Sunday 4 August 2024

தண்டனைகள் போதாது!

நாய்கள், பூனைகள் போன்ற  பிராணிகள்  எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப்படுகின்றன  என்பதைச் சமீப காலங்களில் பார்த்துவருகிறோம்.

வாயில்லா ஜீவன்கள் அவை. இதோ மேலே நாய் ஒன்றை பிக்-அப் வாகனத்தின்  பின்னால் கட்டி  அதை இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்து இரசிக்கவா முடியும்?  கொடுமையிலும் மகாக் கொடுமை.  அதன்  உரிமையாளர் அந்த நாயை எங்கோ கொண்டு  போய் விடப்போகிறார் என்று தோன்றுகிறது.  கொடுமை என்னவென்றால் இப்படித்தான் அதனை வாகனத்தின் பின்னால் கட்டி, அதனை இழுத்துக் கொண்டு போக வேண்டுமா என்பது தான் கேள்வி.  அதனை வெறுமனே விட்டாலும் அது ஓடிப் போய்விடும்.

எப்படித்தான் பார்த்தாலும்  நமது அரசாங்கம் தான் குற்றவாளி என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  இதற்கு முன்பும்  இது போன்று நடந்திருக்கிறது. இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் தொடரக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?  குற்றம் புரிபவர்களுக்கு  ஏற்றவாறான  தண்டனைகள் அளிக்கப்படுவதில்லை.   தண்டனைகள் எல்லாம் ஏனோ தானோ என்று தண்டனைகள் இருந்தால்  யாரும் பயப்படப்போவதில்லை.  

சமீபத்தில் டிக்டாக் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் ரி.ம.100 வெள்ளியோடு வழக்கை முடித்தவர்கள் நாய், பூனை வழக்குகளில் பெரிதாக என்ன தண்டனையைக் கொடுத்துவிட முடியும்?  மனித உயிருக்கும்  மரியாதை இல்ல, மனிதனோடு கூடவே வாழும்  நாய்,  பூனை உயிர்களுக்கும் மரியாதை இல்லை.  எல்லாமே உயிர்கள் தான்.  வாயில்லா ஜீவன்களை வதைப்பது என்பதைச்  சாதாரண குற்றமாகக் கருத முடியாது.

எல்லாவற்றுக்கு ஓர் அரசியல் உண்டு என்பது போல்  இந்த நாய், பூனைகளுக்கும்  ஓர் அரசியல் உண்டு. நாய்கள் ஒரு சாராருக்குப் பிடிக்காது என்பதால் நாய்கள் பிரச்சனைகள் வரும்போது ஒரு சாரார்  அதைக் கண்டு கொள்வதில்லை. தப்பித்தும் விடுகின்றனர்.  பூனைகள் தாக்கப்படும் போது அது ஏதோ ஒரு மனித உயிர்கள் போல  முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  நம்மைப் பொறுத்தவரை இரண்டு உயிர்களும் ஒன்று தான்.  எல்லா உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை.  கடவுளால் படைக்கப்பட்டவை அனைத்தும் உயர்வானவை தான்.

நாம் கேட்பவையெல்லாம் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். சிறை தண்டனைக் கிடைக்கிறதோ இல்லையோ  அபராதம் ரி.ம. 10,000 வெள்ளிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் கொஞ்சமாவது வலிக்கச் செய்யும்!

போதாது! போதாது! தண்டனைகள் போதாது!

No comments:

Post a Comment