். 

எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு இது போன்ற நாய்களைப் பார்க்கும் போது  அவைகளைக் கொஞ்ச தோன்றும்!  ஒரு சிலருக்கு ஓடத் தோன்றும்!  ஒரு சிலர் பூனைகளைக் கொஞ்சோ கொஞ்சு என்று கொஞ்சுவார்கள்.  நாய்களை  ' நாயோ நாய்'  என்று வெறுப்பார்கள்!எல்லாமே பழக்க தோஷம் தான்.

ஆனாலும் ஒரு சில நாய் வளர்ப்பார்களின் செயல்  நம்மை முகம் சுளிக்க வைக்கிறது  என்பது உண்மை தான்.  அவைகள் இருக்க வேண்டிய இடத்தில்  தான் இருக்க வேண்டும்.   அவைகளை உணவகங்களுக்குக் கொண்டு வருவது, அவைகளை நாற்காலிகளில் உட்கார வைப்பது எல்லாம் எல்லை மீறுகின்ற செயல்.  அதனை யாரும் விரும்புவதில்லை. நாய் மட்டும் அல்ல.  சில சமயங்களில் பூனைகளைக் கொண்டு வருவோரும்  இப்படி இருக்கத்தான் செய்கின்றனர்.

உங்களுடைய நாய் பாசத்தையோ பூனை பாசத்தையோ  உணவகங்களுக்குக் கொண்டுவந்து காட்டாதீர்கள்.  அங்கு நாலு பேர் வருகின்ற பொது இடம்.  பொது இடங்களில் பூனைகளையோ, நாய்களையோ உங்களுடன் கூட்டி வராதீர்கள்.

அது இஸ்லாமிய உணவகங்கள் மட்டும் அல்ல எல்லாவகை உண்வகங்களுக்கும் பொருந்தும்.  நாய்களோடும், பூனைகளோடும் உணவகங்களில் சாப்பிடுவதை யாரும் விரும்புவதில்லை.  அது சுகாதாரம் சம்பந்தப்பட்டது.  மதம் சம்பந்தப்பட்டதல்ல.

என்ன தான் நம்மிடையே பலவித கருத்து வேறுபாடுகள்  இருந்தாலும்  இது போன்ற செயல்கள் ஏற்கக் கூடியது அல்ல.  எப்போதும் சுயநலனாகவே சிந்திக்கக் கூடாது.  பொதுநலன் என்பது மிக மிக முக்கியம். குறிப்பிட்ட அந்த உணவகம் இப்போது மூடப்பட்டிருக்கிறது. அதனால் யாருக்கு நஷ்டம்? அந்த உணவகத்திற்குத் தான் பாதிப்பு.  அவர்களுடைய வேலையாட்களுக்கு யார் சம்பளம் கொடுப்பார்?  சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும். சம்பளத்தைக் கொடுக்க வைக்க வேண்டும்.

நாய் பாசம், பூனை பாசம் எல்லாம் வீட்டினிலே!

Sunday 25 August 2024

போகாத இடந்தனிலே போக வேண்டாம்!

                                                    மகள்: உமா    தாய்:  மாலா வேலு

வெளிநாட்டுப் பயணம் என்பது, அதுவும் புதிய நாடு ஒன்றுக்குப் பயணம் செய்வது, எத்தகைய ஆபத்தைக் கொண்டுவரும் என்பதை  இதோ ஒரு தாய்  மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

எவனோ ஒரு நாதாரி, நேப்பாளத்தைச் சேர்ந்தவன், அவனை நம்பி நேப்பாளத்துக்குப் போனவர்,  அத்தோடு அவரது வாழ்க்கையை வாழ முடியாமல், துன்ப துயரங்களோடு சிறையில் கழிந்தன. பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் நாடு வந்து சேர்ந்திருக்கிறார்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்லுவது இது தான். யாரையும் நம்பி ஒரு நாட்டுக்குப் போகாதீர்கள்.  பாக்கிஸ்தான், வங்காள தேசம், நேப்பாளம் போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் என்பதில் சந்தேகமில்லை.  மனித கடத்தல் என்பது இந்த நாடுகளில் சாதாரண விஷயமே.  ஏன் மலேசியா கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இன்னும் பல நாடுகள் உண்டு. வேலை என்று சொல்லி ஏமாற்றும் கும்பல். அங்குப் போனால் வேலையைத் தவிர மற்றவை எல்லாமே உண்டு! எல்லாம் போலி நிறுவனங்கள். கடைசியில் பணம் காலி. அடி, உதை என்று பல்வேறு  இன்னல்களுக்கு ஆளானது தான் மிச்சம்.

இப்போதெல்லாம் வேலை தேடி வெளிநாடுகளுக்குப் போவது  மிகவும் சாதாரண விஷயம்.  படித்த இளைஞர்கள் கூட பலவகைகளில் பாதிக்கப்படுகின்றனர்.  ஏஜெண்டுகள் மூலம் வேலை தேடுவதில் பல சிக்கல்கள் உண்டு.  பெரும்பாலான நிறுவனங்கள்  போலியானவை. அது பணம் பறிக்கும் கும்பல்.

நீங்களே முயற்சி எடுத்து வேலைகளைத் தேடுங்கள். கூகளில் தேடுங்கள். நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.  எந்தவொரு செலவும் இல்லாமல்  நீங்களே முயற்சி செய்யுங்கள்.  வேலைக்கு ஆள் தேவை என்றால் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கவே செய்யும்.

யாரையோ நம்பிப் போனால் அல்லது ஏஜெண்டுகளை நம்பிப் போனால்  உங்கள் நிலைமைக்கு யாரும் பொறுப்பில்லை.  கஞ்சா கடத்தல்கள் இப்போதெல்லாம் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது.  இன்று பல நாடுகளில் கஞ்சா கடத்தல்களுக்காக ஆண்களும் சரி, பெண்களும் சரி  பலர் சிறையில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக  வாடுகின்றனர். அதில் நிறைய மலேசிய இந்தியர்கள். இளம் வயதினர்.

இப்போது இந்த அம்மாவின் கதையைக் கேட்டு அதிர்ந்து போகிறோம். ஆனால் இன்னும் எத்தனை அம்மாக்கள் சிறையில் இருக்கின்றனரோ நாம் அறியோம்.  ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வியட்னாம் நாட்டு சிறையில் ஒரு மலேசியப் பெண் சிறையில் இருப்பதாகப் படித்தோம்.  நமக்குத் தெரியாத  இன்னும் எத்தனை பேர், எத்தனை நாடுகளில்  சிரமத்தில்  இருக்கின்றனரோ யாருக்குத் தெரியும்?  ஆனால் இதில் பலர் மலேசிய இந்தியப் பெண்கள் என்பது தான்  சோகம். 

போகாத இடந்தனிலே போக வேண்டாம் என்பதே நமது அறிவுரை.

Saturday 24 August 2024

கொடூரன்!

கொடூரன் என்கிற சொல்லைவிட  அவனைப்பற்றி பேச வேறு வார்த்தைகள்  இல்லை.

இந்த நிகழ்ச்சி இந்தியா,  உத்ரகாந்த் மாநிலத்தில்  நடந்தது.  பன்னிரண்டு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள்.  சமீபகாலங்களில்  கணவர் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருந்ததால்  அவர்களின் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டது.

அதனால் விவாகரத்து ஒன்றே வழி என்கிற நிலைமை.  ஆனாலும் அந்தப்பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியே வந்திருக்கிறான் அந்தக் கொடூரன்.  அவனோடு அவ்னுடைய பெற்றோர்களும் சேர்ந்து கொண்டனர்.

இந்த நேரத்தில் அவனுக்குப் பயங்கர புத்திசாலித்தமான ஒரு யோசனை வந்திருக்கிறது!  ஒரு காப்புறுதி நிறுவனத்தில் 25 இலட்சம் ரூபாய்க்கான ஒரு பாலிசி தனது மனைவியின் பெயரில் எடுத்திருக்கிறான்.  எடுத்த தேதியோ 15 ஜூலை.  அந்தப் பெண்மணி இறந்த தேதியோ  ஆகஸ்ட் 11.  அந்தப் பெண்மணி கொல்லப்பட்டிருக்கிறார் என்கிற சந்தேகம் வரவே கணவனின்  திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன.

இப்போது போலீசார் அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற ரீதியில் தங்களது  பணியை  ஆரம்பித்திருக்கின்றனர். அந்த வேளையில் தான் அந்தப் பெண்மணிக்குப் பாம்பின் விஷத்தை  ஊசியின் மூலம்  ஏற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது.  விஷ ஊசி, துன்புறுத்தல் என்று பல்வேறு வகையில்  அந்தப் பெண்மணி துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார். 

படிப்பினை:   எதற்கோ ஆசைபட்டு  கடைசியில் எதுவுமே ஆகாமல்  தனது குடும்பத்தோடு  கூட்டாக சிறை தான் அடைக்கலம்!  நியாங்கள் தோற்பதில்லை!

Friday 23 August 2024

அதில் எனக்கு வெட்கமில்லை!

                                    நான்  இந்திய  வம்சாவளி தான்!  ஆனால்......!

பொதுவாக டாக்டர் மகாதிர் தன்னை இந்திய வம்சாவளி  என்று எந்தக் காலத்திலும் ஒப்புக்கொண்டதில்லை.

அதேபோல இந்தியர்களும் அவரை இந்திய வம்சாவளி  என்று ஏற்றுக் கொண்டதில்லை.  அவர் இந்தியர்களுக்கு அணுசரனையாக  எந்தக் காலத்திலும் நடந்து கொண்டதுமில்லை. காரணம் இந்தியன்  என்றால் அவர் அரசியல் எடுபடாது என்பது அவருக்குத் தெரியும்.

நமக்குத் தெரிந்து அவர் எல்லா காலங்களிலும் இந்தியர்கள் வேண்டாதவர்கள் என்பது போல தான் நடந்து கொண்டிருக்கிறார். இன்றைய இந்தியர்களின் தாழ்நிலைக்குக் காரணம்  நிச்சயமாக டாக்டர் மகாதிர்  முதன்மையான காரணம்.  இவரோடு சேர்ந்து தான் நமது தலைவர்களும் கபடி ஆடினார்கள் என்பது நமக்குத் தெரிந்த கதை தான்!

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  சொந்த அடையாளத்தை மறைப்பவர்கள் எந்தக் காலத்திலும் தான் சொந்தம் கொண்டாடும் இனத்துக்கும் துரோகம் செய்பவர்களாகத் தான் இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை. 

டாக்டர் மகாதிர் நீண்ட காலம் நாட்டின் பிரதமராக இருந்தவர்.  மலாய்க்காரர்களுக்காக,   பதவிக்கு வருமுன்னர்,  பெரும் போராட்டம் நடத்தியவர்.  எல்லாம் சரிதான்.  ஆனால் மலாய்க்காரர்கள் முன்னேற்றம் அடைந்து விட்டார்களா?  இல்லை என்பது தான் இப்போதுவரை இதற்கான பதில்!  அந்தப் பதிலை நாம் சொல்லவில்லை.  மலாய்க்காரர்களே சொல்லுகிறார்கள் என்பது தான் உண்மை!

வர்த்தகத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை.  ஆனால் பணம் மட்டும் வாரி இறைக்கப்படுகிறது.  எந்தப் புண்ணியமுமில்லை.  ச்லுகைகள் பொதவில்லை என்கிறார்கள்!  கல்வியிலும் சலுகை வேண்டும் என்கிறார்கள்.  அரசாங்க வேலைகளை நிரப்ப முடிந்தால் போதும்.

அவர் காலத்தில் தான் இலஞ்சம் ஊழல் அனைத்தும் கொடிகட்டிப் பறந்தன என்பதை  மறுப்பதற்கில்லை.   நாட்டின் இன்றைய சூழலுக்குக் காரணம் அவர்  ஒருதலைபட்சமாக  எடுத்த முடிவுகள் தான்.   மலாயக்காரர்கள் முன்னேற வேண்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மற்ற இனத்தவரிடமிருந்து பிடிங்கி தான் அவர்களுக்கு  உதவி செய்ய முடிந்தது.

அவர் தன்னை இந்திய வம்சாவளி என்று கூறாமல் இருந்தாலே அதுவே நமக்குப் பெருமை தான். அவர் மருத்துவ படிப்புக்காக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சேரும்போது அவர்  இந்தியர் என்று தான்  அவருடைய அடையாளக்கார்டு கூறுகிறது.   ஒருவேளை அது போலியாகக் கூட இருக்கலாம்!  பதவியில் இருந்தால் அனைத்தையும் மாற்ற முடியுமே!

அவர் யாராக இருந்தால் என்ன? ஆகப்போவது  ஒன்றுமில்லை!

Thursday 22 August 2024

சாதனை இளைஞர்கள்!

      சாதனை: 5 நாட்கள் 96 மணி நேரம் - 21  இந்திய இளைஞர்கள்- 2030 பேர்

காலங்காலமாக நாம் செய்து வந்த தொழில்.  முதலில் அதனை சிகை அலங்காரம்   - London Trained, Hair Stylist -  என்று என்னவோ பெயரில் சீனர்கள் அதனை நவீனப் படுத்தினார்கள்.   இன்று அவர்கள் தான் அதிலும் மாமன்னர்கள்! அதிலும் குறிப்பாக சீனப்பெண்கள்.

நாம் எல்லாத் தொழில்களையும் மற்ற இனத்தவருக்கு விட்டுக் கொடுத்தது போல  இந்தத் தொழிலும் நம்மிடமிருந்து விட்டுப் போய்விட்டது.    இப்போது வங்காளதேசிகள், பாக்கிஸ்தானியர்கள் ஆகியோரும் இந்தத் தொழிலில் அதிக அளவு ஈடுபாடு காட்டுகின்றனர்.  

இப்போது இந்தியர்கள் நடத்தும்  முடிதிருத்தும் தொழிலில்  இந்தியர்கள், இலங்கையர்களே வேலை செய்கிறார்கள்  என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.  இத்தனைக்கும் இதில் பலர் இங்கு வந்த பிறகு தான் தொழிலையே கற்றுக் கொண்டாதாகக் கூறுகின்றனர். அது அவர்களின் திறமை. ஒன்று மட்டும் தெரிகிறது. இந்த நிலையில் இவர்களும் 'வெளிநாட்டுத் தொழிலாளர் தேவை'  என்று கொடி பிடிக்கின்றனர்!  கொரோனா பெருந்தொற்று காலத்தில்  தங்கள் தொழிலாளர்களை  இவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது எங்களுக்கும்  தெரியும்.

இந்தக் காலகட்டத்தில் தான்  Dass Skill Academy யின் தலைவர் திரு தாஸ் அவர்கள்  சுமார் 21 பேரை  சிகை அலங்காரத் தொழிலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  இவர்கள் அனைவருமே நல்ல பயிற்சி பெற்றவர்கள்.  நல்ல நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று நம்பலாம்.  சும்மா வெறுமனே உட்கார்ந்து 'வேலை செய்ய ஆளில்லை'  என்று பேசிக் கொண்டிருப்பதை விட  என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதனைப் பயன்படுத்துங்கள் என்பது தான் நமது ஆலோசனை. இன்னும் நிறைய பயிற்சி பெற்றவர்களை உருவாக்குங்கள். அது தான் என்றென்றும் நீடிக்கும்.

நீங்கள் கொஞ்சம் தயக்கம் காட்டினால்  அதனை வங்காளதேசிகளும், பாக்கிஸ்தானியர்களும்  பயன்படுத்திக்கொள்வார்கள்.  நீங்கள் எல்லா காலத்திலும் 'தொழிலாளர் பற்றாக்குறை' பற்றித்தான் பேச வேண்டி வரும்!  

திரு தாஸ் அவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.  அவர் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும்.  முடிதிருத்தும் தொழிலுக்கு மதிப்பும் மரியாதையும் கொண்டு வரவேண்டும்.  நம் மக்களும்  அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்.

நம் இனத்தவருக்கு நாம் தான் கை கொடுக்க வேண்டும். நமக்கு நாமே தான் வலிமை! 

Wednesday 21 August 2024

சாகசம் சாவில் முடிந்தது!

சாலைகளில்  மோட்டார் சைக்கிள்களில்  சாகசம் செய்யும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறோம்.  அவர்களுக்காக வருந்தவும் செய்கிறோம்.  என்ன செய்வது? அவர்கள் பெற்றோர்கள் சொன்னாலும் கேட்பதில்லை. காவல்துறை சொன்னாலும் கேட்பதில்லை.  பொது மக்கள் சொன்னாலும் கேட்பதில்லை.

அப்படித்தான், யார் சொன்னாலும் கேட்காத இரு இளைஞர்கள்,  சாகசம் செய்து கொண்டிருக்கும் போது  இரு மோட்டார் சைக்கிள்களும்  மோதி  சம்பவ இடத்திலேயே சமாதி ஆகிவிட்டார்கள்.

இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்  காவல்துறையினர் படாதபாடு படுகின்றனர்.  யார் சொன்னாலும் அடங்காதவர்கள் கடைசியில் சாலையிலேயே அடங்கிப்போனார்கள். இந்த நிகழ்வு சாலையில் நடந்தது. ஆனால் இன்னும் எத்தனையோ இளைஞர்கள்  இப்படித்தான் சாலைகளில் கைகால்களை உடைத்து கொண்டு மருத்துவமனைகளில் படுத்துக்கிடக்கிறார்கள்.   அல்லது நிரந்தர ஊனங்களோடு உலவிக் கொண்டிருக்கிறார்கள்.  இதெல்லாம் வேண்டாம் என்று தான்  பெற்றோர்கள் படாதபாடு படுகின்றனர்.

இவர்களின் அட்டகாசத்தை அடக்க காவல்துறை என்னதான் நடவடிக்கை எடுத்தாலும்  இவர்களை அடக்க முடியவில்லை.  இவர்களில் பலருக்கு உரிமம் இல்லை. மோட்டோர் சைக்கிள்களுக்கு சாலைவரிகள் கட்டுவதில்லை.   எவ்வளவு ஆபத்தான முறையில்  பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதுமில்லை.

ஆனாலும் இன்னும் நமக்கு நம்பிக்கை உண்டு.  இவர்கள் திருந்துவார்கள். இளம் வயது என்பதால் வழக்கம் போல பொறுப்புணர்ச்சி என்பது இன்னும் வரவில்லை.  எல்லாகாலங்களிலும்  இந்த ஆட்டத்தைப் போட்டுக் கொண்டிருக்க முடியாது.  நேரம், காலம்  வரும்போது அவர்களுக்கும்  பொறுப்பு வந்துவிடும்.

சாகசம் செய்ய பொது இடங்கள் வேண்டாம் என்பது தான் நமது அறிவுரை.  அரசாங்கமே அதற்கென்று இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.  அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  பொது மக்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பது தான் நாம் சொல்லவருவது.

Tuesday 20 August 2024

அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்!

அனைவருக்கும் சட்டம் என்பது ஒன்று தான். மேலோன் கீழோன் என்பது சட்டம் அல்ல.  அப்படித்தான் நம் நாட்டில் சட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது!

ஆளுக்கு ஒரு சட்டம்.   இனத்தைப் பார்த்து ஒரு சட்டம். இந்த இனத்தானுக்குப் பொருந்தும் சட்டம்   அந்த இனத்தானுக்குப் பொருந்தாது.   பெரிய பதவியில்  உள்ளவனுக்குப் பொருந்தும் சட்டம்  சாதாரண மனிதனுக்கு பொருந்தாது.

எல்லாருக்கும் ஒரே சட்டம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  அது தான் நடைமுறை.   சட்டத்தை யார் மீறினாலும் அவர்கள் மீது சட்டம் பாய வேண்டும்.  நாமோ "நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே" என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்.  நாம் அதைத் தான் ஆதரிக்கிறோம்.

ஆனால் என்ன நடக்கிறது?  சட்டம் எப்போதும் ஒன்றுதான். அது சொல்வதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.  அமலாக்கம் வரும் போதும் சட்டம் மாறவில்லை.  ஆனால் அமலாக்கப்படுத்துவோர் சட்டத்தை மாற்றி விடுகிறார்கள்! அது தவறு என்று தெரிந்தும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றவாறு சட்டம் வளைந்து கொடுக்கிறது!  இது தகாது  என்று யாராலும் சொல்லவும்  முடியவில்லை!

சமீபத்தில்  மாநிலமொன்றின் ஆட்சிக்குழு உறுப்பினரின் கார் நடு ரோட்டில் நினறு கொண்டு மற்ற கார்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.  ஏதோ சிறிது  வாய்த்  தகராறு!  ஆட்சிக்குழு உறுப்பினர் அப்போது இல்லை. ஓட்டுநர் மட்டும் தான்.  அந்த ஓட்டுநருக்கு சாலை விதிகள் தெரியாமல் இருக்க முடியாது.  யாரும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் அவருக்கு!

சட்டப்படி என்ன நடந்திருக்க வேண்டும்? அந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  ஒட்டுநர் மீது கூட அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை!  அப்படியென்றால் நம்மைப் போன்றோர் என்ன நினைப்போம்?  இதுபோன்ற சிறிய பிரச்சனைகளுக்கே இவர்களால் எதுவும்  முடியவில்லையே அப்படியென்றால்   பெரிய பிரச்சனைகளை இவர்களால் எப்படிக் கையாள முடியும்?  

ஊகூம்! ஒன்றும் சரியில்லை.  இன்றைய நிலையில் என்ன குற்றங்கள் நடந்தாலும் பிரதமர் அன்வார் பெயர் தான் கெடுகிறது என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் இதுபோன்ற எது நடந்தாலும் அவர் பெயர் தான் கெடும். வேறு வழியில்லை!

Monday 19 August 2024

அவமானம் சவாலாக மாறியது!


                                             நகைச்சுவை நடிகர்:  முத்துக்காளை

"நான் படிக்காதவன் என்கிற அவமானமே என்னை மீண்டும் படிக்க வைத்தது"  என்கிறார் முத்துக்காளை.

இப்படித்தான் சொல்லுகிறார் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை. பலருக்கு அவரின் பெயரைச் சொன்னால் தெரிய வாய்ப்பில்லை. அவர் வடிவேலுவுடன் நடித்த  சில காட்சிகளை நினைத்துப் பார்த்தால் போதும் உங்களுக்குப் புரிந்துவிடும்.

முத்துக்காளை சினிமாவில் ஸ்டண்ட் நடிகராக ஆக வேண்டும்  என வந்தவர்.  அவர் கராத்தே கலையில் கருப்பு பெல்ட் எடுத்தவர்.  சிலம்பம், ஜிம்னாஸ்டிக் கலைகளையும்  கற்றவர்.

சினிமாவில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை. சுமார் பத்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு  "பொன்மனம்"  படத்தில் நகைச்சுவை சண்டைக் காட்சிகளில் நடித்தார்.  அதன் பின்னரே அவருக்குப் படங்கள் வர ஆரம்பித்தன.

ஆனாலும் தனக்கு ஒரு அறிமுகம் வேண்டுமென்றால் அதற்குக் "கல்வி தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்"   என்கிற புரிதல் வந்தது என்கிறார் முத்துக்காளை.  அதன் பின்னர் தான் கல்வியைத் தேடினார். ஆரம்பத்தில்  திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடங்கியவர்  இப்போது மூன்று துறைகளில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.  எம்.ஏ. தமிழ், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். 

கல்வியினிடையே தனது குடி  பழக்கத்தையும் விட்டொழித்திருக்கிறார். ஆமாம் அதைத்தான் சொல்லுவார்கள் மதுபானப்பிரியனையும்  தமிழ்பிரியனாக மாற்றிவிடும் தமிழ் என்பார்கள்!  அவரும் மாறிவிட்டார். இப்போது அவருக்கு பள்ளி, கல்லூரிகளிலிருந்து அழைப்புகள் வருகின்றனவாம்.  மதுபழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று  பாடம் எடுக்கிறாராம்!

இந்த அத்தனை சாதனைகளும் அவருடைய 59-வது வயதுக்குள் சாதித்திருக்கிறார்  முத்துக்காளை. ஒன்று மட்டும் நிச்சயம். அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் போனாலும்  அவர் கற்ற தமிழ்  அவருக்குக் கல்லூரிகளிலிருந்து வாய்ப்புகளைக் கொண்டு வரும்.

கல்வி கற்றவனுக்குச் செல்கிற இடமெல்லாம் சிறப்பு!

Sunday 18 August 2024

சமுதாய மாற்றம்!


 கல்வியில் நாம்  பின் தங்கியிருக்கிறோம்  என்பது ஒன்றும் அதிசயமல்ல.

அதாவது மற்ற  இனத்தவரோடு ஒப்பிடும் போது  கல்வியில் நமது தரம் தாழ்ந்து தான் இருக்கிறது.  மலாய் சமூகம் அரசாங்கம் கொடுக்கும் அத்தனைக் கல்வி வாய்ப்புகளையும்  பயன்படுத்திக் கொள்கின்றனர்.  சீன சமூகம் கல்வியில் உயர்ந்து நிற்கின்றனர்.  அவர்களை நம்பித்தான் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தில் நம்மிடையே பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும் கல்வியில் நாம் பின் தங்கவேண்டிய  நியாயமில்லை.   வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. அரசாங்க வாய்ப்புகள் நமக்கும்  கிடைக்கும் போது  அதனைப் பயன்படுத்திக் கொள்வதிலும்  நாம் பின் தங்கியிருக்கிறோம் என்பது தான் நமது வருத்தம்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில்  கொஞ்சம் முனைப்புக்  காட்டினால்  எல்லாமே சரியாகிவிடும்.  அனைத்தும் பெற்றோர்களின் கையில்  தான்.  வேறு யாரையும் குற்றம் சொல்வதில் பொருளில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை எடுக்கவில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும்?  அரசியல்வாதி என்ன செய்வான்? அவன் வீட்டுப் பிள்ளைகளைத்தான் அவன் பார்ப்பான். உங்கள் வீட்டுப் பிள்ளைகளை நீங்கள் தான் பார்க்க வேண்டும்.

வருங்காலங்களில் நமது சமுதாயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்  என்று நினைத்தால் நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். கல்வியின் மூலம் தான் அந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். கல்வி கற்றவருக்கு அது புரிகிறது.  அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் வளர்கிறார்கள். பதவிகளைப் பிடிக்கிறார்கள்.  அவர்கள் முன்னேற்றம் தடைபட வழியில்லை.  அவர்களைப் போல நம் வீட்டுப் பிள்ளைகளும்  சரிசமமாக வரமுடியும். 

நம்முடைய பிரச்சனை எல்லாம் நாம் குடிகாரர்கள் என்றால் அதைவிட்டு வெளியே வருவதில்லை.  பரவாயில்லை.  நம் பிள்ளைகளை நன்றாகப் படிக்க ஊக்குவிப்புத் தரலாமே?  எனக்குத் தெரிந்த நபர் ஒருவரை நான் சரியான அடியாள் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் அவர் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் பட்டதாரிகள்!  அவரது வேலை எதுவாக இருக்கட்டும், அவரது பிள்ளைகளுக்குச்  சரியான பாதையைக் காட்டிவிட்டாரே.  அதுதான் நமக்குத் தேவை. அப்பன் எப்படி இருந்தால் என்ன? பிள்ளைகள்க் கல்வியின் மூலம் உயர்த்தினால் போதும்.

நண்பர்களே! சமுதாய மாற்றம் நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. நாமும் நமது பங்கை ஆற்ற வேண்டும்.  வழி தெரியாதவர்களுக்கு  வழி காட்ட வேண்டும்.  யார் மீதும் பொறாமை வேண்டாம்.

கல்வியில் மாற்றம், சமுதாயத்தில் மாற்றம் எல்லாமே நம் கையில் தான். வேறு யார் கையிலும் இல்லை. 

Saturday 17 August 2024

கல்வி இல்லாதவன் நிலை!

                                                  கல்வி கற்காதவன் நிலை!
 பெற்றோர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  பிள்ளைகளின் கல்வியில் தடையாக இருப்பது என்பது உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குற்றச் செயல்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை மறவாதீர்கள்.

நல்ல கல்வி என்பது என்ன? இன்றைய மலேசிய சூழலில் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்று பட்டதாரியாக இருந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என் நம்பலாம்.

நாட்டில் அரசாங்கம் பெரும்பாலும் இலவச கல்வியைக்  கொடுக்கும் போது  நாம் ஏன் அதனை வேண்டாம் என்று தவிர்க்க வேண்டும். கல்லூரிகள் எல்லாம் தூரமாக இருக்கின்றன, அருகிலேயே இருந்தால் எங்கள் பார்வையிலேயே பிள்ளைகள் இருப்பார்கள் என்று நினைக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் உங்கள் பார்வையில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?

இடைநிலைக்கல்வியை முடிக்கும்வரை பிள்ளைகள் உங்களோடு தானே இருக்கிறார்கள்?  உங்கள் சொற்படி தானே நடந்து கொள்கிறார்கள்? நீங்கள் சரியானபடி தானே அவர்களை வளர்த்திருக்கிறீர்கள். இனி அடுத்த கட்டமாக அவர்களுக்கு என்ன தேவை?   அவர்கள் வளர வேண்டும்.  வெளி உலகம் தெரிந்தவர்களாகவும், புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.  அவர்கள் வெளியூர்களுக்குப் போய் படிப்பது என்பது புதிய அனுபவம்.  புதிய மனிதர்கள். புதிய சூழல்.  தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ள,  திருத்திக்கொள்ள, புரிந்துகொள்ள, உலகை அறிந்துகொள்ள  பலவேறு அனுபவங்களைப் பெற  இந்த மாற்றம் மாணவர்களுக்குத் தேவை என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  காரணம் அடுத்த கட்டம் அவர்கள் வாழ்க்கையை சொந்தமாகவே  எதிர்நோக்கப் போகிறார்கள்.  அதற்கான முன்னெடுப்புத் தான்  இந்த வெளியூர் மாற்றம்.

வெளியே எங்கேயும் அனுப்ப முடியாது, படித்தது போதும், இனி சம்பாதிக்கட்டும் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  உள்ளூரில் நிறைய குடிகாரர்கள் இருக்கிறார்கள்.  குறைவான கல்வி, குறைபாடு உள்ளவர்களிடம் தான் சேரச் சொல்லும்.  குற்றவாளிகளுடன் தான் கூட்டுச் சேரும்.  இன்று சிறைச்சாலைகளில்  நாம் தானே சிறைகளை அடைத்துக் கொண்டிருக்கிறோம்! அடிபிடி சண்டை என்றால் நாம் தான் முன்னணியில் நிற்கிறோம்.  இவர்களின் பின்னணியைப் பாருங்கள்.  அவர்கள் என்ன பட்டதாரிகளா?  பட்டதாரிகளா நடுரோட்டில் சண்டை  போடுகிறார்கள்?

பெற்றோர்களே! உங்களின் பிள்ளைகளின் கல்வியில் தடைகளாக இருக்காதீர்கள்.  அவர்கள் படிக்கவில்லை என்றால், முறையான மேற்கல்வி பெறவில்லையென்றால்,  அவர்களின் வருங்காலத்தையும் நீங்கள் தான் சுமக்க வேண்டும்.  குடிகாரனை சிறை எத்தனை நாளுக்குத்தான் சுமக்கும்?

Friday 16 August 2024

எதிர்காலம் முக்கியம்!

கல்வி கற்றவர்க்கே முதன்மை இடம்.  பிச்சை புகினும் கற்கை நன்றே  என்று  யாரும் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. எல்லாம் அனுபவ மொழிகள். நீ பிச்சை எடுப்பவனாக இருந்தாலும் உன் பிள்ளையைப் படிக்க வை என்பதும் அதன் பொருள்.  உன் நிலைமை உன் பிள்ளைக்கு வரவேண்டாம் என்று தானே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? அதனை ஏன் நீ மறுக்கிறாய்?

இந்தியர்களில்,  தமிழர்கள் தான் பிள்ளைகளின் கல்வியில் அலட்சியம் காட்டுபவர்களாக இருக்கிறோம்.  கல்வியை வைத்தே தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் நமது சக மலையாளிகள், பஞ்சாபியர்.  இவர்களே நமக்குப் பாடமாக இருக்கின்றனர்.   பஞ்சாபிய சமூகத்தில் தாழ்ந்த  நிலையில்  யாரையேனும் நாம் பார்த்திருக்கிறோமா?  அனைவருமே பட்டம், பதவிகளில் உயர்ந்துதான் நிற்கின்றனர். கல்வி மட்டும் தான் இந்த அளவுக்கு அவர்களை உயர்த்திருக்கிறது.  ஏன் நமக்கு மட்டும் கல்வி உதவாதா?

இந்த நவீன காலத்தில் மாணவர்கள் வெளியூர் போய் படிப்பது என்பது ஒன்றும்  அதிசயமல்ல. வெளியூர் என்றால் ஏதோ ஆயிரக்கணக்கான மைல் தொலைவு என்று  அதிர்ச்சியடைய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே நாம் தொலைப்பேசியில்  தொடர்பில் உள்ள இடங்கள் தான்.  ஏன் நேரடியாகவே  பேசுகின்ற அளவுக்கு தொழில்நுட்பம்  வளர்ந்திருக்கிறது.  தொலைவு என்பது இப்போதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல.

பெற்றோர்களே! தூரம் என்று சொல்லி பிள்ளைகளின் கல்வியில் கை வைக்காதீர்கள். வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க அனுமதிக்காதீர்கள்.  கல்வி கற்றால் 10,000 - 20,000 வெள்ளி என்று சம்பளம் வாங்குவான்.  படிக்கவில்லை என்றால் ஆயுள் பூராவும் 1,000 - 2,000 வெள்ளி என்று தான் சம்பளம் வாங்க முடியும்.  உங்களைப் போலவே இன்னொரு வறுமையான குடும்பத்தை உருவாக்கிவிட்டுப் போகாதீர்கள்.

ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் ஓரிராண்டுகள  உயர்கல்வி  படித்தால் போதும்  அடுத்த நாற்பது ஆண்டுகள் அவன் செழிப்பான வாழ்க்கை வாழ முடியும்.  இப்போது உங்களின் சுயநலத்தால்  அவனுக்கு அந்தக் கல்வியை மறுத்தால் அவனது வாழ்க்கை படுபாதாளத்திற்குப் போகும். குற்றங்களைத் தான் பெருக வைக்கும்.

பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம்/ அதற்குப் பட்டப்படிப்பு முக்கியம். எத்தனை மைல் தூரமாக இருந்தாலும் அவர்கள் படிப்பு  முக்கியம்.

Thursday 15 August 2024

போலி பூண்டுகளா?

 

பூண்டுகளைக் கூட போலியாகத்  தயாரிக்க முடியுமா?  முடியும் என்று மார்தட்டியிருக்கிறார்கள், இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில்,  அகோலா மாவட்டத்தில்  உள்ள  சில வியாபாரிகள்!  

  விஞ்ஞானிகள்  ராக்கெட்டுகளை சந்திரமண்டலத்திற்கு அனுப்பும் போது  வியாபாரிகள் பூண்டுகளில் சிமின்ட் கலந்து  'சிமின்ட் பூண்டுகளை'  மக்களிடம் அனுப்பவதில் என்ன க்ஷ்டம்?  

தெரு ஓரங்களில் உள்ள கடைகளில்  இந்த சிமிண்ட் பூண்டுகளை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  இவர்களுடைய வாடிக்கையாளர்கள்  இதனைக் கண்டுபிடிக்க இயலாது என்கிற துணிச்சலில் தான் இந்த வியாபாரிகள் முதலில் தெரு ஓரக்கடைகளுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் எத்தனை நாள்களாக இந்த விற்பனை நடந்து வருகிறது   என்பது தெரியவில்லை.   ஆனாலும் இந்த வியாபாரம் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது.  உண்மையான பூண்டுகளுக்கும் போலி பூண்டுகளுக்கும்  நிச்சயமாக வித்தியாசம் தெரியாமல் போகாது. இவர்களின் தொழில்நுட்பம் தோல்வியில்  முடிந்து விட்டது என்பதில் நமக்கும் மகிழ்ச்சி தான்.

அதுவே வாடிக்கையாளர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களைப் பயமுறுத்தி செய்தி வெளியாகாமல் பார்த்துக் கொள்வார்கள்.  ஆனால் என்ன செய்ய?  வாடிக்கையாளர் முன்னாள் போலீஸ்காரரின் மனைவி  என்பதால் செய்தி  தெருவுக்கு வந்துவிட்டது!

எது எப்படியிருந்தாலும் இது போன்ற போலி தயாரிப்பாளர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்  என்பது மட்டும் நிச்சயம். பூண்டு என்பது மிகவும் அத்தியாவசியமான அன்றாட உணவு. உணவில் சிமிண்ட் கலப்பது என்பது மிகப்பெரிய குற்றம்.  இது போன்ற குற்றம் செய்பவர்கள் ஏற்கனவே பல குற்றங்கள் செய்திருப்பர்.  குற்றம் செய்பவர்கள் தான் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

என்னன்னவோ ஏமாற்று வேலைகளையெல்லாம்  பார்த்துவிட்டோம். போலிகளைப் பார்த்துவிட்டோம்.   பூண்டு வந்துவிட்டது. ஆனால் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் வரவில்லை. வெங்காயத்திற்கும் இப்படி ஒரு கஷ்ட காலம் வருமோ என்று தெரியவில்லை.  இறைவா!  நீர் தான் துணை!

Wednesday 14 August 2024

கேலி செய்ய வேண்டாம்!


 ரோட்டோரங்களில் நடக்கும் கடைகள் நம் நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல.

இன்றும் நாடெங்கும் அந்தக் கடைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  இன்றும்  சீனர்கள், மலாயக்காரரகள்  எதற்கும் கவலைப்படாமல்  ரோட்டு ஓரங்களில் தொழில் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.   அது போன்ற சிறு வியாபாரங்கள்  எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்போது தான் நமது பெண்கள் தொழில் செய்யும் மனநிலைக்கு வந்திருக்கின்றனர்.  தொழில் செய்தால் தான் பணத்தைப் பார்க்க முடியும் என்கிற தெளிவு இப்போது தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  இது ஒரு நல்ல  மன மாற்றம்.

காலங்காலமாக நமது பெண்கள், கணவர்களோடு சேர்ந்து வேலை செய்வது ஒன்றும் புதிதல்ல.  வேலை செய்வதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.  ஆனால் தொழிற்துறை என்பது, அது  என்ன தான் சிறு சிறு வியாபாரமாக இருந்தாலும் கூட அந்தத் துறையில்  நாம் ஆர்வம்காட்டவில்லை.   ஆண்களும் சரி பெண்களும் சரி நமது ஈடுபாடு அதில் இல்லாமலே போயிற்று.  அதனால் தான் இன்று பலவகைகளில் பொருளாதார ரீதியில்  நாம் மிக மிக தாழ்ந்து போயிருக்கிறோம்.

இப்போது தான் நமது பெண்களும் சரி, ஏன் ஆண்களும்  கூட,  வியாபாரங்களில் கொஞ்சம்   கொஞ்சமாக காலெடுத்து  வைத்து வருகிறோம்.  இப்போது புதிதாக சில மாற்றங்களையும் கண்டு வருகிறோம்.  ஆண்கள் வேலை செய்வதும் பெண்கள் சிறு சிறு தொழில்கள் செய்வதும்  ஒரு நல்ல மாற்றம்.

ஆனால் மற்ற இன ஆண்களிடம் இல்லாத சில விஷயங்கள் நமது இன ஆண்களிடம் இருப்பதைப் பார்க்கின்றோம்.  அந்தப் பெண்களைக் கேலி பேசுவது, வம்புக்கு இழுப்பது.  ஆபாசமாக நடந்து கொள்வது இதெல்லாம் ஓரளவு  நடந்து கொண்டுதான் இருக்கிறது.   அவர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை.  இதற்கு முன அவர்கள்  நமது பெண்கள்   வியாபாரம் செய்வதைப் பார்த்ததில்லை.  அவர்கள் வீட்டு அம்மாவோ, அக்காவோ, தங்கையோ, அண்ணியோ - இவர்கள் யாவருமே செய்யாத ஒன்றை  இந்த நவீனப்பெண்கள் செய்வதைப் பார்க்கும் போது அது அவர்களின் கண்களை உறுத்துகிறது.  இதெல்லாம்  அவ்வப்போது  ஏற்படுகின்ற  சில சில்லறைத்தனங்கள்!   எல்லாமே மாறும். இவர்களும் மாறுவார்கள்.

ஆனால் இளைஞர்களே!  பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்  என்பது தான்  நமது  ஆலோசனை!  நம் வீட்டுப் பெண்களுக்கு நாம் தான் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அது நமது பொறுப்பு.

Tuesday 13 August 2024

உணவகங்கள் தரம் தாழ்கின்றன!


இப்போதெல்லாம் உணவகங்களில்  என்னதான் நடக்கிறது  என்பதே புரிவதில்லை.

ஒன்று விலை.  உணவுகள் இன்ன விலைக்குத் தான் விற்கின்றன என்கிற விபரமே நமக்குத் தெரிவதில்லை.  காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை!  நேற்று ஒரு விலை, இன்று ஒரு விலை, நாளை ஒரு விலை!

காய்கறிகள் தான் இப்படி என்றால் உணவகங்களுமா இப்படிச்  செய்வது? விலையை ஏற்றிவிட்டீர்கள். நாங்களும் ஏற்றுக் கொண்டோம்.  இது ஒன்றும்  புதிது அல்லவே!  பிரச்சனை என்னவென்றால்  காலை  மாலை, நேற்று இன்று  என்றா விலைகளை ஏற்றுவது?

இன்னும் சில உணவகங்களில் ஆளைப் பார்க்கிறார்கள்.   பழக்கப்பட்டாவர்கள் என்றால்  ஒரு விலை.  புதியவர்கள் என்றால்  இனிமேல் வராதவாறு  ஒரு விலையைப் போட்டு அறுத்துவிடுகிறார்கள்!

சரி, விலையில் தான் இப்படி எல்லாம் குளறுபடிகள் செய்கிறார்கள் என்றால்  தரத்திலாவது  ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா? ஒரு மண்ணும் இல்லை!  இருப்பதையும் சுருக்கி விடுகிறார்கள்! இட்லியின் நிலையைப் பார்க்கிறீர்கள் தானே! பூரி  கேட்டால் கொஞ்சம் உருளைகிழங்கைப் போட்டு நிறைய சாம்பாரை ஊற்றிக் கொண்டுவருகிறார்கள்!  கடைசியில் பார்த்தால்  எதனையுமே சாப்பிடமுடியவில்லை! 

இப்போது இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்?  தரம் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், 'இது நல்ல நேரம்! ஒரு அடி அடிக்கலாம்!' என்று காசே குறியாக இருக்கிறார்கள்!  நீண்டகால வியாபாரம், நிரந்தர வியாபாரம் என்று நினைப்பவர்கள்  தரத்தில் கைவைப்பதில்லை.  விலையைக் கூட்டினாலும் நாளுக்கு ஒரு விலை என்கிற நிலையில்லை.

உணவகங்கள் நிலைத்து நிற்குமா என்று கேட்டால் அதன் தரம் தான் முக்கியம் என்பது வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்.   தரம் இல்லாத உணவகங்கள் நிலையே மாறிவிடும்.  மக்களின் ஆதரவை இழந்து விடுவார்கள்.   அவ்வளவு தான் நாம் சொல்ல முடியும்.  மற்றபடி இந்தியர்களின் வியாபாரத்தை மக்கள் கெடுக்கப் போவதில்லை. அவர்களே கெடுத்துக் கொள்வார்கள்!

Monday 12 August 2024

வன்முறை வேண்டாமே!

 


பொதுவாகவே வன்முறை என்பது கண்டிக்கதக்கது தான்.  அதுவும் பெரும்பான்மை சமூகம் சிறுபன்மையினரைத் தாக்குவதை  சகித்துக் கொள்ள முடியாது.  ஆனால் அது தான் பெரும்பாலான நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

எந்த சமயமும் அதற்கு விதிவிலக்கல்ல.  இன்று வங்காளதேசத்தில்  நடப்பது: வங்காளதேச இஸ்லாமியர்கள்  சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர்  ஆகியோரைத் தாக்குவது மட்டும் அல்ல அவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் தகர்த்தெறிகின்றனர்.

வன்முறை என்று வந்துவிட்டால் உயிர்ச்சேதம்  ஏற்படத்தான் செய்யும். அதிலும் குறிப்பாக  பெண்கள், குழந்தைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.  எல்லா நாடுகளிலும் அப்படித்தான் வன்முறையாளர்கள்  நடந்து கொள்கின்றனர்.   எல்லாமே எல்லை மீறும்போது எந்த உபதேசமும்  காதில் விழாது!

எல்லா மதத்தினரும், வன்முறையாளர்களாக மாறும் போது,  மதம் பற்றியான உணர்வே இருப்பதில்லை!   யார் உயர்ந்தவன், யார் தாழ்ந்தவன்  என்கிற பாகுபாடு இல்லை.  நான் உயர்ந்தவன் நீ  தாழ்ந்ததவன், என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது  என்று பேசுபவன் எல்லாம்  வன்முறை என்று வரும் போது  மிக மிகக் கேடுகெட்டவனாக  மாறிவிடுகிறான்!

மதங்கள் எல்லாம் நல்லவைகளைத்தான்  போதிக்கின்றன.  ஆனால் மனிதனால்  நல்லவைகளைத்தான்  பின்பற்ற  முடிவதில்லை.  அது எந்த மதமாக இருந்தால் என்ன?  அதைப் பின்பற்றுபவன்  மாறிவிடுகிறானா? நல்லவனாகவா?  இல்லை! இல்லை!  கெட்டவனாகத்தான் மாறுகிறான்!

மதங்கள்  மனிதனை மாற்றும் என்கிற நம்பிக்கையே நமக்கு இல்லை.  இது நாள்வரை இல்லை என்கிற போது இனி மேலும்  மாற்றும்  என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  அடிப்படையில் மனிதன்  ஒரு மனித மிருகம். அவன் மிருகமாகத்தான் இருப்பான்.

வங்காளதேசத்தில் நடப்பது சரியில்லை என்றால் மற்ற நாடுகளில் நடப்பது சரியா என்கிற கேள்வி எழத்தான் செய்யும். அதற்கு நம்மிடம் பதில் இல்லை.  மதங்களால் மனிதர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது மட்டும் உண்மை!

Sunday 11 August 2024

சண்டைக்கோழியாக இருக்காதீர்கள்!

வம்பு சண்டைகளா? வாய்ச் சண்டைகளா?  அதனை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்.  வீதிக்குக் கொண்டுவந்து நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலையை உருவாக்காதீர்கள்.  

இதில் கொடுமை என்னவென்றால் வீட்டில் பிள்ளைகளையும் நம்மை மாதிரியே வளர்க்கிறோம்   சில குழந்தைகள்  பொது இடங்களில் பண்ணுகின்ற அட்டகாசங்களைப் பார்த்தாலே போதும் நமது யோக்கியதைத்  தெரிந்துவிடும்.  அதுவும் இன்றைய இளம் பெற்றோர்களின்  வளர்ப்பு முறையைப் பார்க்கும் போது  என்ன தான் சொல்லுவது?   வீட்டில் பெரியவர்கள்  தேவையில்லை.   அதனால் Google தான் இவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சூழல்!

சண்டை என்பதை  முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.  ஆனால் வீட்டுக்கு வெளியே என்றால் அது நமது இனம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  நாலு பேர் நம்மைப் பார்த்து சிரிக்கும்படியாக நடந்து கொள்ளக்கூடாது.

சில சமயங்களில் படித்தவர்கள் போலத் தெரிகிறார்கள்.  ஆனால் அப்படியெல்லாம் யாரையும் மதிப்பிட முடியாது.  கொஞ்சம் கூட பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியே இல்லாமல்  நடந்து கொள்கிறார்கள். 

சரி இப்படியெல்லாம் செய்கிறோமே  அதன் விளைவுகள் என்ன என்று யோசித்ததுண்டா?  நாம் மலேசியர்கள் என்பது பெருமை தான்.  ஆனால் நம்மால் வாடகைக்கு  ஒரு  வீட்டை எடுக்க முடிகிறதா?  இந்தியன் என்றால் வேண்டாம் என்கிறார்களே! அது என்ன பெருமையா?

பெண்மணி ஒருவர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.  தனியார் கல்லூரிகளில் இந்திய மாணவர்களே வேண்டாம் என்கிறார்களாம்.  பார்த்தீர்களா,  நாம் பிள்ளைகளை வளர்க்கும் இலட்சணம்?  போகிற போக்கைப் பார்த்தால்  ம.இ.கா.வின்  ஏம்ஸ்ட் கல்லூரி  தான் இவர்களுக்கு அடைக்கலம் தர வேண்டும் போல் தோன்றுகிறது!

நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள் என்பது தான்.  பெரியவர்களைப் பார்த்துத்தான்  குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களை எப்படி நாம் குற்றம் சொல்ல முடியும்?

சண்டை வேண்டாம். சமாதானமாகவே இருங்கள்.

Saturday 10 August 2024

இதுவும் ஓர் எச்சரிக்கை தான்!

எல்லாமே  நமக்கு ஓர் அனுபவம் தான். சில சமயங்களில் வீடுகளில் நாம் பார்க்கின்றோம். அதனை நாம் பொருட்படுத்துவது கூட இல்லை.  அவ்வளவு அலட்சியம்.

குழந்தைகளிடம்  டார்ச்லைட் பேட்டரிகளைக் கைகளில்  விளையாடக் கொடுப்பது.  அவர்கள் அதனை வாயில் வைத்துக்  கடித்து விளையாடுவது.  அல்லது கைப்பேசிகளைக் கொடுப்பது  அவர்கள் அதனை வாயில் வைப்பது, கடிப்பது, சப்புவது, சுவைப்பது இப்படி என்னன்னவோ அவர்கள் செய்வதைப் பார்த்து   மகிழ்வது தான் நமது வேலை!

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி.  அது நமக்கு ஒரு நல்ல பாடம்.  ஆனால் ஒரு சிறிய மாற்றம்.  குழந்தைகளுக்குப் பதிலாக  அவர்களின் செல்லப்பிராணிகளான  நாய்கள்  பேட்டரியைக் கடித்து விளையாடியிருக்கின்றன.  அப்போது  அந்த பேட்டரி  வெடித்து சிதறி அவர்களின் வீட்டையே தீப்பிடிக்க வைத்துவிட்டது.  பின்னர்  தீயணைப்பு வீரர்கள் வந்த  தீயை அணைத்தனர்.

அதனை நாம் நாய்கள் தானே என்று எண்ணக்கூடாது. அந்த இடத்தில் சிறு வயது குழந்தைகளாக  இருந்தால்  அது உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கும். நல்ல வேளை அவர்களின் செல்லப் பிராணிகளுக்குக்  கூட எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.  அதுவரை  அது  அவர்களின் நல்ல காலம்.  ஆனால் எப்போதுமே அப்படி ஒரு நல்ல காலம்   வரும் என்று எதிர்பார்க்க முடியாது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு  போயிற்று  என்று மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இதெல்லாம் நமது தினசரி வாழ்வில்  நமக்குக் கிடைக்கும் பாடங்கள். இது எங்கோ அமெரிக்காவில் நடந்தது தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது என்பது தான் நமக்கான பாடம்.   நமக்கு அடுத்த வீட்டில் நடக்கலாம், ஏன், நமது வீட்டின் அடுத்த  அறையில் நடக்கலாம், எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்: இது போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களைப் பிள்ளைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்பது தான்.  முடிந்தவரை தேவையற்ற பொருட்களை அப்போதே குப்பையில்  வீசி விடுங்கள்.  ஆபத்து விளைவிக்கும் பொருள் என்று தெரிந்த பின்னரும் அதன் மூலம் ஆபத்தை நாம் ஏன்  வரவழைத்துக்  கொள்ள வேண்டும்?

இதுவும் நமக்கு ஒரு பாடம் தான்!

Friday 9 August 2024

அமைதி நிலவ வேண்டும்!


 வங்காள தேசத்தில் அது முதலில் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு என்கிற முறையில் தான் கலவரம் ஏற்பட்டது.

அதனால் ஏற்பட்ட பயன் அந்நாட்டின் பிரதமர் நாட்டைவிட்டு வெளியேறினார். இந்தியாவில் அடைக்கலம்  புகுந்தார். இப்போது பிரதமராக நோபல் பரிசு பெற்றவர் ஒருவர் ஆட்சியில் அமர்ந்துள்ளார். வாழ்த்துகிறோம்.

ஆக, கலவரத்தில் ஈடுபட்டவர்களில்  நோக்கம் நிறைவேறினாலும்  கலவரம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.  இனி என்ன பிரச்சனை என்பதும் தெளிவில்லை.

இப்போது கலவரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்  தங்களது நோக்கத்தை மாற்றிகொண்டனரோ என்று நினைக்க வேண்டியுள்ளது.  என்ன தான் அவர்களுக்குத் தேவை என்பதும் புரியவில்லை. இப்போது அவர்களின் பார்வை அங்கு வாழும் சிறுபான்மையினர் மீதும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது.  மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

பொதுவாக பல நாடுகளிலும் நாம் பார்க்கும் ஒரே விஷயம் சிறுபான்மையினர்  தாக்கப்படுவது தான். அவர்களுடைய  வழிபாட்டுத்தலங்கள்  தாக்கப்படுவது தான்.  இது தான் எல்லா நாடுகளிலும் நடப்பது.  

வங்காளதேசமும் விதிவிலக்கல்ல.  இந்துக்களின் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்.  ஏன் இந்துக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான  தாக்குதல்?  யாருக்கும் இது புரியவில்லை! வங்காளதேசிகள் இலட்சக்கணக்கில் இந்தியாவில் வேலை செய்கின்றன. நேரடியாக முடியாவிட்டாலும் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு தான் வேலை செய்கின்றனர்.  அந்த நன்றியைக் கூட அவர்கள்  மறந்துவிட்டனர்.

மலேசியா வழக்கம் போல இதனைக் கண்டிக்கவில்லை. அரசியல் காரணங்கள் இருக்கலாம். ஒரு நாட்டைக் கண்டிப்பதும் ஒரு நாட்டைக் கண்டிக்காமல் இருப்பதும்  வழக்கமான ஒன்று தான்.  மனிதாபிமானம் என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது! அவ்வளவு தான்!

வங்காளதேசத்தில் அமைதி நிலவ பிரார்த்திப்போம்.

Thursday 8 August 2024

இப்படியும் மனிதர்கள்!

                                                  நன்றி: வணக்கம் மலேசியா   முப்தி, தெரங்கானு

பொதுவாக முப்தி என்றாலே அவர்கள் மீது நமக்கு ஓர் மரியாதை உண்டு. காரணம் அவர்களைக் கடவுளின் ஊழியர்கள்  என்பது  நமது மரபு.  கடவுளின் ஊழியர்கள் என்பது அவர்கள் மட்டுமல்ல மற்ற இந்து அர்ச்சகர்கள், தேவாலய பாதிரியார்கள்,  புத்த பிக்குகள் -  இவர்கள் அனைவருமே  காடவுளின் ஊழியர்கள் தாம்.

இவர்கள் அனவருக்குமே  ஒரு ஒற்றுமை உண்டு.  இவர்கள் அனைவருமே தங்கள் சமயத்தைப் பற்றி அறிந்தவர்கள்  என்பதில் ஐயமில்லை.  தங்கள் சமயத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் பேசலாம். அந்த சமய அறிவு அவர்களுக்கு உண்டு.  கடவுளின் ஊழியர்கள் என்று சொன்னாலே படித்தவர்கள்,  பண்பு உள்ளவர்கள், அன்பு உள்ளவர்கள், அரவணைக்கும் தன்மையுடையவர்கள் - இப்படியே அவர்களைப்பற்றி நாம் பேசலாம்.

ஆனால் சமயம் என்று வரும் போது  மற்ற சமயங்களைப் பற்றி வாய் திறவாமல் இருப்பதே  அவர்களுக்கு நல்லது.  அந்த எல்லையை மீறிவிட்டார்  திரங்கானு முப்தி அவர்கள்.  அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலையில் இருப்பதால் அவர் பேசுகிறார். மற்றவர்களுக்கு அந்த வாய்பில்லை!  நாம், நமது கருத்தைத் தெரிவிக்கலாம்.

முப்தி அவர்கள் பேசும் போது "இஸ்லாத்தைப் பரப்ப  முஸ்லிம்கள் ஆலயத்திற்குள் நுழையலாம்"  என்கிற கருத்து  வேற்று சமயத்தினரிடையே  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இது போன்ற கருத்துகள் முப்தி போன்றவர்களிடமிருந்து  யாரும் எதிர்பார்க்கவில்லை.

நுழையலாம் என்று சொல்லிவிட்டார். எப்போது?  ஆலயங்களில் பூஜைகள் நடைபெறும் போது தான் நுழைய முடியும். அப்போது பெருங்கூட்டம் கூடியிருக்கும் நேரம்.  இவர் தனியாகவா போவார்? நிச்சயம் ஒரு பெரிய போலீஸ் படையுடன் தான் போக முடியும்.   பக்தர்கள் கூடியிருக்கும் அந்த நேரத்தில் நீங்கள் போய் எதனையும் பரப்ப முடியாது என்பது உங்களுக்கே தெரியும்.  பிச்சை கேட்டால் பிச்சை போடுவார்கள்! அவ்வளவு தான்!

இதனால் யாருக்கு என்ன பயன் என்பதை முப்தி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  கோவில்களில் போய் இஸ்லாத்தைப் பரப்புவது, பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளைக் கட்டாய மதமாற்றம் செய்வது  - இவைகளெல்லாம் நிச்சயமாக  இஸ்லாத்திற்குப் பெருமை சேர்க்காது.

முப்தி அவர்கள் மற்ற மதத்தினரின் உணர்வுகளைப் புரிந்து  கொண்டு பேச  வேண்டும் என்பதே நமது அறிவுரை.

Wednesday 7 August 2024

அமைச்சரவையில் மாற்றமில்லை!


 அமைச்சரவையில் மாற்றம் வரும் என்பதாக வெளியான ஆருடங்களை மறுத்திருக்கிறார் பிரதமர்.

அப்படியே மாற்றம் என்றாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வேண்டுமானால் சாத்தியம் உண்டு  என்று அவர் கூறியிருக்கிறார். இது போன்ற செய்திகள் புரளியாக இருக்கலாம்.  அல்லது உண்மையாக நடக்கக் கூடிய சாத்தியமும் உண்டு.

பொதுவாக இது போன்ற செய்திகள் வருவதும் 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை'  என்று மறுப்புதும்  எல்லாகாலத்திலும் உண்டு.  புதிது அல்ல.  ஆனால் வியப்புக்குறியது  என்னவென்றால்  இது போன்ற புரளிகளை  முதலில் கிளப்பிவிட்டு பின்னர்  அதனை  உண்மையாக்குவது  அரசியலில் இதெல்லாம சாதாரணம்  தான்.  அதுவும் அமைச்சரவை மாற்றம் என்பது முதலில் புரளியாகத்தான் வெளியாகும்.  அதன் பின்னர் தான் அது உண்மையாகும்.  இப்படித்தான் அது நடக்கும் என்பதை இதற்கு முன்னர் நாம்  பார்த்திருக்கிறோம்.

சரி,  அப்படியே நடக்கும் என்றே வைத்துக் கொள்வோம்.  அதனால் என்ன நாட்டில் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது?   ஒன்றுமில்லை என்பதைத் தவிர  சொல்ல என்ன இருக்கிறது?  இப்போது என்ன நடக்கிறதோ அதிலே எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.  அப்படியே மாற்றுவதால் நாடு தலைகீழாக மாறப்போகிறதா?  ஒன்றுமில்லை!  ஏதோ ஒரு சிலரைத் திருப்திபடுத்துவதைத் தவிர வேறொன்றொமில்லை.

மாற்றம் என்றால் நாட்டில் விலைவாசிகள் குறைய வேண்டும்.  வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.  குறிப்பாக இந்தியர்களின் வேலை வாய்ப்புகள் திருப்திகரமாக இல்லை.  இந்தியர்களில் பலர் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுப்பதாகவே தோன்றுகிறது.  அப்படித்தான் சொல்லப்படுகிறது.

ஆக, அமைச்சரவை மாற்றம் என்பது பொதுமக்களைப் பொறுத்தவரை  தேவையற்ற ஒன்று.  ஒருவேளை அரசியல்வாதிகளுக்குத் தேவையான ஒன்றாக இருக்கலாம்.  அதுபற்றி நமக்குக் கவலையில்லை.   மக்களுக்குத் தினசரி வாழ்க்கைக்கு என்ன தேவை என்பது தான் முக்கியம்.

நமக்கு அப்படி ஒரு அமைச்சரவை மாற்றம் தேவையில்லை. அது எந்த வகையிலும் நமக்குச் சோறு போடப்போவதில்லை.   மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க என்ன தேவையோ  அந்த மாற்றமே நமக்குத் தேவை.

அமைச்சரவையில்  எதையும் வெட்டிக் கிழிக்க வேண்டாம்! இருப்பதே போதும்!

Tuesday 6 August 2024

விதிமீறல் ஒரு 'கிக்' அனுபவம்!


 விதி மீறல் என்றாலே  இளையவர்களுக்கு  ஒரு 'கிக்' கிடைக்கும்  என்பது நமக்குத் தெரியும்! அதுமட்டும் அல்ல அகப்பட்டால் அவர்களுக்கும் 'கிக்' கிடைக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!

என்ன தான் சொன்னாலும் ஒரு சிலருக்கு எதுவும் மண்டையில் உறைப்பதில்லை.  ஆனால் சமீபத்தில் பினாங்கில் நடந்த சம்பவம்  நமக்கே தலையைச் சுற்றுகிறது. இத்தனை மோட்டார் சைக்கிள்களா என்று வியக்கவைக்கிறது.

நடு ரோட்டில் சாகசம் செய்கிறார்களா? ஏதோ  தேன் கூட்டைக் கலைத்துவிட்ட  ஒரு தோற்றம்!  தீடீரென்று நிலநடுக்க ஏற்பட்டு ஓட்டம் எடுக்கிறார்களா?   என்னதொரு காட்சி!

போலீசாரின் சலைத்தடுப்பை திட்டமிட்டே அவர்கள் மீறவதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.  ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்,  சாலைத்தடுப்பை  மீறியதற்காக!  மேலும் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காகவும்  25 மோட்டார் சைக்கிள்களை  அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நமது இளைய தலைமுறை இப்படி சாலை விதிமுறைகளை மீறுவதும், அவர்களைக் கைது செய்வதும், இது தேவை தானா என்று கெட்கத் தோன்றுகிறது.  ஏன்  இவர்கள்  இப்படி எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்  என்பதும் நமக்குப் புரியவில்லை. இவர்களுக்கு என்ன தான் குறை என்றும் தெரியவில்லை.

இவர்களெல்லாம் பெரும்பாலும் பள்ளி மாணவர்களாகத்தான்  இருக்க வேண்டும். வருங்காலத் தலைமுறையினர். வருங்காலப் பட்டதாரிகள். வருங்காலத் தலைவர்கள்.  நாட்டை வழிநடத்த வேண்டியவர்கள்.  இந்த வயதிலேயே  விதிகளை  மீற வேண்டும் என்னும் வேட்கை  இவர்களுக்குள் எப்படி எழுந்தது?  விதிகளை மீறுவது வருங்காலங்களில் ஊழலை ஊக்குவிக்கும் என்பதும் சரியாகத்தானே இருக்கும்!

என்னவோ போங்கள். காவல்துறையினரைத் தவிர வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.  பள்ளிகளும் சரியான இடங்களாக இல்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Monday 5 August 2024

ஏன் மிஞ்ச முடியவில்லை?

 

சீனப் பள்ளிகள் தங்களது வளர்ச்சிக்கு அதாவது கட்டடங்கள் கட்டுவது போன்ற தேவைகளுக்கு,  நீண்ட நாள்களாகவே  மதுபான நிறுவனங்கள் உதவி வருகின்றன.  அவ்வப்போது சீனப்பள்ளிகள் நடத்தும் கட்டட நிதிகளுக்கு  உதவுபவர்கள் பெரும்பாலும்  இந்த நிறுவனங்கள் தான். அரசாங்கத்தின் உதவி இல்லாததால் பள்ளிகள் தாங்களே  பணத்தை திரட்டும்  நிலையில் உள்ளன.  அதற்குப் பெற்றோர்களும் உதவுகின்றனர்.

நாம் இந்த சர்ச்சையில் இறங்கவில்லை.  மதுபான நிறுவனங்கள்  பள்ளிகளுக்கு  அளிக்கும்  இந்த நிதி உதவியினால்  பள்ளிகளின் கலவித்தரம்  பாதிக்காப்படுகின்றனவா  என்பது தான்  நமது கேள்வி.

இன்று நாட்டில் மூன்று மொழி பள்ளிகள் இயங்குகின்றன. தேசியப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள், சீனப் பள்ளிகள்.  இதில் மலேசியப் பெற்றோர் பெரும் பகுதியினர் தேசியப்பள்ளிகளுக்கே தங்களது பிள்ளைகளை அனுப்புகின்றனர். தேசியப் பள்ளிகளே பெற்றொரின் முதன்மையான  தேர்வு என்பதில் ஐயமில்லை.

ஆனால் கல்வியில் தேர்ச்சி, வெற்றி  என்று வந்தால் சீனப்பள்ளிகளும், தமிழ்ப்பள்ளிகளும் தான் முக்கியமாக நிற்கின்றன. அதுவும் சீனப்பள்ளிகளையே  பெற்றோர்கள் விரும்பும் பள்ளிகளாக அமைந்து விட்டன.  தரம் என்றால் அது சீனப்பள்ளிகள் தான்  என்கிற நிலைமையை அவர்கள் உருவாக்கிவிட்டனர்.  கல்வியில் சீனப்பள்ளி மாணவர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர்.  அவர்களை மிஞ்ச ஆளில்லை என்கிற நிலைமை  தான் இப்போதும்.  தமிழ்ப்பள்ளிகள்,  இருக்கின்ற வசதிகளைக்  கொண்டு அவர்களும் தரத்தில் உயர்ந்த நிலையில் தான் இருக்கின்றனர். 

ஆனால் தேசியப்பள்ளிகளின் நிலைமை வேறு.  தனியார் டியூஷன் இல்லாமல்  அவைகளின் தரம் கீழ்நோக்கிப்  போய்விடும்!  தரமில்லாக் கல்வி என்றால் அவைகள் தேசியப்பள்ளிகள் தான்.  இதனைப் பெற்றோர்கள் அறிந்திருக்கின்றனர். அதனால் தான் நாடெங்கும் டியூஷன்  பள்ளிகள்  ஏகப்பட்டவை நிறைந்துவிட்டன.

சீனப்பள்ளிகள் மதுபான நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பியிருந்தாலும்  அவர்களின் கல்வித்தரம்  எந்தவகையிலும் தாழ்ந்து போகவில்லை. அவர்களின் தரம் தான் முதன்மையான நிலையில்  இப்போதும் பேசப்படுகின்றது.  தேசியப்பள்ளிகள் ஏன் சீனப்பள்ளிகளை மிஞ்ச முடியவில்லை?  அது முடியாது என்பது மட்டும் தெளிவு. இது வெறும் அரசியல்! வேறு எந்த வெங்காயமும் இல்லை!

Sunday 4 August 2024

தண்டனைகள் போதாது!

நாய்கள், பூனைகள் போன்ற  பிராணிகள்  எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப்படுகின்றன  என்பதைச் சமீப காலங்களில் பார்த்துவருகிறோம்.

வாயில்லா ஜீவன்கள் அவை. இதோ மேலே நாய் ஒன்றை பிக்-அப் வாகனத்தின்  பின்னால் கட்டி  அதை இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்து இரசிக்கவா முடியும்?  கொடுமையிலும் மகாக் கொடுமை.  அதன்  உரிமையாளர் அந்த நாயை எங்கோ கொண்டு  போய் விடப்போகிறார் என்று தோன்றுகிறது.  கொடுமை என்னவென்றால் இப்படித்தான் அதனை வாகனத்தின் பின்னால் கட்டி, அதனை இழுத்துக் கொண்டு போக வேண்டுமா என்பது தான் கேள்வி.  அதனை வெறுமனே விட்டாலும் அது ஓடிப் போய்விடும்.

எப்படித்தான் பார்த்தாலும்  நமது அரசாங்கம் தான் குற்றவாளி என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  இதற்கு முன்பும்  இது போன்று நடந்திருக்கிறது. இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் தொடரக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?  குற்றம் புரிபவர்களுக்கு  ஏற்றவாறான  தண்டனைகள் அளிக்கப்படுவதில்லை.   தண்டனைகள் எல்லாம் ஏனோ தானோ என்று தண்டனைகள் இருந்தால்  யாரும் பயப்படப்போவதில்லை.  

சமீபத்தில் டிக்டாக் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் ரி.ம.100 வெள்ளியோடு வழக்கை முடித்தவர்கள் நாய், பூனை வழக்குகளில் பெரிதாக என்ன தண்டனையைக் கொடுத்துவிட முடியும்?  மனித உயிருக்கும்  மரியாதை இல்ல, மனிதனோடு கூடவே வாழும்  நாய்,  பூனை உயிர்களுக்கும் மரியாதை இல்லை.  எல்லாமே உயிர்கள் தான்.  வாயில்லா ஜீவன்களை வதைப்பது என்பதைச்  சாதாரண குற்றமாகக் கருத முடியாது.

எல்லாவற்றுக்கு ஓர் அரசியல் உண்டு என்பது போல்  இந்த நாய், பூனைகளுக்கும்  ஓர் அரசியல் உண்டு. நாய்கள் ஒரு சாராருக்குப் பிடிக்காது என்பதால் நாய்கள் பிரச்சனைகள் வரும்போது ஒரு சாரார்  அதைக் கண்டு கொள்வதில்லை. தப்பித்தும் விடுகின்றனர்.  பூனைகள் தாக்கப்படும் போது அது ஏதோ ஒரு மனித உயிர்கள் போல  முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  நம்மைப் பொறுத்தவரை இரண்டு உயிர்களும் ஒன்று தான்.  எல்லா உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை.  கடவுளால் படைக்கப்பட்டவை அனைத்தும் உயர்வானவை தான்.

நாம் கேட்பவையெல்லாம் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். சிறை தண்டனைக் கிடைக்கிறதோ இல்லையோ  அபராதம் ரி.ம. 10,000 வெள்ளிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் கொஞ்சமாவது வலிக்கச் செய்யும்!

போதாது! போதாது! தண்டனைகள் போதாது!

Saturday 3 August 2024

உடைப்பட்டால் அது இந்தியன்!


 அது என்னவோ தெரியவில்லை!  மலேசியாவில் ஏதாவது கட்டடங்கள், சிறிதோ பெரிதோ,  உடைப்பட்டால் அங்கே இந்தியனின் அலறல் தான் கேட்கிறது.

அது கோவில்களாக இருக்கலாம், பள்ளிகளாக இருக்கலாம், சிறு வியாபாரங்கள் செய்யும்  அங்காடிகளாக  இருக்கலாம், இதோ கடைசியாக விளையாட்டு வீரர்களை உருவாக்கிய ஒரு கட்டுமானம்  உடைக்கப்பட்டது  நமது  நெஞ்சை  உலுக்குகிறது.

பல கராத்தே வீரர்களை உருவாக்கிய, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு விளையாட்டுக் கட்டுமானத்தைக்  கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி  உடைத்து நாசாமாக்கி இருக்கின்றனர்.   இது என்ன மாதிரியான மனநிலை என்று நமக்கும் புரியவில்லை.

இதில் என்ன அரசியல் என்பதும் புரியவில்லை.  இது விளையாட்டுத்துறை சார்ந்த ஒரு கட்டடம் என்பதைத் தவிர  வேறொன்றுமில்லை.  அது நிறைய கராத்தே வீரர்களை உருவாக்கியிருக்கின்றது.  பல தங்கப்பதக்கங்களை வாங்கிக் குவித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.  தங்கத்தைக் குவித்தவர்களில் பலர் இந்திய இளைஞர்களாக  இருக்கலாம்.  ஏன் இந்தியர்கள் என்றால் நமது நாடு ஏற்றுக் கொள்ளாதா?  இது முட்டாள்தனம் என்பது நமக்குப் புரிகிறது.  ஆனால் முட்டாள்களுக்குப் புரியவில்லையே!

இந்தக் கட்டடம் உடைப்படும் போது அங்கே டத்தோ மோகன் மட்டுமே குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.  அவர் தான் அந்த கராத்தே சங்கத்தின் தலைவர் என்று தெரிகிறது.  இருக்கட்டும்.  பக்காத்தான் தலைவர்களைப் போல ம.இ.கா. தலைவர்களும் பிரச்சனைகள் வரும் போது ஓடி ஒளிவதைப் பார்க்கிறோம்!  எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்றால் ஓடி ஒளிவது தான் சிறந்த வழி என்பது  பக்காத்தான் தலைவர்கள் கடைப்பிடிக்கும் வழி. அதுவே இப்போது ம.இ.கா.வின் வழி!

நல்லதோ கெட்டதோ ஏங்கோ, ஏதோ ஒன்று உடைப்பட்டால்  அது இந்தியர் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்பது இப்போது  நமக்கு விளங்குகிறது.  இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தியர்கள் சம்பந்தப்பட்டவைகளை உடைத்தால்  இப்போதைய பிரதமர் அன்வார் பெயரைக் கெடுக்கும்  நோக்கம் இருக்கலாம்.  அதே சமயத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மேல் அபிமானத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம். 

எப்படியோ இதுவும் அரசியல் என்று கூறுகின்றனர் அங்குக் கூடிய மக்கள்.  அது என்ன அரசியல் என்பது நமக்குத்தான் புரியவில்லை! என்ன செய்ய?

Friday 2 August 2024

ஊழல் பெருச்சாளிகள்!


 ஊழல் பெருச்சாளிகள் யார்?  இன்றைய நிலையில் அரசு சார்ந்த அதிகாரிகளே நமது கண்ணுக்குப் படுகின்றனர். காரணம் அவர்களின் கைது தான் நாளிதழ்களில்  அதிகம் பேசப்படுகின்றது.  

சட்டம் சொல்லுவது என்ன என்று பார்க்கும் போது இலஞ்சம் கொடுப்பவரும் குற்றவாளி, இலஞ்சம் வாங்குபவரும் குற்றவாளி. புரிகிற மொழியில் தான் சொல்லப்பட்டிருக்கின்றது. நமக்கு என்னவோ வாங்குபவரின் வற்புறுத்தலால் தான் கொடுப்பவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்  என்று தோன்றுகிறது.

ஆனால் இப்போது இது பிரச்சனையல்ல.  இந்தப் பிரச்சனையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  யாருக்குச் சொர்க்கம் கிடைக்கும்? கொடுப்பவருக்கா அல்லது வாங்குபவருக்கா? கொடுப்பவன் என்ன நினைக்கிறான்?    "பாவம்! இரண்டு பெண்டாட்டிக்காரன், அவன் எப்படித்தான் சமாளிப்பான்?"  இவன், அவன் மீது அனுதாபம் கொள்கிறான்!  அப்படியென்றால் அவனுக்கு சொர்க்கம் தானே கிடைக்க வேண்டும்?  வாங்குபவன் என்ன சொல்கிறான்?   "அப்பாடா!  டேய்!  நீ நல்லா இருந்தா தான் நான் நல்லா இருக்க முடியும்! அதனால் நீ எப்போதும் நல்லா இருக்க வேண்டும்!'  வாங்குபவன்,  கொடுப்பவனுக்காக "நீ நல்லா இருக்கணும் என்று பிரார்த்தனைச் செய்கிறான்!'  இப்போது கொடுத்தவனுக்கு நல்லதொரு  வேண்டுதல் கிடைக்கிறது.  ஆக, அவனுக்கும்  சொர்க்கம் தான் கிடைக்க வேண்டும்/

இப்போது இரண்டுமே சரிதான்!   வாங்குபவனும் கொடுப்பவனும் ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே  தங்களது பிரார்த்தனைகளைக் கடவுளிடம் வைக்கிறார்கள்.  கடவுள்  கோபித்துக் கொள்ள போகிறாரா என்ன?  கடவுள் நீதியுள்ளவர்.  இருவருக்குமே பிரார்த்தனைகள் நடக்கின்றன. இவருக்கு அவரும் அவருக்கு இவரும் கடவுளிடம்  தங்களது வேண்டுதலை வைக்கின்றனர்.  கடவுள் வேண்டுதலைக் கட்டாயம் கேட்கத்தான் செய்வார்.  இந்த நிலையில் யாரையும் தண்டிக்கமாட்டார்! தண்டிக்காதவர் தான் கடவுள்! தண்டித்தால் அது என்ன கடவுள்?  வேண்டுதல்களைக் கேட்பவர் தானே கடவுள்!

அதனால் மலேசிய பெருமக்களே!  இப்போது நம்மிடையே கடவுள் எப்படி? என்பதில் பிரச்சனை இல்லை.  அவர் எந்த தலையீடும் செய்யப் போவதில்லை!  கொடுப்பவன் தான் பெரிய குற்றவாளி என்றால் வாங்குபவன்  குற்றவாளியே அல்ல!  வாங்குபவன் பதவியில் இருக்கிறான். அவன் தான் அரசாங்கம். அவனுக்கு ஆதரவாக இருப்பது  குடிகளின் கடமை என்று தான் சமயம் சொல்லுகிறது?

ஊழல் பெருச்சாளிகளுக்குக் கடவுள்  கடைசி காலத்தில் கையில்  ஊன்றுகோலை  ஒன்றைக் கொடுத்து இங்கும் அங்கும் அலைய விடுவார்!

Thursday 1 August 2024

ஒரு முடிவுக்கு வாருங்கள்!

அரசியல்வாதிகளால் எதுவும் ஆகப்போவதில்லை  என்று தெரிந்தும்  நாம் ஏன் மரியாதைக் கொடுத்து மாலை போட்டு அவர்களை உயரத்தில் வைக்க வேண்டும்?

அவர்கள் இடத்தில் அவர்கள் இருக்கட்டும். நம் இடத்தில் நாம் இருப்போம். அவர்கள் நம் தயவினால் பதவி பெற்றவர்கள்.  அதனை நாம் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நாம் அவர்களிடம் ரொம்பவும் பணிந்து, தாழ்ந்து, குனிந்து  போவதால் அவர்கள் ஏதோ உயர்ந்தவர்கள் போலவும்  நாம் தாழ்ந்தவர்கள் போலவும் ஒரு சிலர் செய்கின்ற செய்கைகளினால்  அவர்களுக்கும் தலைக்கனம்  கூடிவிடுகிறது.

நாம் மட்டும் தான் இந்த அளவுக்கு அவர்களுக்கு மரியாதைக் கொடுக்கிறோம்.  சீனர்களோ, மலாய் இனத்தவரோ  இது போன்று அடிமை போன்று ஒட்டி உறவாடுவதில்லை.   அப்படியிருந்தும் நமக்குத் தான் எப்போதும் நாமம் போடுகின்றனர்   அவர்களுக்கு எப்போதும் ராஜ மரியாதை தான்.

கூனிக் குறுகும் போதே அவன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறான்.  இவனை ஏமாற்றுவது எளிது  என்பது அவனுக்குப் புரிந்து விடுகிறது.  அரசியல்வாதிகளைக் கண்டால் அவனுக்கு உள்ள மரியாதையைக் கொடுங்கள். அதற்காக உங்களுடைய மரியாதையைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இன்று நாட்டில் உள்ள அத்தனை அவலங்களும்  யாரால் ஏற்பட்டவை? அனைத்துக்கும் காரணமானவர்கள்  அரசியல்வாதிகள் தான்.   ஒரு பிரச்சனையையும்  அவர்களால்  தீர்த்து  வைக்க முடியவில்லை.  எல்லாமே தற்காலிகத் தீர்வு தான்.  அதனால் தான் அத்தனை பிரச்சனைகளும்  இப்போது நம்மை அலைக்கழிக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலத்தில் உள்ளனவா? அதனை ஏன் சட்டப்படி  அந்த உரிமையை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோவில்களுக்கும் இதே பிரச்சனை தான்.  தனியார் நிலம் என்றால் மாற்றுங்கள்.  மெட்ரிகுலேஷன் நுழைவுக்கு நஜிப் காலத்தில் 2200 இடங்கள்  ஒதுக்கப்பட்டன. அவர் நல்லவர், வல்லவர் தானே? ஏன் அப்போதே சட்டமாகக் கொண்டுவரவில்லை? அதற்கான முயற்சிகளை ஏன் மேற்கொள்ளவில்லை?

நாம் அரசியல்வாதிகளிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால்  நமது உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்! அதனால் அவர்களை நம்ப வேண்டாம்!