Wednesday 21 August 2024

சாகசம் சாவில் முடிந்தது!

சாலைகளில்  மோட்டார் சைக்கிள்களில்  சாகசம் செய்யும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறோம்.  அவர்களுக்காக வருந்தவும் செய்கிறோம்.  என்ன செய்வது? அவர்கள் பெற்றோர்கள் சொன்னாலும் கேட்பதில்லை. காவல்துறை சொன்னாலும் கேட்பதில்லை.  பொது மக்கள் சொன்னாலும் கேட்பதில்லை.

அப்படித்தான், யார் சொன்னாலும் கேட்காத இரு இளைஞர்கள்,  சாகசம் செய்து கொண்டிருக்கும் போது  இரு மோட்டார் சைக்கிள்களும்  மோதி  சம்பவ இடத்திலேயே சமாதி ஆகிவிட்டார்கள்.

இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்  காவல்துறையினர் படாதபாடு படுகின்றனர்.  யார் சொன்னாலும் அடங்காதவர்கள் கடைசியில் சாலையிலேயே அடங்கிப்போனார்கள். இந்த நிகழ்வு சாலையில் நடந்தது. ஆனால் இன்னும் எத்தனையோ இளைஞர்கள்  இப்படித்தான் சாலைகளில் கைகால்களை உடைத்து கொண்டு மருத்துவமனைகளில் படுத்துக்கிடக்கிறார்கள்.   அல்லது நிரந்தர ஊனங்களோடு உலவிக் கொண்டிருக்கிறார்கள்.  இதெல்லாம் வேண்டாம் என்று தான்  பெற்றோர்கள் படாதபாடு படுகின்றனர்.

இவர்களின் அட்டகாசத்தை அடக்க காவல்துறை என்னதான் நடவடிக்கை எடுத்தாலும்  இவர்களை அடக்க முடியவில்லை.  இவர்களில் பலருக்கு உரிமம் இல்லை. மோட்டோர் சைக்கிள்களுக்கு சாலைவரிகள் கட்டுவதில்லை.   எவ்வளவு ஆபத்தான முறையில்  பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதுமில்லை.

ஆனாலும் இன்னும் நமக்கு நம்பிக்கை உண்டு.  இவர்கள் திருந்துவார்கள். இளம் வயது என்பதால் வழக்கம் போல பொறுப்புணர்ச்சி என்பது இன்னும் வரவில்லை.  எல்லாகாலங்களிலும்  இந்த ஆட்டத்தைப் போட்டுக் கொண்டிருக்க முடியாது.  நேரம், காலம்  வரும்போது அவர்களுக்கும்  பொறுப்பு வந்துவிடும்.

சாகசம் செய்ய பொது இடங்கள் வேண்டாம் என்பது தான் நமது அறிவுரை.  அரசாங்கமே அதற்கென்று இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.  அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  பொது மக்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பது தான் நாம் சொல்லவருவது.

No comments:

Post a Comment