Wednesday 14 August 2024

கேலி செய்ய வேண்டாம்!


 ரோட்டோரங்களில் நடக்கும் கடைகள் நம் நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல.

இன்றும் நாடெங்கும் அந்தக் கடைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  இன்றும்  சீனர்கள், மலாயக்காரரகள்  எதற்கும் கவலைப்படாமல்  ரோட்டு ஓரங்களில் தொழில் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.   அது போன்ற சிறு வியாபாரங்கள்  எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்போது தான் நமது பெண்கள் தொழில் செய்யும் மனநிலைக்கு வந்திருக்கின்றனர்.  தொழில் செய்தால் தான் பணத்தைப் பார்க்க முடியும் என்கிற தெளிவு இப்போது தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  இது ஒரு நல்ல  மன மாற்றம்.

காலங்காலமாக நமது பெண்கள், கணவர்களோடு சேர்ந்து வேலை செய்வது ஒன்றும் புதிதல்ல.  வேலை செய்வதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.  ஆனால் தொழிற்துறை என்பது, அது  என்ன தான் சிறு சிறு வியாபாரமாக இருந்தாலும் கூட அந்தத் துறையில்  நாம் ஆர்வம்காட்டவில்லை.   ஆண்களும் சரி பெண்களும் சரி நமது ஈடுபாடு அதில் இல்லாமலே போயிற்று.  அதனால் தான் இன்று பலவகைகளில் பொருளாதார ரீதியில்  நாம் மிக மிக தாழ்ந்து போயிருக்கிறோம்.

இப்போது தான் நமது பெண்களும் சரி, ஏன் ஆண்களும்  கூட,  வியாபாரங்களில் கொஞ்சம்   கொஞ்சமாக காலெடுத்து  வைத்து வருகிறோம்.  இப்போது புதிதாக சில மாற்றங்களையும் கண்டு வருகிறோம்.  ஆண்கள் வேலை செய்வதும் பெண்கள் சிறு சிறு தொழில்கள் செய்வதும்  ஒரு நல்ல மாற்றம்.

ஆனால் மற்ற இன ஆண்களிடம் இல்லாத சில விஷயங்கள் நமது இன ஆண்களிடம் இருப்பதைப் பார்க்கின்றோம்.  அந்தப் பெண்களைக் கேலி பேசுவது, வம்புக்கு இழுப்பது.  ஆபாசமாக நடந்து கொள்வது இதெல்லாம் ஓரளவு  நடந்து கொண்டுதான் இருக்கிறது.   அவர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை.  இதற்கு முன அவர்கள்  நமது பெண்கள்   வியாபாரம் செய்வதைப் பார்த்ததில்லை.  அவர்கள் வீட்டு அம்மாவோ, அக்காவோ, தங்கையோ, அண்ணியோ - இவர்கள் யாவருமே செய்யாத ஒன்றை  இந்த நவீனப்பெண்கள் செய்வதைப் பார்க்கும் போது அது அவர்களின் கண்களை உறுத்துகிறது.  இதெல்லாம்  அவ்வப்போது  ஏற்படுகின்ற  சில சில்லறைத்தனங்கள்!   எல்லாமே மாறும். இவர்களும் மாறுவார்கள்.

ஆனால் இளைஞர்களே!  பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்  என்பது தான்  நமது  ஆலோசனை!  நம் வீட்டுப் பெண்களுக்கு நாம் தான் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அது நமது பொறுப்பு.

No comments:

Post a Comment