Friday 9 August 2024

அமைதி நிலவ வேண்டும்!


 வங்காள தேசத்தில் அது முதலில் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு என்கிற முறையில் தான் கலவரம் ஏற்பட்டது.

அதனால் ஏற்பட்ட பயன் அந்நாட்டின் பிரதமர் நாட்டைவிட்டு வெளியேறினார். இந்தியாவில் அடைக்கலம்  புகுந்தார். இப்போது பிரதமராக நோபல் பரிசு பெற்றவர் ஒருவர் ஆட்சியில் அமர்ந்துள்ளார். வாழ்த்துகிறோம்.

ஆக, கலவரத்தில் ஈடுபட்டவர்களில்  நோக்கம் நிறைவேறினாலும்  கலவரம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.  இனி என்ன பிரச்சனை என்பதும் தெளிவில்லை.

இப்போது கலவரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்  தங்களது நோக்கத்தை மாற்றிகொண்டனரோ என்று நினைக்க வேண்டியுள்ளது.  என்ன தான் அவர்களுக்குத் தேவை என்பதும் புரியவில்லை. இப்போது அவர்களின் பார்வை அங்கு வாழும் சிறுபான்மையினர் மீதும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது.  மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

பொதுவாக பல நாடுகளிலும் நாம் பார்க்கும் ஒரே விஷயம் சிறுபான்மையினர்  தாக்கப்படுவது தான். அவர்களுடைய  வழிபாட்டுத்தலங்கள்  தாக்கப்படுவது தான்.  இது தான் எல்லா நாடுகளிலும் நடப்பது.  

வங்காளதேசமும் விதிவிலக்கல்ல.  இந்துக்களின் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்.  ஏன் இந்துக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான  தாக்குதல்?  யாருக்கும் இது புரியவில்லை! வங்காளதேசிகள் இலட்சக்கணக்கில் இந்தியாவில் வேலை செய்கின்றன. நேரடியாக முடியாவிட்டாலும் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு தான் வேலை செய்கின்றனர்.  அந்த நன்றியைக் கூட அவர்கள்  மறந்துவிட்டனர்.

மலேசியா வழக்கம் போல இதனைக் கண்டிக்கவில்லை. அரசியல் காரணங்கள் இருக்கலாம். ஒரு நாட்டைக் கண்டிப்பதும் ஒரு நாட்டைக் கண்டிக்காமல் இருப்பதும்  வழக்கமான ஒன்று தான்.  மனிதாபிமானம் என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது! அவ்வளவு தான்!

வங்காளதேசத்தில் அமைதி நிலவ பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment