Tuesday 13 August 2024

உணவகங்கள் தரம் தாழ்கின்றன!


இப்போதெல்லாம் உணவகங்களில்  என்னதான் நடக்கிறது  என்பதே புரிவதில்லை.

ஒன்று விலை.  உணவுகள் இன்ன விலைக்குத் தான் விற்கின்றன என்கிற விபரமே நமக்குத் தெரிவதில்லை.  காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை!  நேற்று ஒரு விலை, இன்று ஒரு விலை, நாளை ஒரு விலை!

காய்கறிகள் தான் இப்படி என்றால் உணவகங்களுமா இப்படிச்  செய்வது? விலையை ஏற்றிவிட்டீர்கள். நாங்களும் ஏற்றுக் கொண்டோம்.  இது ஒன்றும்  புதிது அல்லவே!  பிரச்சனை என்னவென்றால்  காலை  மாலை, நேற்று இன்று  என்றா விலைகளை ஏற்றுவது?

இன்னும் சில உணவகங்களில் ஆளைப் பார்க்கிறார்கள்.   பழக்கப்பட்டாவர்கள் என்றால்  ஒரு விலை.  புதியவர்கள் என்றால்  இனிமேல் வராதவாறு  ஒரு விலையைப் போட்டு அறுத்துவிடுகிறார்கள்!

சரி, விலையில் தான் இப்படி எல்லாம் குளறுபடிகள் செய்கிறார்கள் என்றால்  தரத்திலாவது  ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா? ஒரு மண்ணும் இல்லை!  இருப்பதையும் சுருக்கி விடுகிறார்கள்! இட்லியின் நிலையைப் பார்க்கிறீர்கள் தானே! பூரி  கேட்டால் கொஞ்சம் உருளைகிழங்கைப் போட்டு நிறைய சாம்பாரை ஊற்றிக் கொண்டுவருகிறார்கள்!  கடைசியில் பார்த்தால்  எதனையுமே சாப்பிடமுடியவில்லை! 

இப்போது இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்?  தரம் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், 'இது நல்ல நேரம்! ஒரு அடி அடிக்கலாம்!' என்று காசே குறியாக இருக்கிறார்கள்!  நீண்டகால வியாபாரம், நிரந்தர வியாபாரம் என்று நினைப்பவர்கள்  தரத்தில் கைவைப்பதில்லை.  விலையைக் கூட்டினாலும் நாளுக்கு ஒரு விலை என்கிற நிலையில்லை.

உணவகங்கள் நிலைத்து நிற்குமா என்று கேட்டால் அதன் தரம் தான் முக்கியம் என்பது வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்.   தரம் இல்லாத உணவகங்கள் நிலையே மாறிவிடும்.  மக்களின் ஆதரவை இழந்து விடுவார்கள்.   அவ்வளவு தான் நாம் சொல்ல முடியும்.  மற்றபடி இந்தியர்களின் வியாபாரத்தை மக்கள் கெடுக்கப் போவதில்லை. அவர்களே கெடுத்துக் கொள்வார்கள்!

No comments:

Post a Comment