Monday 26 August 2024

இதென்ன நாய் பாசம்?



பெரும்பாலான மனிதர்களைப் பொறுத்தவரை  நாய்களை நாய்களாகத்தான் பார்ப்பார்கள்.  பூனைகளைப் பூனைகளாகத்தான் பார்ப்பார்கள்.  ஒரு சிலர் தான் அவைகளைக்  குழந்தைகளைப்போல் பார்ப்பார்கள்,  வளர்ப்பார்கள்!  அதென்னவோ பாசத்தை அப்படிக் கொட்டுவார்கள்.

அதையெல்லா குறை சொல்ல வரவில்லை. அந்தப் பாசத்தை  வீட்டோடு வைத்துக் கொண்டால்  குறை ஏதும் இல்லை கண்ணா! வெளியே வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன். 

எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு இது போன்ற நாய்களைப் பார்க்கும் போது  அவைகளைக் கொஞ்ச தோன்றும்!  ஒரு சிலருக்கு ஓடத் தோன்றும்!  ஒரு சிலர் பூனைகளைக் கொஞ்சோ கொஞ்சு என்று கொஞ்சுவார்கள்.  நாய்களை  ' நாயோ நாய்'  என்று வெறுப்பார்கள்!எல்லாமே பழக்க தோஷம் தான்.

ஆனாலும் ஒரு சில நாய் வளர்ப்பார்களின் செயல்  நம்மை முகம் சுளிக்க வைக்கிறது  என்பது உண்மை தான்.  அவைகள் இருக்க வேண்டிய இடத்தில்  தான் இருக்க வேண்டும்.   அவைகளை உணவகங்களுக்குக் கொண்டு வருவது, அவைகளை நாற்காலிகளில் உட்கார வைப்பது எல்லாம் எல்லை மீறுகின்ற செயல்.  அதனை யாரும் விரும்புவதில்லை. நாய் மட்டும் அல்ல.  சில சமயங்களில் பூனைகளைக் கொண்டு வருவோரும்  இப்படி இருக்கத்தான் செய்கின்றனர்.

உங்களுடைய நாய் பாசத்தையோ பூனை பாசத்தையோ  உணவகங்களுக்குக் கொண்டுவந்து காட்டாதீர்கள்.  அங்கு நாலு பேர் வருகின்ற பொது இடம்.  பொது இடங்களில் பூனைகளையோ, நாய்களையோ உங்களுடன் கூட்டி வராதீர்கள்.

அது இஸ்லாமிய உணவகங்கள் மட்டும் அல்ல எல்லாவகை உண்வகங்களுக்கும் பொருந்தும்.  நாய்களோடும், பூனைகளோடும் உணவகங்களில் சாப்பிடுவதை யாரும் விரும்புவதில்லை.  அது சுகாதாரம் சம்பந்தப்பட்டது.  மதம் சம்பந்தப்பட்டதல்ல.

என்ன தான் நம்மிடையே பலவித கருத்து வேறுபாடுகள்  இருந்தாலும்  இது போன்ற செயல்கள் ஏற்கக் கூடியது அல்ல.  எப்போதும் சுயநலனாகவே சிந்திக்கக் கூடாது.  பொதுநலன் என்பது மிக மிக முக்கியம். குறிப்பிட்ட அந்த உணவகம் இப்போது மூடப்பட்டிருக்கிறது. அதனால் யாருக்கு நஷ்டம்? அந்த உணவகத்திற்குத் தான் பாதிப்பு.  அவர்களுடைய வேலையாட்களுக்கு யார் சம்பளம் கொடுப்பார்?  சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும். சம்பளத்தைக் கொடுக்க வைக்க வேண்டும்.

நாய் பாசம், பூனை பாசம் எல்லாம் வீட்டினிலே!

No comments:

Post a Comment