Saturday 10 August 2024

இதுவும் ஓர் எச்சரிக்கை தான்!

எல்லாமே  நமக்கு ஓர் அனுபவம் தான். சில சமயங்களில் வீடுகளில் நாம் பார்க்கின்றோம். அதனை நாம் பொருட்படுத்துவது கூட இல்லை.  அவ்வளவு அலட்சியம்.

குழந்தைகளிடம்  டார்ச்லைட் பேட்டரிகளைக் கைகளில்  விளையாடக் கொடுப்பது.  அவர்கள் அதனை வாயில் வைத்துக்  கடித்து விளையாடுவது.  அல்லது கைப்பேசிகளைக் கொடுப்பது  அவர்கள் அதனை வாயில் வைப்பது, கடிப்பது, சப்புவது, சுவைப்பது இப்படி என்னன்னவோ அவர்கள் செய்வதைப் பார்த்து   மகிழ்வது தான் நமது வேலை!

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி.  அது நமக்கு ஒரு நல்ல பாடம்.  ஆனால் ஒரு சிறிய மாற்றம்.  குழந்தைகளுக்குப் பதிலாக  அவர்களின் செல்லப்பிராணிகளான  நாய்கள்  பேட்டரியைக் கடித்து விளையாடியிருக்கின்றன.  அப்போது  அந்த பேட்டரி  வெடித்து சிதறி அவர்களின் வீட்டையே தீப்பிடிக்க வைத்துவிட்டது.  பின்னர்  தீயணைப்பு வீரர்கள் வந்த  தீயை அணைத்தனர்.

அதனை நாம் நாய்கள் தானே என்று எண்ணக்கூடாது. அந்த இடத்தில் சிறு வயது குழந்தைகளாக  இருந்தால்  அது உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கும். நல்ல வேளை அவர்களின் செல்லப் பிராணிகளுக்குக்  கூட எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.  அதுவரை  அது  அவர்களின் நல்ல காலம்.  ஆனால் எப்போதுமே அப்படி ஒரு நல்ல காலம்   வரும் என்று எதிர்பார்க்க முடியாது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு  போயிற்று  என்று மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இதெல்லாம் நமது தினசரி வாழ்வில்  நமக்குக் கிடைக்கும் பாடங்கள். இது எங்கோ அமெரிக்காவில் நடந்தது தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது என்பது தான் நமக்கான பாடம்.   நமக்கு அடுத்த வீட்டில் நடக்கலாம், ஏன், நமது வீட்டின் அடுத்த  அறையில் நடக்கலாம், எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்: இது போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களைப் பிள்ளைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்பது தான்.  முடிந்தவரை தேவையற்ற பொருட்களை அப்போதே குப்பையில்  வீசி விடுங்கள்.  ஆபத்து விளைவிக்கும் பொருள் என்று தெரிந்த பின்னரும் அதன் மூலம் ஆபத்தை நாம் ஏன்  வரவழைத்துக்  கொள்ள வேண்டும்?

இதுவும் நமக்கு ஒரு பாடம் தான்!

No comments:

Post a Comment