Saturday 3 August 2024

உடைப்பட்டால் அது இந்தியன்!


 அது என்னவோ தெரியவில்லை!  மலேசியாவில் ஏதாவது கட்டடங்கள், சிறிதோ பெரிதோ,  உடைப்பட்டால் அங்கே இந்தியனின் அலறல் தான் கேட்கிறது.

அது கோவில்களாக இருக்கலாம், பள்ளிகளாக இருக்கலாம், சிறு வியாபாரங்கள் செய்யும்  அங்காடிகளாக  இருக்கலாம், இதோ கடைசியாக விளையாட்டு வீரர்களை உருவாக்கிய ஒரு கட்டுமானம்  உடைக்கப்பட்டது  நமது  நெஞ்சை  உலுக்குகிறது.

பல கராத்தே வீரர்களை உருவாக்கிய, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு விளையாட்டுக் கட்டுமானத்தைக்  கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி  உடைத்து நாசாமாக்கி இருக்கின்றனர்.   இது என்ன மாதிரியான மனநிலை என்று நமக்கும் புரியவில்லை.

இதில் என்ன அரசியல் என்பதும் புரியவில்லை.  இது விளையாட்டுத்துறை சார்ந்த ஒரு கட்டடம் என்பதைத் தவிர  வேறொன்றுமில்லை.  அது நிறைய கராத்தே வீரர்களை உருவாக்கியிருக்கின்றது.  பல தங்கப்பதக்கங்களை வாங்கிக் குவித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.  தங்கத்தைக் குவித்தவர்களில் பலர் இந்திய இளைஞர்களாக  இருக்கலாம்.  ஏன் இந்தியர்கள் என்றால் நமது நாடு ஏற்றுக் கொள்ளாதா?  இது முட்டாள்தனம் என்பது நமக்குப் புரிகிறது.  ஆனால் முட்டாள்களுக்குப் புரியவில்லையே!

இந்தக் கட்டடம் உடைப்படும் போது அங்கே டத்தோ மோகன் மட்டுமே குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.  அவர் தான் அந்த கராத்தே சங்கத்தின் தலைவர் என்று தெரிகிறது.  இருக்கட்டும்.  பக்காத்தான் தலைவர்களைப் போல ம.இ.கா. தலைவர்களும் பிரச்சனைகள் வரும் போது ஓடி ஒளிவதைப் பார்க்கிறோம்!  எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்றால் ஓடி ஒளிவது தான் சிறந்த வழி என்பது  பக்காத்தான் தலைவர்கள் கடைப்பிடிக்கும் வழி. அதுவே இப்போது ம.இ.கா.வின் வழி!

நல்லதோ கெட்டதோ ஏங்கோ, ஏதோ ஒன்று உடைப்பட்டால்  அது இந்தியர் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்பது இப்போது  நமக்கு விளங்குகிறது.  இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தியர்கள் சம்பந்தப்பட்டவைகளை உடைத்தால்  இப்போதைய பிரதமர் அன்வார் பெயரைக் கெடுக்கும்  நோக்கம் இருக்கலாம்.  அதே சமயத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மேல் அபிமானத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம். 

எப்படியோ இதுவும் அரசியல் என்று கூறுகின்றனர் அங்குக் கூடிய மக்கள்.  அது என்ன அரசியல் என்பது நமக்குத்தான் புரியவில்லை! என்ன செய்ய?

No comments:

Post a Comment