Thursday 1 August 2024

ஒரு முடிவுக்கு வாருங்கள்!

அரசியல்வாதிகளால் எதுவும் ஆகப்போவதில்லை  என்று தெரிந்தும்  நாம் ஏன் மரியாதைக் கொடுத்து மாலை போட்டு அவர்களை உயரத்தில் வைக்க வேண்டும்?

அவர்கள் இடத்தில் அவர்கள் இருக்கட்டும். நம் இடத்தில் நாம் இருப்போம். அவர்கள் நம் தயவினால் பதவி பெற்றவர்கள்.  அதனை நாம் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நாம் அவர்களிடம் ரொம்பவும் பணிந்து, தாழ்ந்து, குனிந்து  போவதால் அவர்கள் ஏதோ உயர்ந்தவர்கள் போலவும்  நாம் தாழ்ந்தவர்கள் போலவும் ஒரு சிலர் செய்கின்ற செய்கைகளினால்  அவர்களுக்கும் தலைக்கனம்  கூடிவிடுகிறது.

நாம் மட்டும் தான் இந்த அளவுக்கு அவர்களுக்கு மரியாதைக் கொடுக்கிறோம்.  சீனர்களோ, மலாய் இனத்தவரோ  இது போன்று அடிமை போன்று ஒட்டி உறவாடுவதில்லை.   அப்படியிருந்தும் நமக்குத் தான் எப்போதும் நாமம் போடுகின்றனர்   அவர்களுக்கு எப்போதும் ராஜ மரியாதை தான்.

கூனிக் குறுகும் போதே அவன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறான்.  இவனை ஏமாற்றுவது எளிது  என்பது அவனுக்குப் புரிந்து விடுகிறது.  அரசியல்வாதிகளைக் கண்டால் அவனுக்கு உள்ள மரியாதையைக் கொடுங்கள். அதற்காக உங்களுடைய மரியாதையைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இன்று நாட்டில் உள்ள அத்தனை அவலங்களும்  யாரால் ஏற்பட்டவை? அனைத்துக்கும் காரணமானவர்கள்  அரசியல்வாதிகள் தான்.   ஒரு பிரச்சனையையும்  அவர்களால்  தீர்த்து  வைக்க முடியவில்லை.  எல்லாமே தற்காலிகத் தீர்வு தான்.  அதனால் தான் அத்தனை பிரச்சனைகளும்  இப்போது நம்மை அலைக்கழிக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலத்தில் உள்ளனவா? அதனை ஏன் சட்டப்படி  அந்த உரிமையை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோவில்களுக்கும் இதே பிரச்சனை தான்.  தனியார் நிலம் என்றால் மாற்றுங்கள்.  மெட்ரிகுலேஷன் நுழைவுக்கு நஜிப் காலத்தில் 2200 இடங்கள்  ஒதுக்கப்பட்டன. அவர் நல்லவர், வல்லவர் தானே? ஏன் அப்போதே சட்டமாகக் கொண்டுவரவில்லை? அதற்கான முயற்சிகளை ஏன் மேற்கொள்ளவில்லை?

நாம் அரசியல்வாதிகளிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால்  நமது உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்! அதனால் அவர்களை நம்ப வேண்டாம்!

No comments:

Post a Comment