Monday 19 August 2024

அவமானம் சவாலாக மாறியது!


                                             நகைச்சுவை நடிகர்:  முத்துக்காளை

"நான் படிக்காதவன் என்கிற அவமானமே என்னை மீண்டும் படிக்க வைத்தது"  என்கிறார் முத்துக்காளை.

இப்படித்தான் சொல்லுகிறார் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை. பலருக்கு அவரின் பெயரைச் சொன்னால் தெரிய வாய்ப்பில்லை. அவர் வடிவேலுவுடன் நடித்த  சில காட்சிகளை நினைத்துப் பார்த்தால் போதும் உங்களுக்குப் புரிந்துவிடும்.

முத்துக்காளை சினிமாவில் ஸ்டண்ட் நடிகராக ஆக வேண்டும்  என வந்தவர்.  அவர் கராத்தே கலையில் கருப்பு பெல்ட் எடுத்தவர்.  சிலம்பம், ஜிம்னாஸ்டிக் கலைகளையும்  கற்றவர்.

சினிமாவில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை. சுமார் பத்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு  "பொன்மனம்"  படத்தில் நகைச்சுவை சண்டைக் காட்சிகளில் நடித்தார்.  அதன் பின்னரே அவருக்குப் படங்கள் வர ஆரம்பித்தன.

ஆனாலும் தனக்கு ஒரு அறிமுகம் வேண்டுமென்றால் அதற்குக் "கல்வி தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்"   என்கிற புரிதல் வந்தது என்கிறார் முத்துக்காளை.  அதன் பின்னர் தான் கல்வியைத் தேடினார். ஆரம்பத்தில்  திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடங்கியவர்  இப்போது மூன்று துறைகளில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.  எம்.ஏ. தமிழ், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். 

கல்வியினிடையே தனது குடி  பழக்கத்தையும் விட்டொழித்திருக்கிறார். ஆமாம் அதைத்தான் சொல்லுவார்கள் மதுபானப்பிரியனையும்  தமிழ்பிரியனாக மாற்றிவிடும் தமிழ் என்பார்கள்!  அவரும் மாறிவிட்டார். இப்போது அவருக்கு பள்ளி, கல்லூரிகளிலிருந்து அழைப்புகள் வருகின்றனவாம்.  மதுபழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று  பாடம் எடுக்கிறாராம்!

இந்த அத்தனை சாதனைகளும் அவருடைய 59-வது வயதுக்குள் சாதித்திருக்கிறார்  முத்துக்காளை. ஒன்று மட்டும் நிச்சயம். அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் போனாலும்  அவர் கற்ற தமிழ்  அவருக்குக் கல்லூரிகளிலிருந்து வாய்ப்புகளைக் கொண்டு வரும்.

கல்வி கற்றவனுக்குச் செல்கிற இடமெல்லாம் சிறப்பு!

No comments:

Post a Comment