Monday 30 September 2024

கல்வி மறுக்கப்படலாமோ?


எந்த வயதிலும் பெண்களின் கல்வி மறுக்கப்படக் கூடாது.  ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே  பயன் பெறும்.  அந்தப் பெண்ணின் குடும்பமே  கல்வி கற்ற குடும்பம் என மாற்றமடையும்.  அதனால்  தான் ஓர் ஆணை விட ஒரு பெண்ணிந் கல்வி முக்கியம் எனக் கருதப்படுகிறது. 

டிக்டாக்கில் ஒரு செய்தியைக் கேட்க  நேர்ந்தது. எஸ்.பி.எம். மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் டாக்டர் புனிதன் அவர்களின் வழிகாட்டும் உரைகளை  அவ்வப்போது கேட்பதுண்டு.  அப்போது தான் இந்தச் செய்தியை அவர் வெளிக்கொணர்ந்தார். 

ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருக்கிறார்களாம்.  அதுவும் குறிப்பாகப் பெண்களின் கல்விக்கு.  "நீ படிச்சி என்ன கிழிக்கப்போற?"  என்று  சொல்லுகிறார்களாம். இது எவ்வளவு பெரிய அசிங்கம் என்பது கூட  தெரியாத  நிலையில் இருக்கும்  அந்தப் பெற்றோர்களுக்கு நாம் என்ன தான் சொல்ல முடியும்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு.  இலங்கைத் தமிழர்களும், கேரள மலையாளிகளும்  நமக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு.  இலங்கைத் தமிழர்களின் இன்றைய முன்னேற்றம் என்பது கல்வியால் தான். ஆரம்ப காலங்களில் அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் தான் அல்லது நடுத்தர குடும்பங்கள்.  இப்போது அவர்கள் கல்வியை வைத்தே பெரும் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்.  ஆனால் அவர்களை விட  மலையாளிகள் இன்னும் சிறந்த எடுத்துக்காட்டு.  தமிழர்களோடு அவர்களும் பால் மரம் வெட்டியவர்கள் தான்.  கல்வியை மட்டும் அவர்கள் மறக்கவில்லை.  தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளை வைத்தே அவர்களின் முன்னேற்றம்  அமைந்துவிட்டது. அங்குக் கிடைத்த கல்வியை வைத்தே அன்றைய காலகட்டத்தில்  அவர்கள் ஆசிரியர்கள் ஆனார்கள். இன்றைய நிலையிலும் அவர்கள் தான்  முன்னணியில் நிற்கிறார்கள்.

நாம் எந்தக் காலத்திலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. "வேலை செய்தால் சம்பாதிக்கலாம்" என்கிற மனநிலை எப்படியோ உருவாகிவிட்டது. அதனை இன்னும் நம்மால் உடைக்க முடியவில்லை. இதனை  நமது என்.ஜி.ஒ. க்கள் தான் உடைக்க வேண்டும்.  ஏன் என்.ஜி.ஒ. க்கள்? அவர்கள் தானே அரசாங்க மானியம் பெறுகிறவர்கள்? 

எப்படியோ டாக்டர் புனிதன் அவர்கள் அதற்கும் தீர்வு காண ஏதேனும் திட்டங்கள் வைத்திருப்பார் என நம்பலாம்.  எல்லாவற்றையும்விட முக்கியமானது மாணவிகளே தங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது  என்று போர்க்கொடி தூக்கலாம். ஏன் போலிஸ்ஸுக்கும்  போகலாம்!   அது அவர்களது திறமை!

என்னவோ அடிமைகள் போல் வாழ்ந்துவிட்ட ஒரு சமுதாயத்தைத்  தூக்கி நிறுத்த இன்னும் பல முயற்சிகள் தேவை.

Sunday 29 September 2024

ஏழ்மையைப் போக்க கல்வி அவசியம்

 

ஏழ்மையைப் போக்க ஒரே வழி கல்வி மட்டும் தான்.  நம் கூட  வாழும் மற்ற  இனத்தவருக்கு தெரிந்திருக்கும் போது  அது ஏன் தமிழர்களுக்கு மட்டும் தெரியவில்லை? 

இன்றைய நிலையில் ஏழ்மையில் இருந்த பல குடும்பங்கள் இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டன.  ஒரு குடும்பத்தில் முதல் குழந்தைக்குக் கல்வியைக் கொடுத்துவிட்டாலே  அந்தக் குடும்பம் கரை சேர்ந்து விடும் என்பதை நாம் பார்க்கிறோம். 

கையில்  பணம் இல்லாத ஏழை குடும்பங்களுக்குக்  கையில் இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான்.  தங்கள் குழந்தைகளுக்கு  அதனை வழங்குவதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது. ஆனாலும் அதிலும்  நமக்குத் தயக்கம் உண்டு.  அதனால் தான் தோட்டப்புறத்தில்  வாழ்ந்த சமுதாயமான நாம் இன்னும் விடாப்பிடியாக  மூன்று நான்கு தலைமூறைகளாக  தோட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அப்படி வாழும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இலவசக் கல்வி கொடுத்தும் நாம் அதனைப் பயன்படுத்துவதில்லை. இப்போது தோட்டப்புறங்கள் குறைந்துவிட்டன. பலர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.  வேலை கலாச்சாரம்  மாறிவிட்டாலும், நகர்ப்புறம் வந்துவிட்டாலும்,  நமது புத்தி என்னவோ  தோட்டப்புறப்  பிடியிலிருந்து  மாறவில்லை.  

"வேலை செஞ்சால்  குடும்பக் கஷ்டத்திற்கு உதவியாக இருக்கும்"  என்கிற மனநிலையிலிருந்து இன்னும்  நாம் மாறவில்லை.  அப்படியே பழகிவிட்டோம்.  படித்தால் குடும்பமே முன்னேறும் என்கிற மனநிலைப் போய் வேலைக்குப் போனால் கொஞ்ச ஆடம்பரமாக வாழலாம்  என்கிற எண்ணம் புகுந்துவிட்டது.   கல்வியைவிட, கார், வீடு, தலைக்காட்சி, ஐஸ்பெட்டி  இது போன்ற அவசியமற்றவைகளில் செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர் இன்றைய தாய்மார்கள்.  கல்வி என்றால் யோசிக்கின்றனர்.

பொருள்கள் நம்மைவிட்டுப் போய்விடும். ஒரு வேளை திருடும் கூட போகலாம்.  ஆனால் கல்வி அப்படியல்ல. அதனை யாரும் நம்மிடமிருந்து திருடிவிட  முடியாது.  அது நம்முடனேயே  இருக்கும்.  நாலு பேருடன் தலைநிமிர்ந்து  நம்மால் வாழ முடியும்.  கல்வி அந்தளவு உயர்வானது.

கல்வியின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் அறியாமல் தான் இருக்கிறோம்.  நமது தாய்மார்கள் தான் அதற்கான சரியானத் தீர்வைக் காண முடியும்.  எதனையும் விட்டுக் கொடக்கலாம். கல்வியை மட்டும்  இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்.  அது மட்டும் தான்  நமது சமுதாயத்தை உயர்த்தும்.

Saturday 28 September 2024

The Psychology of Money by Morgan Housel

சமீபகாலமாக,  மேற்குறிப்பிட்ட  புத்தகம்  மிகவும்  பிரபலமாக பேசப்படும் புத்தகமாக  மாறியிருக்கிறது.  இதற்குக் காரணமானவர் நடிகர் அரவிந்த்சாமி.

பொதுவாக நான் சினிமா நடிகர்களின் பேட்டிகளை காணொளிகளில் கேட்கும் பழக்கம்  மிக மிகக் குறைவு. அதே போலதான் அர்விந்தசாமியுடனான பேட்டியும். நான் அக்கறைக் காட்டவில்லை.  ஆனால்  பேட்டி எடுத்தவர் நீயா நானா  கோபிநாத்  என்பதால்  நான் அக்கறைக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் அவரது ரசிகன்.

பொதுவாக அந்தப்  பேட்டி ஒரு நடிகருடன் என்பதைவிட  அது ஒருவகையில்  தன்முனைப்பு சம்பந்தமான, வாழ்வியல் சம்பந்தமான  பேட்டியாக அமைந்தது.  அந்தப் பேட்டியின் போது  அரவிந்த்சாமி குறிப்பிட்ட புத்தகம் தான்  மேலேயுள்ள The Psychology of Money.  அதே புத்தகம் தமிழிலும் மொழிபெயர்ப்பு இருப்பதாக கோபிநாத்தும் குறிப்பிட்டிருந்தார்.  தமிழில்  அதன் தலைப்பு  "பணம்சார் உளவியல்" தேசிய மொழியிலும் இந்தப் புத்தகம்  வெளியாயிருக்கிறது. 

உண்மையில் இந்தப் புத்தகத்தை நம் நாட்டில் பிரபலப் படுத்தியவர்  வழக்கறிஞர் சங்கர் அவர்கள் தான்.  அதன் பின்னர் தான் இப்போது பலர் பேசுகின்றனர்.  நம்முடைய நோக்கம் எல்லாம் நம் இனத்தவர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.  வளமாக வாழ வேண்டும்  என்கிற எண்ணம் இருப்பவர்கள்   இந்தப்  புத்தகத்தை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்.  எல்லாருக்குமே வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வழக்கறிஞர் சங்கர் சொன்னது போல இந்தப் புத்தகம் தேசிய மொழியில்  ஓர் இலட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறதாம். நம் நாட்டின்   மூன்று மொழிகளிலும் இந்தப் புத்தகம் வெளியாயிருக்கிறது.  சீன மொழியில்....? சொல்லவே வேண்டியதில்லை.அது தனி உலகம்.

இது சினிமா சம்பந்தப்பட்ட புத்தகம் அல்ல. முற்றிலும் வாழ்க்கையில் வளத்தோடு வாழ கற்றுக்கொடுக்கும் புத்தகம்.  நடிகர் அரவிந்த்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது, அவர் நடிகர் தானே என்று நினைக்கலாம்.   நடிப்பு அவருக்குப் பொழுதுபோக்கு அவ்வளவுதான்.  அவர் ஒரு தொழிலதிபர்.  பல கோடி  சொத்துகளுக்கு  அதிபதி என்று சொல்லப்படுகிறது.  பேட்டியின் போது அவர் குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தும்  அவருக்கு வழிகாட்டியிருக்கின்றன.  நமக்கும் வழிகாட்டும்.

நம் நோக்கம் நமது மக்கள் அனைவரும் வளமாக வாழ வேண்டும் என்பது தான்.  கொள்ளையடிக்காமல் கண்ணியத்தோடும், கௌரவத்தோடும், வளத்தோடும்  வாழ்ந்தாலே  போதும் நமது மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்.  வாழ்க! வளர்க!

Friday 27 September 2024

இந்தியர் வாக்குகள் குறைந்தது!

       
மக்கோத்தா இடைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது தேசிய முன்னணி.  இதில் நூறு விழுக்காடு  பக்காத்தான் கூட்டணி கட்சிகளின்  ஆதரவு தேசிய முன்னணிக்கு  விழுந்திருப்பதே  மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்று  நம்பப்படுகிறது.

சென்ற பொதுத்தேர்தலில்  கிடைத்த வாக்கு எண்ணிக்கையை விட இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.  சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில்  தேசிய முன்னணியின் வேட்பாளர் வெற்றி  பெற்றிருக்கிறார்.  மிகவும் அதிர்ச்சியான ஒரு வெற்றியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அதிகப் பெரும்பான்மையில்  தேசிய முன்னணியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

பொதுவாக வாக்களிப்பில்  சீனர், இந்தியர்களின்  பங்கு எதிர்பார்த்த அளவு இல்லை  என்பதாகச் சொல்லப்படுகிறது.  வாக்களிப்பில்  இந்தியர்கள் குறைவானவர்களே வாக்களிப்பில் கலந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூர்கின்றன.  சுமார் 50 விழுக்காடு இந்தியர்களே  வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர்.  சீனர்களின் நிலைமையும் அதே தான்.

ஆக, இந்த வெற்றி என்பது மலாய்க்காரர்களின்  முழுமையான ஆதரவு  தேசிய முன்னணிக்குக் கிடைத்திருப்பதாக நம்பலாம்.  இந்தியர்களின் ஆதரவு இன்னும் முழு அளவில்  தேசிய முன்னணிக்குக் கிடைக்கவில்லை.  இன்னும் பழைய நிலை தான்!

எது எப்படியிருந்தாலும் பிரதமர் அன்வார் சொல்லுவது போல :நாட்டின் "பொருளாதாரம்  மீட்சி அடைய வேண்டும்"  என்பதற்கான அறிகுறி தான் இந்த இடைத்தேர்தல் முடிவு என்பதாக நாமும்  எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வெற்றியில் நாமும் மகிழ்ச்சி அடைகிறோம். காரணம்  ஓரு நிலையான அரசாங்கம் நமக்குத் தேவை. அது மாநிலமாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒன்றுதான்.  பலமான அரசாங்கத்தைக் கொண்டிருந்தால்  பொருளாதாரம் மீட்சி அடைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

அதே சமயத்தில் இந்தியர்களின் நிலையும் மீட்சி அடைய வேண்டும்.

Thursday 26 September 2024

அறிவு வளர!


 தமிழ் நாட்டில் முடிதிருத்தும் நண்பர்  ஒருவர் தனது கடையில் தொலைக்காட்சி பெட்டியை வைக்கவில்லை.  அனைவரும் வியக்கும்படி நூலகம் ஒன்றை வைத்திருக்கிறார்.

அறிவு வளர்ச்சி என்பது எத்துணை முக்கியம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.  இன்று தொலைக்காட்சி ஊடகங்கள் எந்த அளவுக்கு மக்களை  மடையர்களாக்கி வைத்திருக்கிறது  என்பது நமக்குத் தெரியாமல் இல்லை.  ஆனால் அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  நம்மைக் கெடுக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே அவைகள் நமது வீடுகளில் அடைக்கலமாயிருக்கின்றன!

ஆனால் புத்தகங்கள் என்பது வேறு.  இன்று நாம் பல்வேறு வகை செய்திகளைப் படிக்கிறோம்.  அதுவும் பொதுவாகத் தற்கொலைகள்.  இவைகள் ஏன் நடக்கின்றன?  ஒன்றை உறுதியாகச் சொல்லலாம்.  படிக்கும் பழக்கம் இல்லாமையே  காரணம்.

என்னதான் பெரிய பெரிய படிப்புகள் படித்திருந்தாலும் கதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று  பல்வகைப் புத்தகங்களைப் படிப்பது அவர்களுக்கு நன்மைப் பயக்கும்.  உண்மையில் இன்றைய பிரச்சனை  என்னவென்றால் யாரும் எதனையும் படிப்பதில்லை.  காரணம் படிப்பதற்கு அவர்களுக்கு ஒன்றுமில்லை. 

புத்தகங்களின் அருமை  மெத்த படித்தவர்களுக்கே  தெரியவில்லை. அவர்கள் துறை சாராத பல பத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.  எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.  எழுத்தாளர்களின் சிந்தனைகள், அனுபவங்கள்  கொட்டப்பட்டிருக்கின்றன.  பாரதியார், பாரதிதாசன், டாக்டர் மு.வ. பொன்ற அறிஞர் பெருமக்கள் எழுதிய புத்தகங்கள் அனைவருக்குமானது.  எந்தத் துறையில் இருந்தாலும் படிக்கலாம்.

படிக்கவே நேரமில்லாக் காலம் இது.  கேட்டால்  "அதுக்கெல்லாம் எங்கே நேரம்" என்கிற பதில் தான் வருகிறது.  மற்றவர்களின் அனுபவங்களைப் படிக்கும் போது  நமது சிந்தனைப் போக்கு மாறலாம்.  நமக்குத் தேவையான சில விடைகள் கிடைக்கலாம்.  வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் புத்தகங்களில் கிடைக்கும்.

புத்தகங்கள் என்பது நமது வளர்ச்சிக்குத்தான். கடசிவரை உங்களை ஆற்றலோடு வைத்திருக்கும்.  முடிதிருத்தும்  அந்த நண்பர்  வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பார் என்பதில் ஐயமில்லை.  புத்தகம் உங்களை வாழ வைக்கும். உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காட்டும். கடைசிவரையில் உங்களை வெளிச்சத்தில் வைத்திருக்கும்.

புத்தகங்கள் படி! அது வாழ்க்கைப்படி!

Wednesday 25 September 2024

நம்பகத்தன்மை எப்படி வரும்?

சமீபகாலமாக மலேசியரிடையே இந்த அளவுக்குக் கெட்ட பெயர் வாங்கிய ஒரு நிறுவனம் என்றால் அது குளோபல் இக்வான்  நிறுவனம் தான்.

அப்படித்தான் நடக்கும். நடக்க வேண்டும்.  சிறார் இல்லம் என்று சொல்லி  அங்கிருந்த சிறுவர்-சிறுமியர்க்கு சொல்லமுடியாத அளவுக்குத்  துன்பங்களைக் கொடுத்திருக்கின்றனர்.  இதில் பாலியல் துன்பங்களும் அடங்கும்.  

அந்த  இல்லங்களில் இருந்தவர்களை அனாதைக் குழந்தைகள்  என்று சொல்லி வளர்த்திருக்கின்றனர். அதில் மனவேதனையான சம்பவம் ஒன்று உண்டு. அங்கு வேலை செய்து வரும் ஒருவனுக்கு நான்கு மனைவிகளாம்.  நான்கு மனைவிகளுக்கும் சுமார் 34 குழந்தைகளாம். அதில் இரண்டு முழந்தைகளை மட்டும் அவன் வளர்க்கின்றானாம்.  மற்ற 32 குழந்தைகளும் அனாதைகளாக அவர்களின் சிறார் இல்லத்திலேயே  வளர்க்கப்படுகின்றனராம். அனாதைகளாக, அப்பன் பேர் தெரியாதவர்களாக  வளர்கின்றனராம்.  அந்த சிறார் இல்லங்களில் அப்படித்தான்  பிள்ளைகள் அனாதைகளாக  வளர்கின்றனராம்.
.

கொஞ்சம்கூட மனிதாபிமானமற்ற ஒரு நிறுவனம் என்றால்  அது இக்வான் நிறுவனம் தான்.  அவர்கள் சிறார் இல்லங்கள் மட்டும் அல்ல நாடு தழுவிய அளவில்  உணவகங்கள், மளிகைப் பொருள்கள்விற்கும் பேராங்காடிகள் இன்னும் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இப்போது அரசாங்கம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது. வங்கிக்கணக்குகளை முடக்கிவிட்டது. வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.  சிறார் இல்லங்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன.  இப்போது மக்களும் அவர்களின் மளிகைக் கடைகள், பேரங்காடிகள்  அனைத்தையும்  புறக்கணிக்கவும்  ஆரம்பித்துவிட்டனர்.  

இப்படிப்பட்ட கேடுகெட்ட நிறுவனங்கள் எல்லாம் எப்படி செயல்படுகின்றன என்பது நமக்கே புரியவில்லை. குழந்தைகளை வைத்து வியாபாராம் செய்யும் இவர்கள்  அதிகாரிகளின் கண்களிலிருந்து எப்படி தப்பியிருக்க முடியும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.  எல்லாருமே கூட்டுக்களவாணிகளா என்பது விசாரணையில் தான் தெரிய வரும்.

மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்ட இந்த அயோக்கியர்களின்  கூட்டத்தை  யார் இனி நம்புவார்!

Tuesday 24 September 2024

இதற்கு முடிவே இல்லையா?


 நமது பள்ளிகளில் நச்சுணவு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆகக் கடைசியாக  ஈப்போ தேசிய பள்ளி ஒன்றில் இதனை மீண்டும் கேட்கிறோம்.  ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. சீனப்பள்ளிகளிலோ, தமிழ்ப்பள்ளிகளிலோ இந்த நச்சுணவுப் பிரச்சனையை  நாம் அடிக்கடிக் கேள்விப்படுவதில்லை. எப்போதோ ஒரு தடவை உண்டு.

ஆனால் தேசிய பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவது தான் நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது.  சமையல் என்பது என்னவென்று தெரியாதவர்கள் கண்டீன்களை  நடத்துகிறார்களோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது!  உண்மையான உணவுத் துறைகளில் உள்ளவர்களை மட்டுமே கண்டீன்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இப்போது என்ன நடக்கிறது?  அரசியல்வாதிகள் ஒவ்வொரு துறையிலும் தலையிடுகின்றனர்!  தங்களை நிபுணர்கள் என்றே நினைக்கின்றனர்!  என்ன செய்வது? நமது  போதாத காலம் அவர்களை எல்லாம் நம்ப வேண்டியிருக்கிறது!  இவர்கள் பெரும்பாலும்  பள்ளிகளைக் கூட விட்டு வைப்பதில்லை.  

அப்படி ஒரு பள்ளிக்கூடத்தில் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டும்.  கோழியை அரைகுறையாக  வறுத்தெடுத்திருக்கிறார்கள்.குடிக்கும் சாக்லெட் பானத்தில்  கெட்டுப்போன சாக்லெட்டைப் பயன்படுத்திருக்கிறார்கள். ஏதோ நாட்பட்டவைகள் மலிவாகக் கிடைக்கும் போல் தோன்றுகிறது.   நாட்பட்டவைகளைச் சாப்பிட்டால்  யாராக இருந்தாலும் அது கெடுதலைத்தான்  உண்டாக்கும்.  இவர்கள் குழந்தைகள். என்ன ஆகும்?  பாதிக்கத்தான் செய்யும். அது தான் நடந்திருக்கிறது.

நம்முடைய ஆதங்கள் எல்லாம் இதற்கு ஒரு முடிவே இல்லையா என்பது தான்.  வழக்கம் போல இவர்களுக்கான தண்டனைகள் எல்லாம் போதுமானவைகளாக இல்லை.  அதுவும் அங்கு  வேலை செய்யும் சிறு மீன்களைத்தான்  பிடிக்க முடியும். பெரிய மீன்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்!  பார்ப்போம்!

Monday 23 September 2024

பேய்கள் உருமாறுகின்றனவோ?`

நம் நாட்டில் ஒருசில அரசியல்வாதிகள் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் "கடவுள் செயல்" என்கிறார்கள்.  மனிதர்கள் தான் சொல்லுகிறார்கள். கடவுள் சொன்னதாக எந்த அறிகுறியும் இல்லை.

நிச்சயமாக இது கடவுள் செயல் அல்ல.  சாத்தான்கள் மனிதப்பிறப்பு எடுத்து  இந்த உலகையே ஆட்டிவைப்பதாகத் தான் தெரிகிறது.

குழந்தை பராமரிப்பு இல்லங்கள் நாடெங்கிலும்  உள்ளன.   அரசாங்கம்,  தனியார்  என்று பல இல்லங்கள்.  இன்னும் தனிப்பட்ட முறையில் பெண்கள் பலர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர்.  காரணம் தேவைகள் அதிகம். அதிகமானப் பெற்றோர்கள்  வேலை செய்கின்றனர்.  அதனால் இந்தப் பராமரிப்பு இல்லங்கள் தேவைப்படுகின்றன. 

ஆனால் இங்கு வேலை செய்பவர்களுக்கு, அதிகாரபூர்வ இல்லங்களுக்கு, ஒரு வேளை அங்கே வேலை செய்பவர்களுக்கு  சில கட்டுப்பாடுகள் இருக்கக் கூடும்.  வியாதிகள் உள்ளனவா போன்று சில கட்டுப்பாடுகள்.  ஆனால் அவர்களின் குண நலன்களைப்பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  கொடூர மனநலன்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படித்தான் மேலே கைது செய்யப்பட்டிருக்கும் பெண் ஒருவர். பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  எந்த முன்னேற்றமும் இல்லை. அப்படியென்றால் தண்டனைகள் போதவில்லையோ?  நமக்கும் புரியவில்லை. குழந்தைகள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள்  என அறியும் போது  மனம் வலிக்கத்தான்  செய்கிறது.

அந்தப் பெண்ணுக்கு 24 வயது என்று சொல்லப்படுகிறது. இரண்டு மாத குழந்தைக்குத் தாய். அந்தக் குழந்தைக்கு இன்னும் பாலூட்டிக் கொண்டிருக்கிறார்.  அவருக்குப் புற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது. அவரின் குழந்தைக்கு இதய நோய் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர் பராமரிப்பு இல்லங்களில் வேலை  செய்தால்  என்ன நடக்கும்? இவர் என்ன செய்தார்?

பராமரிப்பு இல்லத்தில் இருந்த ஒரு 17 மாதக்  குழந்தை. குழந்தைக்குப் பசியில்லை. அக்குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவு அளித்தார்.  எப்படி? தலைமுடியை இழுத்துக் கொண்டார். மூக்கை  அழுத்திக் கொண்டார்.  அப்படித்தான் உணவளித்திருக்கிறார்.  இது தான் அவர் மீதான குற்றச்சாட்டு.  அத்தோடு வேறு என்ன செய்திருப்பார்  என்று நீங்களே கற்பனைச் செய்து கொள்ளுங்கள்.

பராமரிப்பு இல்லங்களில் பணிபுரிபவர்களுக்கு அதீத பொறுமை வேண்டும்.  எல்லாவற்றையும் விட அன்பு வேண்டும். இன்றைய நிலையில் மனிதரிடையே அன்பு மட்டும் தான் குறைவாக இருக்கிறது.  மற்றவைகள் நிறைவாக இருந்து என்ன பயன்?

Sunday 22 September 2024

இது நல்லா இருக்கே!


 பிரதமர் அன்வார் எதிர்கட்சியினருக்குச் சவால் விட்டிருக்கிறார். "என் மேல் நம்பிக்கை இல்லாவிட்டால்  நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக்  கொண்டு வாருங்களேன்"  என்று  சவால் விட்டிருக்கிறார்!

ஆமாம்,  வருகிற  அக்டோபர் மாதத்தில்  நடைபெரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த  நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வாருங்களேன் என்கிற அவரின் சவால்  எதிர்க்கட்சியினரை என்ன செய்யும் என்பது தெரியவில்லை.

இந்த நேரத்தில் நாம் வேறொன்றையும்  நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. அரசியலைப் பொறுத்தவரை யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாருமே பெரிய நிபுணர்கள் தான். 

'நம்பிக்கையில்லாத் தீர்மானம்" என்பது எதிர்க்கட்சிகள் முன்னமையே தாங்கள்  கொண்டு  வரவேண்டும்,  என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்கலாம்.   காரணம் எதிர்க்கட்சிகள் என்று வந்துவிட்டால்  ஆளுங்கட்சியுடன் முட்டலும் மோதலுமாகத் தான் இருக்க வேண்டும் என்பது தான் விதி. அவர்கள் அதனை எந்தக் குறையும் இல்லாமல் செய்வார்கள்!

அதனைத்தான் பிரதமர்,  அவர்கள்  வாயில் வருமுன்னே இவர் முந்திக் கொண்டாரோ என்று தோன்றுகிறது!  காரணம் எப்போதுமே எதிர்க்கட்சியினர்  தாம் 'நம்பிக்கையில்லாத் தீர்மானம்'  கொண்டுவருவோம் என்று சொல்லி பயமுறுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது அப்படிச் சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். ஒரு சுகம்.  அதாவது அவர்களின் நோக்கம் என்னவென்றால் பிரதமரை பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  பயமுறுத்துவது, அரசாங்கம் விரைவில் கவிழும் என்பது -  இதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கு  ஏதோ அல்வா சாப்பிடுவது போல.  ஒன்றும் ஆகப்போவதில்லை என்று தெரிந்தும் கூட  அந்தப் பயமுறுத்தல் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

அதனால் தான் பிரதமர் இந்த முறை முந்திக் கொண்டார்.  "இந்தாப்பா நான் ரெடி!  நீங்கள் ரெடியா?  துணிவு இருந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவாருங்கள்"   என்று  எதிர்க்கட்சியினருக்குச் சவால் விட்டிருக்கிறார்.  அவர்களின் வாயை அடைத்திருக்கிறார். கேட்க நன்றாகவே இருக்கிறது!

இந்நேரத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?  சரியோ தவறோ இப்போது ஒர் அரசாங்கம் அமைந்திருக்கிறது.  அவர்கள்   ஐந்து  ஆண்டுகளை நிறைவு செய்யட்டும்.  அதன் பின், மனநிறைவு இல்லாவிட்டால்,  வேறு அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள். அது தானே மக்களால் ஆளப்படுகிற அரசாங்கம்?  அதற்குள் ஏன் இந்த அடிபிடி?

நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கத்தில் குறைபாடுகள்  இருந்தால்  அதனைச் சுட்டிக்காட்டுங்கள். நாடாளுமன்றத்தில்  சண்டைப் போடுங்கள். அத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். சும்மா நடிக்காதீர்கள்! 

Saturday 21 September 2024

நிபுணத்துவம் பெற்றவரா இப்படி?


நிபுணத்துவ மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்த கொண்டதாக  செய்தியினைப் படித்தோம்.

மிகவும் வருந்தத்தக்க செய்தி.  இதற்கு முன்னரும் தற்கொலை செய்திகளைப்  படித்திருக்கிறோம், மருத்துவர் உட்பட.   ஆனல் சில செய்திகளை நம்மால் நம்ப முடிவதில்லை. 

ஸ்பஷலிஸ்ட் மருத்துவர் ஒருவர் தற்கொலை என்னும்  செய்தி உண்மையில் நம்மை அதிரவைக்கிறது. இப்படியும் நடக்குமா என்று நம்பமுடியவில்லை.  காரணம் அவர்கள் சாதாரண டாக்டர்களைவிட  ஒருபடி மேல் என்பது தான் நமது பார்வை.  இப்படியெல்லாம் அவர்கள் தற்கொலை செய்து கொண்டால்  டாக்டர் தொழிலுக்கே ஒரு மரியாதை இல்லாமல் போகிறது.  என்னத்த படிச்சி கிழிச்சீங்க என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

பொது மக்களில் ஒருவர் என்னும்போது அது ஒன்றும் பெரிய செய்தியாகத் தெரிவதில்லை.  பத்தோடு பதினொன்று  என்று போய்விடுகிறது. நிபுணத்துவம் பெற்ற ஒரு டாக்டர் தற்கொலை செய்து கொண்டால்  நாம் எப்படி அதனைப் புரிந்துகொள்வது.

 முப்பது வயது டாக்டர் தே,   சமீபத்தில் தான் சபா,லஹாட் டாட்டு  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர்,  நம் நாட்டில் சீன சமூக  மருத்துவர் என்றாலே அவர்களைப்பற்றி நமக்குத் தெரியும்.  அவர்கள்  தொழிலில் காட்டும் ஆர்வம், அர்ப்பணிப்பு நமக்குத் தெரிந்தது தான். குறை சொல்ல ஒன்றுமில்லை.  ஆனால் உயர்மட்டத்தில் உள்ள  அரைகுறைகளால் அவர்களுக்குப் பல இன்னல்கள், கேலிகள், கிண்டல்களால்  அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  இவர் ஒருவர் மட்டும் அல்ல. பல புதிய, இளம் டாக்டர்களுக்கு  ஏற்படும் பிரச்சனைகள் தான். அவர்களைச் சமாளித்துத் தான் பலபேர், பேர் போடுகின்றனர்.  என்ன தான் கேலி கிண்டல்கள் இருந்தாலும் தற்கொலை என்பது  முடிவல்ல.

டாக்டர்கள் எல்லாம் சொல்லுவது "தற்கொலை என்பது கோழைத்தனம்" என்று.  அந்தக் கோழைத்தனத்தை அவர்களே செய்தால் என்னவென்பது?

Friday 20 September 2024

இந்தியர் கடைகளே நமது தேர்வு!

மலேசிய மக்கள், குறிப்பாக இந்தியர்கள்,  ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாங்குகின்ற பொருள்கள் அல்லது  வேறு எதுவானாலும்  முடிந்தவரை நமது இந்தியர்கள் செய்கின்ற வியாபார நிலையங்களிலேயே  வாங்குங்கள்  என்பது தான் நமது கோரிக்கை ஏன் நமது கடமையாகவும் இருக்க வேண்டும்.

சமீபத்திய புள்ளிவிபரத்தின்  படி சீனர்கள் 95 விழுக்காடு  சீனர்களை நம்புகின்றனர்.  இந்தியர்கள் 85 விழுக்காட்டினர் இந்தியர்களை நம்புகின்றனர்.  மலாய்க்காரர்கள் இன்னும் கீழே: சுமார் 75 விழுக்காட்டினரே மலாய்க்காரர்களை நம்புகின்றனர்.

இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?  சீனர்கள் சீனர்களை நம்புவதால் அவர்களின் வியாபாரங்கள் அனைத்தும் சீனர்களுக்கு மட்டுமே என்கிற நிலைமையில்  அவர்களின் பொருளாதாரம் உயர்ந்து நிற்கிறது.  அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள்  அனைத்தும் சீனர்களுடன் மட்டுமே என்பதால் சீனர்களை யாராலும் வீழ்த்துவதற்கு வாய்ப்பில்லை.  அதனால் தான் இந்நாள் வரை சீனர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கின்றனர்.

 நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது?  நாம் நம்மையே நம்புவதில்லை. யாரையும் நம்புவதில்லை.  அதோடு அது போவதில்லை. பொறாமைப் படுகிறோம்.  நம்ம ஆள் ஒருவன் நல்லா இருந்தால் அது இந்த சமுதாயத்திற்கு நல்லது தானே  என்கிற  எண்ணம் நம்மிடம் இல்லை.  நாளை நமக்கு ஒரு பிரச்சனை  என்னும் போது நம்ம ஆள் தான் நமக்கு உதவுவான். அப்படி ஒரு எண்ணம் கூட நமக்கு வருவதில்லை.  இந்தியர்கள் எத்தனையோ பேர் மளிகைக்கடைகள் வைத்திருக்கிறார்கள். செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். மற்ற துறைகளிலும் பலர் இருக்கின்றனர். 

நாம் நமது குடும்ப சண்டைகளை வீதிக்குக் கொண்டு வரக்கூடாது. இந்தியன் ஒருவனைத் தோற்கடித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டக்கூடாது. நமக்கு ஒருவனைப் பிடிக்காவிட்டாலும் ஒரு இந்தியனிடமே  வாங்குங்கள். நம்ம ஆள் ஒருவன் பிழைத்துவிட்டுப் போகட்டும். விலையுள்ள கார் வாங்கினால் ஒரு இந்திய விற்பானையாளனிடமே  வாங்குங்கள். அவன் பிழைக்கட்டுமே அதை ஏன் கெடுக்க வேண்டும்?

நம் பொருளாதாரம் நம் கையில் நிற்க,  இந்தியர்களின் பொருளாதாரம் உயர,  நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய ஆள்களிடம் தேடியாகப் போய்  தேடிப்போய் அவர்களிடம் வாங்குங்கள். அதனையே ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். நம்முடைய தாமான்களில் சுப்பர் மார்கெட் இருக்கிறது, சீனர் கடை இருக்கிறது, மலாய்காரர் கடை இருக்கிறது அங்கே ஓர் இந்தியர் கடையும் இருக்கிறது. அவரின் கடை தான் நம்முடைய தேர்வு. அதில் மாற்றமில்லை.

Thursday 19 September 2024

மீண்டும் துருப்புச்சீட்டா?

               BN Syed Hussein Syed Abdullah                        PN Mohamad Haizan Jaafar

வெற்றியை நிர்ணயிக்கும் துருப்புச்சீட்டாக மீண்டும் இந்தியர்களுக்கு ஒரு  வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

நமக்கு ஞாபகத்திற்கு வருவது ஒன்றுதான்.  துருப்புச்சீட்டு என்றாகும் போது தான்  நமக்குச் சில அனுகூலங்கள் கிடைக்கும்  என்பது நமது  பொதுப்புத்திக்கு ஏற்றப்பட்டிருக்கிறது!

ஜொகூர், மக்கோத்தா இடைத்தேர்தலில் தான் நாம் துருப்புச்சீட்டாக்கப் பட்டிருக்கிறோம்.  இந்தத் துருப்புச்சீட்டு  பாக்கியம் என்பது எப்போதும் நமக்குக்  கிடைப்பதில்லை.  யாராவது இறைவனடி சேர வேண்டும். அப்போது தான் அரசியல்வாதிகள்  நமது காலடிகள் வந்து சேர்வார்கள்.

இந்த முறை இந்த துருப்புச்சீட்டுகளுக்கு  ஏதேனும் குறைபாடுகள் உண்டா என்பது  நமக்குத் தெரியவில்லை.  மக்கோத்தாவே இதற்கு முன்னர் தெரியாது இப்போதும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை.  அதுவும் இந்த முறை  ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ளவர்கள்  அனைவருமே  அம்னோ வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்.  அவரை எதிர்த்து யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?

'உரிமை' யிடம் யாரும் புகார் கொடுத்திருந்தால் ஒரு வேளை கடைசி நிமிடத்தில்  ஏதேனும் எதிர்ப்புக் குரல்கள் வெளியாகக் கூடும்.  அல்லது ம.இ.கா.வினர் நமது என்.ஜி.ஒ.க்களின் குரலை நெரித்துக் கொண்டிருந்தால்  எந்த செய்தியும் வெளியாகப் போவதில்லை.  எல்லாம் சுபமே என்று நாமும் வாய்மூடிக் கொண்டிருப்பது தான் நமக்கு நல்லது.

நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்த துருப்புச்சீட்டுக் காலம் தான் நமக்கு ஏதாவது பிச்சைகள்  கிடைக்கும் காலம். அதனைத் தவறவிட்டால்  அது எப்போதுமே கிடைக்கப் போவதில்லை.  அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது தான் நமது அறிவுரை.

ஜொகூர் மந்திரி பெசார், இந்தியர்களுக்கு  நிறையவே உறுதியளித்திருக்கிறார்.  எல்லாமே நடக்கும்.  ஆனால் இப்போது அல்ல. அது அடுத்த தேர்தலுக்குப் பின்னராக இருக்கலாம். உடனடியாக 'கைமேல் பலன்' என்று ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.

இந்த முறை துருப்புச்சீட்டா அல்லது  துருப்பிடித்த சீட்டா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday 18 September 2024

ஜாக்கிம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

                                              குளோபல் இக்வான் நிறுவனம்

இத்தனை ஆண்டுகள் அதிகாரிகளின் கண்களிலிருந்து  இந்த நிறுவனம் எப்படித்  தப்பித்ததோ  நமக்குத் தெரியவில்லை.

வெளிநாட்டவர்கள் சொல்லுவது  போல பணத்தைத்  தள்ளினால்  மலேசியாவில் எதுவும் நடக்கும்  என்று கேள்விப்பட்டது  உண்மை  என்றே தோன்றுகிறது.

ஜாக்கிம் போன்ற அரசாங்க நிறுவனத்திற்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை.   ஆனால் அவர்கள் தெரியாதது போல நடிக்கிறார்கள். இளஞ்சிறார்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது உலகிற்கே தெரிந்தாலும் இவர்களுக்கு மட்டும் தெரியாது!  பல்வேறு காரணங்கள்! வெளியே சொல்ல முடியாத காரணங்கள்.  நாட்டில் மதத்தின் பெயரால் எதனையும் மறைத்துவிடலாம் என்பதைச் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்!

மற்றவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எக்கேடு கெட்டால் என்ன என்கிற அலட்சியம் தான் முக்கிய காரணம்.   இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள நேர்கிறது.  இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் குழந்தைகளை எந்த எல்லைக்கும் இட்டுச் செல்வார்கள் என்பது மட்டும் உண்மை.  குழந்தைகளை வேண்டுமென்றே முடமாக்குவார்கள். முடமாக்கி  அவர்களை பிச்சை எடுக்க வைப்பார்கள்.  இது தானே நடைமுறையில் உள்ளது?   பிச்சை எடுப்பதில் தானே பணம்  புரளுகிறது?

பிச்சை எடுப்பது பெரும் தொழிலாக மாறிவிட்டது.  மக்களின் இரக்க உணர்ச்சியே  இந்த ஈனத்தொழிலில் ஈடுபட்டோருக்கு பெரும் மூலதனமாக மாறிவிட்டது.  நல்லவர்களாக மக்கள் முன்னர் காட்டிக்கொள்ள பதத்தை நல்லதொரு  கேடயமாக  மாற்றிக்கொள்ள முடிகிறது!

இப்படியொரு கேவலமான செயலை இந்நாடு இதுவரைக் கண்டதில்லை.  இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் எப்பேர்ப்பட்ட கொம்பன்களாக இருந்தாலும் சரி  அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.  

ஜாக்கிம் எந்த அளவுக்கு இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் விசாரிக்க வேண்டும்.  இது மலேசியர் பிரச்சனை. ஏதோ  மதம் சம்பந்தப்பட்டது அல்ல. குழந்தைகள் சம்பந்தப்பட்டது. உயிர்கள் சம்பந்தப்பட்டது.

நல்ல நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்போம். 

Tuesday 17 September 2024

திருப்பதி லட்டு

அரசியல்வாதி கைபட்டால் திருப்பதி லட்டும் திருட்டு லட்டாகிவிடும்! இந்த செய்தி  மேலும்  இதனைப்  உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவையே அதிரச் செய்திருக்கிறது இந்த செய்தி: மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு,  மீன் எண்ணெய், செம்பனை எண்ணைய், சோயா  எண்ணைய் ஆகிய கலவையில் தயாரிக்கப்பட்டு  லட்டுகள் பக்தர்கள் உண்பதற்குக்  கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த சம்பவம் தொடர்ந்திருக்கிறது.  மாடுகளைத் தெய்வமாக நினைப்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிடி  என்பதில் சந்தேகமில்லை.  அதுவும் தேவஸ்தானத்தின் மேல்மட்ட ஸ்வாமிகளிலிருந்து கீழ் மட்ட சாதாரண பகதன்வரை இதனை அறியாமலேயே  இந்த லட்டுகளைச் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். 

நம்முடைய கேள்விகள் எல்லாம்  மிகச் சாதாரண மனிதர்கள் கூட இந்த வித்தியாசாங்களைக் கண்டுபிடித்துவிட முடியும்.  ஆனால் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் செய்தியை மேல் மட்டத்திற்குக் கொண்டு செல்ல தடுப்புச்சுவர்கள் அநேகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

இன்னொரு பக்கம் பார்த்தால் மேல் நிலையில் உள்ளவர்களுக்கு இது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.  தெரிந்தால் என்ன? பணம்தானே பிரதானம்!  அத்தோடு அரசியவாதியை மீறி யாராலும்  செயல்பட முடியாது என்கிற உண்மை அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் நமக்கென்னவோ இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  பெரிய பெரிய ஸ்வாமிகளைப் பற்றியெல்லாம்  நமக்குக் கவலையில்லை. ஒரு சாதாரண பக்தன்.  உங்களை நம்பித் தானே அங்கு வருகிறான். உங்களை நம்பித்தானே வருகிறான்.  அவனுக்கு இப்படியெல்லாம் துரோகம் செய்யலாமா என்பது தான்  நாம் கேட்க விரும்புவது. கீழ்மட்டத்தில் உள்ள இவன் தானே உண்மையான பகதன். அவனை ஏமாற்றுவது கடவுளை  ஏமாற்றுவது போல் தானே?

அரசியல்வாதிகள், ஸ்வாமிகள் இவர்களையெல்லாம் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் வைத்தது தானே சட்டம்?  ஆனால் ஒன்று. கடவுளிடம் உங்கள் சட்டம் செல்லுபடியாகாது.  உங்களுக்கான தண்டனை உண்டு என்பது மட்டும் உண்மை.

Monday 16 September 2024

எந்த சம்பவமும் இனி வேண்டாம்!

                                                        மஸ்ஜித் இந்தியா
 மீண்டும் எந்தவொரு சம்பவமும் வேண்டாம்  என்று மக்கள் எதிர்ப்பார்ப்பதில் ஒரு நியாயம் உண்டு. அதே போல இனி வருங்காலங்களில் எந்த அசாம்பவிதமும்  நடக்கக் கூடாது என்று அரசாங்கம் நினைப்பதிலும் நியாயம் உண்டு. 

காரணம் இதில் உள்நாட்டு மக்கள் மட்டும் அல்ல  வெளிநாடுகளிலிருந்து  வரும் சுற்றுப்பயணிகளும் அடங்குவர்.  எப்படிப் பார்த்தாலும் மக்களின் பாதுகாப்புக்குத் தான் முதலிடம்.  இது கடவுளின் செயல் என்று எல்லாருமே  நினைத்துவிட்டால்  பிரச்சனை ஏதும் இல்லை.  ஆனால் இப்போது யாரும் ஏமாறத் தயாராக இல்லை.  அதனால் மலேசியா ஒரு பாதுகாப்பான நாடு என்று உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை.

அங்குக் கடைவைத்து தொழில் செய்வோர்  என்ன நினைக்கின்றனர்  என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  ஒரு சிலர் கோடீஸ்வரர்களாக இருக்கலாம். அனைவரும் அப்படி அல்ல. மிகப்பலர் நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள்.  தொழில் என்றால் என்னவென்று தெரியும்.  `மிகப்பலர் கொடுக்கல் வாங்கள், வட்டிக்கட்டுவது, மாதத்தவணைகள்,  கடை வாடகை இப்படி எத்தனையோ. அவர்களிடம் வேலை செய்பவர்களின் நலனையும் பார்க்க வேண்டும். 

இது மிகவும் சிக்கலான பிரச்சனை.  அவர்களுடைய நெருக்கடி என்னவென்று அவர்களுக்குத்தான் தெரியும்.  இதன் மூலம் எத்தனை பேர் தொழிலை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்  என்பது தெரியவில்லை.  அப்படி நடக்காது என எதிர்பார்ப்போம்.  அப்படி நடந்தால் நமது சமுதாயத்திற்கு அது நஷ்டம் தான்.  தொழில் தொடங்க என்ன பாடுபடுகிறோம்?  அது எளிதல்ல என்று நமக்குத் தெரிகிறது அல்லவா? அப்படியிருக்க நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்  ஒரு தொழிலை இழுத்து மூடிவிட்டுப் போவதை  எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது?

என்ன தான் நாம் பேசினாலும் பாதுகாப்பு கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. நேரம் காலத்தை  வீணடிக்காமல் எவ்வளவு சீக்கிரத்தில்  பழுதினைச் சரிசெய்ய முடியுமோ அதனைச் சரிசெய்ய அவர்களிடமே விட்டுவிடுங்கள். அரைகுறை வேலைகள் எல்லாம் இனி எடுபடாது. மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  எப்படியாவது செய்து, எதையாவது செய்து ஒப்பேத்தும் வேலைகள் இனி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரசாங்கம் தனது கடமையைச் செய்யட்டும். அவசரப்படுத்தாதீர்கள். மீண்டும் பழைய நிலைமைக்குப் போகக் கூடாது என்பது தான் முக்கியம்.

மீண்டும் மஸ்ஜிட் இந்தியா ஒரு சுறுசுறுப்பான வியாபாரத் தலமாக மாறும் என் நம்புவோம்.

Sunday 15 September 2024

தாய் மொழியில் பேசுங்கள்



தாய் மொழியில் பேசுவதை எந்தக் காலத்திலும் நிறுத்தி விடாதீர்கள். எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.  எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். பேசலாம், படிக்கலாம்.  யார் என்ன குற்றம்  சொல்லப் போகிறார்கள்?  ஒருவரும் தவறு என்று சொல்லப் போவதில்லை.

நம் நாட்டில் நான்கு  மொழிகள் பிரதான மொழிகளாக இருக்கின்றன. மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ்  ஆகிய மொழிகள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நான்கு மொழிகள் அறிந்தவர்கள் பலர் இருக்கின்றனர். மூன்று மொழிகள் அறிந்தவர்கள் இன்னும்  அதிகமாகவே இருக்கின்றனர்.

நமக்குத் தமிழ் தெரியும் என்றால் அத்தோடு மலாய், ஆங்கிலமும் தெரியும்.  சீனர்களும் அப்படியே. மலேசியர்களில் பலர் மூன்று மொழிகளை அறிந்தவர்கள் தான்.  மூன்று மொழிகள் தெரிந்தவர்கள் தான்  வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை நாம் அவசியம் தாய் மொழியில் பேச வேண்டும்.  மொழி தாய்க்குச் சமம். தாய் மொழியை மறப்பதும் தாயை மறப்பதும் ஒன்று தான்.   மொழியை மறந்தால் இனம் அழிந்து விடும்.

தென் ஆப்பிரிக்கா,  டர்பன் மாநிலத்தில்  தான் இந்தியாவுக்கு அடுத்து இந்தியர்கள் அதிகமாக வாழ்கின்ற இடம் என்று சொல்லப்படுகிறது. அங்கு அதிகமான தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், குஜாராத்தியர்கள், பஞ்சாபியர்கள் - இப்படி  அனைத்து மொழி பேசும் இந்தியர்களும் வாழ்கின்றனர்.

சுமார் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அங்குப் போனவர்கள்  இப்போது தமிழை முற்றிலுமாக மறந்துவிட்டனர்.  பழைய தலைமுறையினர் ஓரளவு தமிழ் பேசினாலும் இப்போதைய தலைமுறையினர்  தமிழையே மறந்துவிட்டனர்.  ஆங்கிலமே தாய்மொழியாகி விட்டது!

ஆனால் நாம் கொடுத்து வைத்தவர்கள்.  இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக  நமது நாட்டில் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன.  ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக  தமிழ்ப்பள்ளிதான் முதல் முதலாக தொடங்கப்பட்டது இந்நாட்டில்.  தமிழ்ப்பள்ளிகள்  இன்னும்  பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அதுவே நமக்குக் கிடத்த மிகப்பெரிய பாக்கியம்.

ஆக, முடிந்தவரை தமிழரிடையே தமிழிலேயே  பேசுங்கள். தமிழ் தெரியும் போது வேற்று மொழி  பயன்படுத்துவதை தவிர்க்கவும்.  குழந்தைகளுடன்  தமிழிலேயே பேசுங்கள்.  அவர்கள் 'நாம் தமிழர்'  என்பதை அவர்களிடம் சொல்லி வளருங்கள்.

நம் மொழியை வளர்ப்போம். வாழ்த்துகள்!

Saturday 14 September 2024

பரிட்சையே இல்லாத கல்வி!

 

பரிட்சையே இல்லாத கல்விமுறையை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  

இது சரியா தவறா என்கிற விவாதம் இப்போது  நடந்து கொண்டிருக்கிறது.  மற்ற நாடுகளில் எப்படியோ தெரியாது ஆனால் நம் நாட்டில் இது சரி என்று நம்மால் ஒப்புக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை.

மாணவர்களின் கல்வித்திறனை இது பாதிக்கவே செய்யும். பெற்றோர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களும் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல்  சம்பளத்தை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கும்  நிலை தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.  கடைசியில் எஸ்.பி.எம். எடுக்கும் போது அந்த வகுப்பு ஆசிரியர்கள் தான் படாதபாடுபடும்  நிலையில் இருப்பர்.  காரணம் பத்து ஆண்டுகள்  படிக்க வேண்டிய பாடங்களை அந்த கடைசி ஆண்டு தான் மாணவர்கள் விழுந்து விழுந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.  திறமை உள்ள மாணவர்கள் ஒரு சிலர் வெற்றி பெறுவார்கள்.  மற்றபடி  வெற்றி பெறுபவர்கள் அபூர்வமாகவே இருப்பர்.  ஆனாலும் இவர்கள் தான் டாக்டராக வேண்டும், எஞ்சினியராக வேண்டும், வழக்கறிஞராக வேண்டும், நாட்டின் அமைச்சர்களாக வேண்டும் - எல்லா 'வேண்டும்' களுக்கும் இந்த  மாணவர்கள் தான் நிறைவு செய்ய வேண்டும். 

இப்போதே அரசாங்க அலுவலுகங்களில் வேலை செய்யத் தெரியாதோர் பலர்  பொது மக்களையே செய்யச் சொல்லி வேலை வாங்குகின்றனர்!  நாட்டில் ஏற்படும் கல்வி வளர்ச்சி தான் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை. கல்வி வளர்ந்திருக்கிறதா?  உண்மையைச் சொன்னால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.   ஓர் இனத்தை  செயற்கையான  முறையில்  அறிவுள்ளவர்களாகக் காட்ட வேண்டும் என்கிற நிலையில் தான்  கல்வி அமைந்திருக்கிறது.  சிங்காரித்து அலங்கரிப்பது போன்ற ஒரு வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. பரிட்சையே வேண்டாமென்றால்  கல்வியே  தேவை இல்லை என்கிற நிலை தான் ஏற்படும்.

பரிட்சையே வேண்டாமென்றால்  பயன் பெறுபவர் யார்?  வசதி உள்ளவர்களின் வீட்டுப்பிள்ளைகள் தான். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்கப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் 'அனைத்துலகப்பள்ளி'களுக்குத் தான் தரமான கல்வி கற்க அனுப்புவர்.  அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இதில் அனைத்து இனத்தவரும் அடங்குவர். அதிகமானோர் மலாய்ப்பிள்ளைகள், சீனப்பிள்ளைகள் அடுத்து இந்தியர்.

நம்மைப் பொறுத்தவரை அரசாங்கம் தரமானக் கல்வியைத் தான் கொடுக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இவர்கள் கொண்டு போகும் நடைமுறை யாருக்கும் பயனில்லாதது. அதனால் பரிட்சைகள் வேண்டும்.   எஸ்.பி.எம். பரிட்சைக்கு முன்னர்  முன்பு நடந்துவந்த இரண்டு பரிட்சைகளும் தொடர வேண்டும் என்பதே  நமது கோரிக்கையாகும்.

Friday 13 September 2024

இளைஞர்களே இப்படியா?


 சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

நமது இளைஞர்களைப் பற்றிய செய்தி தான்.  இவர்கள் எல்லாம் படிக்காதவர்கள்  என்று சொல்ல முடியாது.  படித்தவர்களோ படிக்காதவர்களோ  பொதுவாக மலேசியர்களுக்குத்தான் கெட்ட பெயர்.

முதலில் இவர்கள் கொம்யூட்டரில் பயணம் செய்வதற்கு அது ஆண்களுக்கானதா அல்லது பெண்களுக்கான  பெட்டிகளா என்று பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ஆனால் இந்த இளைஞர்கள் வேண்டுமென்றே, கலாட்டா செய்யும் நோக்கத்தோடே, பெண்கள் பயணிக்கும் பெட்டியில் பயணம் செய்திருக்கிறார்கள்.  அதுவே குற்றம்.

சரி அப்படியேபயணம் செய்தாலும் 'நல்ல பிள்ளைகளாக'  அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் மற்றவர்கள் எதிப்பார்ப்பார்கள்.
ஆனால் அவர்கள் அப்படியும் நல்ல பிள்ளைகளாக  நடந்து கொள்ளவில்லை.  அங்கும் அவர்கள்  தங்களது  'விளையாட்டுத்தனத்தைக்' காட்டியிருக்கிறார்கள்.  இரயில் பெட்டியிலிருந்த வயதானப் பெண்மணி ஒருவர், ஆஸ்திரேலியப் பெண்மணி என்று சொல்லப்படுகிறது,  அந்த இளைஞர்களுக்கு  ஓர் ஆசிரியர் பிள்ளைகளிடம் கடிந்து கொள்வது போல கடிந்து கொண்டிருக்கிறார்.

இவர்களெல்லாம் ஆசிரியர்களையே மதிக்காத பிள்ளைகள் என்று தெரிகிறது!  அதனால் அவர் சொன்னதைச்  சட்டைச் செய்யவில்லை.  மேலும்  ஒரு  சில நண்பர்களையும் பெட்டிக்குள் வரச் சொல்லி  இன்னும் கொஞ்சம் கலகலப்பாக கலாட்டாவில் இறங்கியிருக்கின்றனர். பேசாமல் கலாட்டாவோடு இருந்திருந்தால்  அத்தோடு அந்தப் பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மேல் போய் 'இது எங்க ஊரு மலேசியா!  நீ யாரு எங்களைப் பார்த்து  சத்தம் போடாதே என்று சொல்ல?"  என்பதாக நையாண்டி பண்ணியிருக்கிறார்கள்!   தவறு செய்யும்போது கூட "நாங்கள் மலேசியர்" என்று  கூறியது தான் நமக்கே  சங்கடத்தை ஏற்படுத்துகிறது!  

நாம் மலேசியர் என்று பெருமைப்பட ஏதாவது சாதனைகள் புரிந்திருந்தால்  பெருமைப்படலாம்.    தவறு செய்கிறோம் என்று தெரிந்திருந்தும், பெண்கள் பெட்டியில் ஏறுவதும், அங்குக் கலட்டா பண்ணுவதும், அதில் என்ன அப்படியொரு பெருமையைக் கண்டு விட்டார்கள் என்பது நமக்கும் புரியவில்லை.

இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல தான்.  ஆனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனை.  வெளி நாடுகளிலிருந்து  சுற்றுப்பயணிகள் நாட்டுக்குள் வரவேண்டும்  என்று அரசாங்கம் தவித்துக் கொண்டிருக்கிறது.  இது போன்ற சில்லறைத் தனங்கள் நாட்டின் பெயரை கெடுத்துவிடும்.   ஏற்கனவே மஸ்ஜிட் இந்தியா நாட்டின் பெயரைக் கெடுத்துவிட்டது.  இது அதைவிட இன்னும் மோசம்.

நமது இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று என்றால் இன்னும் புரியவில்லை. காரணம் எல்லாமே ஏதோ 'கடமைக்கு' என்று போதிக்கப்படுகிறது.  அதனால்  எல்லாமே சும்மாகிடைக்கிறது என்கிற எண்ணத்தோடு இளைஞர்கள் திரிகின்றனர்.  இது நல்லதல்ல. 

இளைஞர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்கள் இல்லை. அதனால் வருகிற விபரீதம் இது. நல்லதே நடக்கட்டும். வாழ்க மலேசியா!


Thursday 12 September 2024

நல்ல நேரம் பிறக்குது!

"நல்ல காலம் பிறக்குது"  எனபது குடுகுடுப்பைகாரர்களின் நம்பிக்கையூட்டும் சொற்கள். நம்ம ஊரில் நான் எந்த குடுகுடுப்பைக்காரரையும் பார்த்ததில்லை. எல்லாம் தமிழ் சினிமா மூலம் தெரிந்து கொண்டவைகள் தாம்.

சேவல் கூவுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவும் நம்பிக்கைத் தரும்  வார்த்தையை நமக்குக் கூறுகிறது.  நலல நேரம்! நல்ல நேரம்!  என்று கூவுகிறது!  நாம் தான் அதனைப் புரிந்து கொள்வதில்லை!

அந்த சேவலைப் பாருங்கள். காலையில் எழுந்ததும் என்ன சுறுசுறுப்பு. "நேராமாயிருச்சி" என்று சொல்லி ஊர் மக்களையே எழுப்பி விடுகிறதே! நமக்கு மட்டும் ஏன் அந்த சுறுசுறுப்பு என்பதே வருவதில்லை?  காலையில் நாம் காட்டுகிற அந்த சுறுசுறுப்புதான்  அன்று மாலை முழுவதும் நம்மோடு இருக்கும் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? சேவல் நடக்கும் போது அதன் கம்பீரம், அதன் ராஜநடை, நலையைத் தூக்கிக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு  நடக்குமே!   காலை நேரத்தில் நாமும் அப்படி நடந்தால் எப்படி இருக்கும்?  காலையிலேயே கம்பீரமாக நடந்து பழகலாமே.  கம்பீரம் இருந்தால் தான் நாலு பேர் நம்மைப் பார்த்துப் புன்னகையாவது புரிவார்களே!

ஒரு சிலர் காலை நேரத்திலேயே உடம்பில் தெம்பே இல்லாமல்  நடப்பதைப் பார்க்கிறோம்.  இதைத்தான் "விடியா மூஞ்சி"  என்பார்கள். இவன் முகத்துல முழிச்சாலே தரித்திரம் தான் பிடிக்கும் என்பார்கள்!

காலை நேரம் என்றால் குளித்து, கொஞ்ச அழகு படுத்தி, வேலைக்குப் போவதோ, வெளியே போவதோ பார்ப்பதற்கு  அழகாக இருக்கும்.  காலை நேரம் அப்படித்தான் இருக்க வேண்டும். காலை வேளையில் இந்த சேவல் மட்டும் அல்ல உங்களது நாய், பூனைகளைப் பாருங்கள். சும்மா உடலை ஒரு முறுக்கு முறுக்கி, உடலை ஓருதரம்  உதறித்தள்ளி தன்னை சுறுசுறுப்பாக  வைத்துக் கொள்ளும்.  நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்கும் போது நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.

நல்ல நேரம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது!

Wednesday 11 September 2024

ஹலால் தேவைதானா?

உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழ் தேவையா  என்கிற சர்ச்சை இப்போது கடுமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஹலால் சான்றிதழுக்கான, நம்மைப் பொறுத்தவரை, தேவை என்று நாம் நினைப்பதை மிக எளிதாகவே சொல்லிவிடலாம்.  அந்த உணவகங்களில்  பன்றி, மதுபானங்கள் பயன்படுத்தப்படாது  என்பது தான்.  நமது புரிதலும்  அவ்வளவுதான்.

அப்படியே அந்த சான்றிதழ்கள் இல்லையென்றாலும்  நமக்குத் தெரிந்தவரை மலாய் உணவகங்கள் மதுபானங்கள், பன்றி இறைச்சியைப் பயனபடுத்துவதில்லை என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதேபோல அவர்கள் மாட்டிறச்சியைப் பயன்படுத்துவதால் இந்துக்கள் அங்குப் போவதில்லை.   இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு.  சீன உணவகங்கள் பன்றி இறைச்சியைப் பயன்படுத்துகின்றன. இந்திய உணவகங்கள் அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லலாம். அவர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிகளைப் பயன்படுத்துவதில்லை.  இந்த நடைமுறை என்பது ஹலால் சான்றிதழ்  வருவதற்கு முன்னரே உண்டு.  ஹலால் சான்றிதழ் இல்லையென்றாலும்  இப்படித்தான் நடக்கும்.

இப்போது ஹலால் சான்றிதழ் அனைத்து உணவகங்களுக்கும் கட்டாயம் என்கிற நிலை வரும் போது  அது பலவகைகளில்  தொழிலைப் பாதிக்கும் என்கின்றனர் உணவுத் தொழிலில் உள்ளவர்கள்.  

இன்றைய நிலையில் பல்வேறுவகைகளில் தொழில்கள் பாதிப்படைந்திருக்கின்றன. தொழில் செய்வோர் பலர் பிரச்சனைகளில்  மாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இது போன்று சிக்கல்களை மேலும் உண்டாக்குவது தேவையா என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

அப்படியே ஹலால் சான்றிதழ் தேவை என்றால் அதனை எளிமைப்படுத்த வேண்டும்.  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும்  உணவுகளுக்குக் கடுமையான சட்டதிட்டங்கள் வைப்பதற்கு  நியாயம் உண்டு.  உள்நாட்டு உணவகங்களுக்குத் தேவை இல்லை.  எளிமையாக்கலாம்.   

நமது தேவை எல்லாம் உணவகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். உணவுகள் சுத்தமாக இருக்க வேண்டும். இப்போது எத்தனை ஹலால் சான்றிதழ்  பெற்ற  உணவகங்கள் சுத்தத்தைக் கடைப்பிடிக்கின்றன என்று சொல்ல முடியுமா?   சுத்தமற்ற உணவகங்கள் என்றால்  அவை பெரும்பாலும் ஹலால் சான்றிதழ்கள் பெற்றவைகள் தாம்!  மக்களுக்குக் கெடுதலைக் கொடுக்கும் இது போன்ற உணவகங்களுக்குச் சான்றிதழ் தேவையா? என்பதை யோசிக்க வேண்டும்.

வெளிநாட்டுக்கு ஹலால் சான்றிதழ் தேவை தான். உள்நாட்டுக்கு...........?

Tuesday 10 September 2024

வாழ்க! வெல்க!

                  India-Gate    உணவகத்தின் 10-வது கிளையின் திறப்பு விழா 

அனைவருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துகிறோம்.  இன்னும் பல தொழில் அதிபர்கள்  தொடர்ந்து உணவகங்கள் திறக்க வேண்டும். திறம்பட நடத்த வேண்டும்.  தொழில் தொடங்க விரும்புவர்களும், அனுபவம் நிறைந்தவர்கள், வசதி வாய்ப்பு உள்ளவர்கள்  எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்.  யாரும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை.

நம்முடைய ஆதங்கம் எல்லாம்   புதியவர்கள் பலர் தொழில்களுக்கு வரவேண்டும்.  அரசாங்கத்தை நம்பி வராதீர்கள். உங்களை நம்புங்கள்.  நம் சகோதர மலேசியர்களை நம்புங்கள். வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து பலர் தொழில் செய்கின்றனர்.  நம்மால் முடியாது என்று சொல்லுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

ஆனால் தமிழ் நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துகிறீர்கள்.  அவர்களுடைய சம்பளத்தில் கைவைக்காதீர்கள் அவர்களைக் கொடுமைப் படுத்தாதீர்கள்.  ஒருவனை அடித்து, ஏமாற்றி, கொடுமைப்படுத்தி அவனை வேலை வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் தொழில் செய்ய இலாயக்கில்லை. சிறைக்கதவுகள்  உங்களுக்காகக் காத்துக்கிடக்கிறது  என்பதை மறந்து விடாதீர்கள்.

தொழில் செய்வது என்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்லுவதை எல்லாம் நம்பாதீர்கள்.உங்கள் உழைப்பை நம்புங்கள். நம்பகரமான  வேலையாட்களை வைத்துக் கொள்ளுங்கள். கணக்குவழக்குகளுக்குத் தனியாக ஒரு ஆளை அமர்த்திக் கொள்ளுங்கள்.  இது அவசியம்.  நீங்கள் வளருகிறீர்களா கீழ் நோக்கி இறங்குகிறீர்களா என்பதை உங்கள் கணக்குவழக்குகள் காட்டும். 

நம்மில் பலர் கணக்குவழக்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை.  எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று அப்பன்காலத்துக் கதையையே பேசிக் கொண்டிருக்காதீர்கள்.  கணக்குவழக்குகள் தான் நமது நிலையைக் காட்டும் கண்ணாடி.

நம் இந்தியர்கள் இன்னும் நிறைய தொழில்களைத் திறக்க வேண்டும். தொழில் அதிபராக மாற வேண்டும்.  நாம் ஒரு வியாபார சமூகம் என்று பெயர் எடுக்க வேண்டும்.  நமது நிலை உயர வேண்டும்.  நம் தமிழ் முஸ்லிம்கள், தமிழ் செட்டியார்கள் - இவர்களைப் போன்று  நாமும் வியாபார சமூகமாக மாற வேண்டும்.

தொழிலில் ஈடுபடும் அனைவரையும் வாழ்த்துகிறோம்!

Monday 9 September 2024

"மாஸ்" தலை தூக்குமா?


 மலேசிய விமான நிறுவனமான "மாஸ்"  தொடர்ந்து பறக்குமா என்கிற சந்தேகம் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தாலும், என்னவோ பறக்கிறது!, என்று மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தாலும் பறந்து கொண்டு தான் இருக்கிறது.  அதுவரை நமக்கும் மகிழ்ச்சியே. அத்தோடு எத்தனை நாளைக்கு?  என்றும் கேட்கத் தோன்றுகிறது!

வழக்கம் போல இந்த விமான நிறுவனம் குட்டிச்சுவராகி போனதற்கு  டாக்டர் மகாதிர் தான் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.   விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை  என்னும் போக்கு உடையவர் அவர்!  இன்றுவரை கோடி கோடியாகப்  பணத்தைக் கொட்டினாலும்  அதனால் தலைநிமிர முடியவில்லை!  வயிற்றெரிச்சல் என்னவென்றால் மக்களின் பணத்தை வாரி வாரி கொட்டியிருக்கிறார்கள்!   அதில் பல பேர், அரசியல்வாதிகள்  உள்பட, பெரும் பணக்காரர்களாக     மாறியிருக்கிறார்கள்.   விமான நிறுவனத்திற்கு மட்டும்  எந்த விடிவும் பிறக்கவில்லை!

அரசியல்வாதிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டால்  இப்படித்தான் ஆகும் என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு  மாஸ் விமான நிறுவனம், மைக்கா ஹோல்டிங்ஸ் போன்றவை. எல்லாம் பண முதலைகள்! கொள்ளையடிப்பதையே நோக்கமாகக்  கொண்டவர்கள்!  அனைத்தும் பறிபோய்விட்டன!

ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம்.  எல்லா வசதிகளும் கொண்ட  ஒரு நிறுவனம். நல்லதொரு பெயருடன் விளங்கிய நிறுவனம்.  ஆனால் இன்று மலிவு கட்டண விமானத்தில்  நாம் எப்படிப்பட்ட நிலையில் பயணம் செய்கிறோம்? உட்கார்ந்து காலை நீட்டக்கூட முடியாது ஒரு விமானத்தில் பயணம் செய்கிறோம்.  ஆனாலும் அதனை நாம் குறை சொல்லுவதில்லை.  காரணம் குறைந்த கட்டணம்.  வழக்கமான உபசரிப்புகள். அனைத்தும் உண்டு.  குறைவான கட்டணம் என்னும் போதே  எந்த நெருக்கடிகளையும் நாம் பொருட்படுத்துவதில்லை. சில  அசௌகரியங்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம்.

ஆனால் இதைவிட இன்னொரு விசேஷம் உண்டு.  ஏர் ஏசியா  தனியார் நிறுவனம்.. ஏதும் கடன் சுமைகள் இருந்தால்  அவர்கள் தான் அதனைச் சுமக்க வேண்டும்.  ஓடிவந்து காப்பாற்ற ஆளில்லை.  அதனால்  அவர்கள் தான் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு  இலாபத்தைக் கொண்டு வரவேண்டும். மாஸ் அந்த வகையில் ராசி உள்ள நிறுவனம்.  எவ்வளவு நட்டம் ஆனாலும்  அந்த நட்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் தயாராக இருக்கிறது! அதனால் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைப் போட்டும்  நிறுவனத்தை மீட்க முடியவில்லை!  நட்டத்தைக் கடவுள் செயல் என்று கணக்கில்  எழுதிவிட்டால் அனைத்தும் முடிந்து விடும்!

இந்தியாவில் நன்றாக ஓடிய ஏர் இந்தியா விமானத்தை அரசாங்கம் வாங்கி  சில ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் தனியாரிடமே ஒப்படைத்துவிட்டது. நமது மாஸ் நிறுவனத்துக்கும் அந்த நிலை வரும். தனியாரிடம் தான் போய்ச் சேர வேண்டும்.  வேறு வழியில்லை!

Sunday 8 September 2024

ஊழலை ஒழிக்க முடியுமா?

ஊழலை ஒழிக்க ஏதேனும் வழிகள் உண்டா?  இப்போது நாடு ஊழல்களால்  தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இப்போதும் ஊழல்கள் குறைந்து விட்டதாக எந்த அறிகுறியும் இல்லை.  என்னவோ சிலர் பிடிபடுகிறார்கள். சிலர் தப்பித்து விடுகிறார்கள்.  ஆனாலும் மேட்டுக்குடி  மக்கள்  அரசியலை வைத்து ஏற்கனவே  கோடிகோடியாக குவித்தவர்கள்  இருக்கிறார்கள்.  அவர்கள் மீது கைவைக்க முடியவில்லை.

அப்படியே கைவைத்தாலும் அவர்களைக் கைது செய்ய முடியவில்லை.. காரணம் அரசியல் திருடன் தான் மாட்டிக் கொள்ளாதவாறு  மிக எச்சரிக்கையாய் இருப்பான்!

எப்படியோ ஊழல்வாதிகளின் மேல் கைவைக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. அவர்களிடமிருந்து பணத்தையும் கறப்பது அவ்வளவு எளிதல்ல.

ஒரே வழிதான் உண்டு. அது தான் அவர்களை மண்டியிட வைக்கும்.. அவர்களின் சொத்துக்களின் மீது கைவயுங்கள். சொத்துக்களிலிருந்து  எந்த வருமானமும் வராதவாறு முடக்கிவிடுங்கள். முற்றிலுமாக அரசாங்க சொத்துக்களாக  அவை மாற வேண்டும்.  அப்போது தான் இந்தக் கொள்ளைக்காரர்களுக்குப்  புத்திவரும்.  வேறு வழிகளில் இவர்களைத் திருத்த வழியில்லை!  இந்த அரசியல்வாதிகளிடம் உள்ள சொத்துக்களே போதும் இந்த நாட்டில் உள்ள பொருளாதார சிக்கல்களைத் தீர்த்துவிடும்!

இவர்களிடம் எந்த தயவு தாட்சண்யத்தையும்  எதிர்ப்பாரக்கக் கூடாது. அது தான் நாட்டு நலனுக்கு நல்லது.  இவர்கள் பதவியில் இருந்தபோது மக்கள் நலனில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.  பணம்  ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.  இப்போது அவர்களுக்குத் தண்டனை, அவ்வளவுதான்.

வேறுவகையில் நாம் இவர்களைத் தண்டிக்க முடியாது. திருத்தவும் முடியாது.  ஆனால் இவர்களுக்குத் தண்டனை அவசியம்.  அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை.

அரசாங்கம் மனம் வைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்.  முடியாது என்பதாக ஒன்றுமில்லை.

Saturday 7 September 2024

இப்படித்தான் பேசுவதா?

விஜயலட்சுமி என்றாலே நாடறிந்த பெயராகி விட்டது.  மஸ்ஜித் இந்தியா என்றாலே அவர் தான் என்றென்றும் ஞாபகத்திற்கு வருவார். இந்திய சமூகத்திடமிருந்து இனி அவரைப் பிரிக்க முடியாது.

அவர், நிலம் உள்வாங்கியதில் போனவர் தான். போயே விட்டார்.  இனி கிடைப்பார் என்கிற எந்த அறிகுறியும் இல்லை.  இனி அடுத்த "வேலையைப் பாருங்கப்பா" என்கிற நிலைமைக்கு அரசாங்கமும் வந்துவிட்டது.

இப்போது விஜயலட்சுமிக்குக் கொடுக்கப்பட்ட  நிவாரணத் தொகை பேசுபொருளாக மாறியிருக்கிறது! எப்படிக் கொடுக்கப்பட்டது, எப்படி கணக்கிடப்பட்டது,  இது போன்ற சம்பவங்கள் மற்ற நாடுகளில் நடந்திருந்தால்  அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவாரணம் எப்படிக் கணக்கிடப்பட்டது  என்று  அலசிஆராய  நமக்கு எந்த வழியும்  தெரியவில்லை.  ஒரு வேளை உலகளவில் இதுவே முதல் சம்பவமாகக் கூட இருக்கலாம். இதனை ஆய்வு செய்ய நம்மால் இயலாது.  வேண்டுமானால் குறைகள் சொல்ல ஏகப்பட்ட வழிகள் உண்டு! 

நம்முடைய ஆதங்கம் எல்லாம் நமது தலைவர்களைப் பற்றி தான். இந்தத்  தொகைக் குறைவு என்பதாக தலைவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். உண்மை என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இப்படிக் குறை சொல்லுவதை தலைவர்களுக்கு முன்பே குப்பனும் சுப்பனும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்!  நாம் என்ன பேசுகிறோமோ அதைத்தான் தலைவர்களும் பேசுகிறார்கள்!  நாங்கள் பேசுவதற்குக் காப்பிக்கடைகள் நீங்கள் பேசுவதற்கு நாடாளுமன்றம்.  ஆனால் அங்குப் பேசுவதற்கு உங்களால் முடியவில்லை.  எங்களைப் போலவே நீங்களும் பேசுகிறீர்கள் இன்னும் அறிக்கை விடுகிறீர்கள். ஏறக்குறைய காப்பிக்கடை பேச்சாளராக ஆகிவிட்டிர்கள்! நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளலாமே! எதற்கு ஒய்பி என்கிற அடைமொழி.

இதற்குப் பதிலாக தலைவர்கள் ஒன்று சேர்ந்து,   அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஒன்று சேர்ந்து,  கோலாலம்பூர் மேயர் அல்லது அதன் தொடர்பான அமைச்சரை  சந்தித்து இந்தப் பிரச்சனையை  அணுகியிருக்கலாமே?  அதற்கு யாருமே தயாராக இல்லை  காரணம் உங்களிடம் ஒற்றுமை இலலை. நீங்கள் ஒற்றுமையாய் இருங்கள் என்று நாங்கள் தான்  சொல்ல வேண்டியிருக்கிறது!  ஒற்றுமை அரசாங்கத்திற்கு இப்படி ஒரு நிலையா?  வேதனை! வேதனை!

எங்களுடையக் காப்பிக்கடை உரிமையைத் தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள்!  நாம் பேசுவதையே அவர்களும் பேசுகிறார்கள். இனி நமக்காக யார் பேசுவார்? நமக்கு நாமே பெசிக்கொள்ள வேண்டியது தான்!

Friday 6 September 2024

இலக்கில் தெளிவில்லையோ!

 

இந்தியர் உருமாற்றுத்திட்டத்தில் முதன்மையான அமைப்பு என்றால் அது மித்ரா வைத்தவிர வேறு எந்த அமைப்பும் இல்லை.

அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியே முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகளே  மித்ராவின் மூலம் அதிகப்பயன் பெற்றதாகத் தகவல்கள் கூறின.  சரி, ஏதோ சில அரசியல்வாதிகளாவது பயன்பெற்றார்களே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியது தான்!

இப்போது அது பற்றி பேசுவதை விடுத்து  மித்ராவின் இன்றைய நிலை என்ன  என்பது தான் முக்கியம். மித்ரா இப்போது சிறு வர்த்தகர்களுக்கு எந்த வகையிலும் உதவும்  என்கிற நம்பிக்கையில்லை.  அவர்களின் நோக்கமே மொத்தமாக பணத்தை விநியோகம் செய்வதற்கு எளிதான வழியைத்தான் தேடுகிறார்கள்!

சிறு வர்த்தகர்களுக்கான உதவி கரம் நீட்ட  பல ஆண்டுகளாக 'தெக்கூன்' செயல்பட்டு வருகிறது. அது இப்போது டத்தோ ரமணன் வருகைக்குப் பின்னர் இந்தியர்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர்.  டத்தோ வருகைக்கு முன்னர் தெக்கூன் ஏதோ 'நமக்கு எதிரி' என்று தான் பார்க்கப்பட்டது. அவர்கள் நிறையவே உதவுகிறார்கள்.  இப்போது மித்ரா நமக்கு எதிரி போன்று செயல்படுகிறார்கள்!  இவர்கள் களத்தில் இறங்கி  செயல்படத் தயாராக இல்லை.  அவர்களுடைய விண்ணப்ப பாரங்களைக் கூட  எளிமைப்படுத்த தயாராக இல்லை!

மித்ரா தனது இலக்கை மாற்றிக் கொண்டதோ என்று தான் நாம் நம்ப வேண்டியுள்ளது. இனி அவர்களுடைய கடனுதவி என்கிற  இலக்கு இல்லையென்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தி  அதற்கான செலவை மொத்தமாக அப்படியே ஏற்றுக் கொள்வது இன்னும் வேலை பளுவைக் குறைக்கும்.   நாம் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது. அதிகாரம் அவர்களிடம் உள்ளது.  நமது கேள்விகளுக்கு இவர்கள் பதில் கொடுக்கத் தயாரில்லை!

வழக்கம் போல் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday 5 September 2024

அடுத்தக்கட்ட வேலை ஆரம்பமாகிவிட்டன!


 நமது வாழ்க்கையில் என்ன அசம்பாவிதங்கள் நடந்தாலும்  அத்தோடு எதுவும் முடிந்துபோய் விடுவதில்லை.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடந்தது ஒரு விபத்து. அது நாட்டில் பெரியதொரு அனுதாப அலையை ஏற்படுத்தியது.  அதுவும் சில நாட்களில் மறைந்து போனது.  அவ்வளவு தான்.  எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும்  ஒருசில நாட்கள் தான். அப்புறம் அது காணாமல் போய்விடும்!  இயல்பு வாழ்வு தொடங்கிவிடும்.

அந்தப் பெண்மணி காணாமல்  போனதில் அனைவருக்கும் வருத்தம் தான். அதற்காக மற்ற வேலைகளை அப்படியே விட்டுவிட முடியாது.  மஸ்ஜித் இந்தியா இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். அங்கிருக்கும் வர்த்தக நிறுவனங்களை ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தொழில்களை நம்பி பல நூறு குடும்பங்கள்  இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது.  இலட்சங்கள், கோடிகளைச் சம்பாதிக்கும் நிறுவனங்கள் உள்ளன.  அவர்களின் தொழில்கள் பழைய நிலைக்குத் திரும்புவது அவசியம்.  

உடனடி தேவை எல்லாம்  பாதிக்கப்பட்ட இடங்கள் முற்றிலுமாக  சரிசெய்யப்பட வேண்டும் என்பது தான்.  அவசரம் அவசரம் என்று சொல்லி தரக்குறைவான வேலைகளைச் செய்யக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே 'சிஞ்சாய்' வேலைகள் என்று குறிப்பிடுவதுண்டு.  யாருக்கும் நல்லெண்ணம் இல்லை. இனிமேலும் வருமா என்று சொல்லுவதற்கில்லை.  காரணம் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்வரை 'சிஞ்சாய்' என்றே  சொல்லிப் பழகிவிட்டோம்.

ஏற்கனவே,  பழுது பார்க்கும் வேலைகள்  ஆறு மாதம்வரை இழுக்கும்  என்று அதிகாரிகளால் சொல்லப்பட்டது.  அப்படியென்றால் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லையோ!  சாக்குப்போக்குகள் சொல்லாமல் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பழுது பார்க்கும் வேலைகள் முடிக்கப்பட வேண்டும் என்பது தான் நமது  ஆலோசனை.

எப்படி இருந்தாலும் பழுது பார்க்கும் வேலைகள் மும்முரமாகவும் தீவிரமாகவும்  நடைபெறுவதில் நமக்கு மகிழ்ச்சியே!

Wednesday 4 September 2024

பொருளாதார பங்குடமை!

 

இந்தியர்களின் பொருளாதார பங்குடைமை உயர்வு காண வேண்டும் என்பதில் நமக்கு  எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால் இப்படிச் சொல்லும் போதே நமக்கு ஓர் ஒவ்வாமை வருகிறது!  என்ன செய்வது? இப்படி எல்லாம் சொல்லி  நமது அரசியல்வாதிகள் இந்திய சமூகத்தை படுபாதாளத்திற்குத் தள்ளி விட்டுவிட்டனர்!  அப்போது அவர்கள் "தங்களின்" பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகத்தான் அப்படிச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே பல ஆண்டுகள் பிடித்துவிட்டன!  அவர்களும் இந்தியர்கள் தானே, குறை சொல்ல வழியில்லை!

இப்போது அதே பிரச்சனையை அரசியல் அல்லாதவர்கள் பேசியிருக்கிறார்கள். நல்ல சகுனம் தான்.  கோலாலம்பூர் மற்றும் புத்ராஜயா இந்திய வர்த்தக சம்மேளனம் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது.

நாம் இன்றளவில் பங்குச் சந்தையில் 1.1. விழுக்காடு  என்றளவில் தான் இருக்கிறோம். அட! எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப் போகிறோம்?  எத்தனை காலம் தான் நாம் இப்படியே சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறோம்? துன் சாமிவேலு காலத்திலிருந்து இதுவரை நிலைமை மாறவில்லை.  அன்றிருந்த நிலை தான் இன்றும்.

யாரால் இதனை மாற்ற முடியும்?  வர்த்தக சங்கம் தான் முயற்சிகளை எடுக்க வேண்டும்.  சிறு தொழில்கள் செய்வதற்கான சூழல்கள் சிறப்பாகவே இருக்கின்றன..  மித்ரா அமைப்பு தனது கதவுகளை மூடிவிட்டாலும் தெக்கூன்  போன்ற அமைப்புகள் கடனுதவிகளை  நிறையவே  செய்கின்றன. 

ஆனால் எல்லாவற்றையும் விட நமது மக்களின் முயற்சிகள் அதிகரிக்க வேண்டும்.  வேலை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் காலகட்டத்தில்  நாம் சொந்தத் தொழிலில் இறங்குவது காலத்தின் கட்டாயம்.

தொழில் என்பது நமக்குப் புதிதல்ல. தொடக்க காலத்திலிருந்தே நாம் தொழில் செய்து வந்திருக்கிறோம்.  உண்மையில் நாம் வியாபார சமூகம். சீனர்கள் நமது செட்டியார்களிடம் கடன் வாங்கித்தான் தங்களது தொழில்களை ஆரம்பித்தார்கள் என்று இன்றளவும் சொல்லத்தான் செய்கிறோம்.  அவர்களைச் சுட்டிக்காட்டியதோடு நாம் திருப்தியடைந்து விட்டோம்!  நாம் எதையும் அசைத்துப் பார்க்கவில்லை!

எப்படியோ வர்த்தக சம்மேளனம் தனது முயற்சியைத் தொடர்ந்து  மேற்கொள்ளும் என நம்பலாம்.  அதைவிட நமது முயற்சியே முக்கியம் வாய்ந்தது என்பதையும் மறக்க வேண்டாம். நாம் ஒரு வர்த்தக சமூகமாக மாற வேண்டும்.  மாற முடியும்.

Tuesday 3 September 2024

ஆதரவு குறைகிறதா?

 

மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வு ஒன்றில் மலேசிய இனங்களிடையே உள்ள  உறவுகள் பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் எதுவும் முடிந்த முடிவாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஆனாலும் ஒரு சில விஷயங்களை நாமும் யோசித்துப் பார்க்கலாம்.   நாம் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறோம் என்பது தான் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது.  இன்றைய நிலை தான் நம்மைக் கீழ் நோக்கி இழுத்துக கொண்டுப் போகிறது  என்பது தான் குற்றச்சாட்டு. 

அரசாங்கத்திற்கு நம்முடைய ஆதரவு குறைகிறது என்பதற்கு முக்கிய காரணம் நமது அரசியல்வாதிகள் தான்.  தங்களது வாக்குவங்கியை நிரப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் தொடர்ந்து இந்தியர்களை  இழிவுபடுத்தி வருவதுதான். ஒரு வேளை அது பிற இனத்தவரிடையே மகிழ்ச்சி அளிக்கலாம்!

உண்மையில் இந்தியர்கள் எந்தக் காலத்திலும் அரசாங்கத்திடம் கையேந்தும் கூட்டம் அல்ல.  அப்படியொரு நிலையை உருவாக்கியவர்கள்  நமது அரசியல்வாதிகள்.  நாம் ஒரு கௌரவமான இனம். நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைக் கொடுத்தால் யாரிடமும் நாம் கையேந்தும் நிலையில் இருக்க மாட்டோம்.  நம்மிடமிருந்து அனைத்தையும் அபகரித்துவிட்டு நம்மைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டனர் நமது தலைவர்கள்.  எல்லா அயோக்கியதனத்தையும் செய்துவிட்டு இப்போது  "எங்களைப்பற்றி அவதூறு பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று  சவடால்தனம் பண்ணுகின்றனர்!

கல்வியில் நாம் தகுதி குறைந்தவர்களா? ஆனாலும் உயர்கல்வி நமக்கு மறுக்கப்படுகின்றது.  மருத்துவம் நமக்குக் கைவந்த கலை. ஆனாலும் நமக்குத் தகுதி இல்லையாம்.  சிறு சிறு தொழில்களில் ஈடுபட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. நமது அங்காடிகள் உடைக்கப்படுகின்றன.  கேட்பார் யாருமில்லை. வழிபாட்டுத் தலங்கள்  உடைபடுகின்றன. தமிழ்ப்பள்ளிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றன.

இந்த நிலையில் நாம் ஏன் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.  அதன் விளைவு தான் நமது ஆதரவு இன்றைய அரசாங்கத்திற்கு குறைந்து வருகிறது.  28 விழுக்காட்டினர் ஆதரவு தருகிறார்கள் என்றால் அவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்!  அவர்கள் தான் எந்த அரசாங்கம் வந்தாலும்    கவிழ்வதில்லை!

ஆதரவு குறைகிறதா கூடுகிறதா என்பது அடுத்து வரும் தேர்தலில் தெரிந்துவிடும்.

Monday 2 September 2024

துணை இயக்குனர் தேவையே

                                                   மலேசியத் தமிழ்ப்பள்ளி  

மலேசிய தமிழ்க்கல்வி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், செயளாருமான  திரு. ம.வெற்றிவேலன் அவர்களின்  அறைகூவலை நாம் சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  நாம்  அனைவரும்  ஆதரவுகரம் நீட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ்ப்பள்ளிகள் சமபந்தப்பட்ட  பிரச்சனைகளில் நாம் பேசுவதற்கு  முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தில் வழிகள் இருந்தன. யாரிடமோ ஏதோ ஒரு பொறுப்பு இருந்தது. குறைந்தபட்சம் கல்வி துணை அமைச்சர் பதவியாவது இருந்தது.

இப்போது எதுவும் இல்லை.  இருக்கின்ற துணை அமைச்சர் சீனக் கல்வி பற்றி மட்டுமே  பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  ஆக, தமிழ்ப்பள்ளிகளுக்கு யாரும் இல்லை. ஏனோ  பிரதமர் அன்வார் இப்ராகிம்  தலமையாலான பக்காத்தான் அரசாங்கம் தமிழ்க்கல்வி பற்றி கண்டு கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ இந்தியர்களின் ஆதரவை பிரதமர் அன்வார் இழந்து வருகிறார் என்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பிரதமர் அன்வாருக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்காமல் நமது உரிமைகளைப் பேசி, சந்திப்புக்களை நடத்தி  பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் எடுக்க வேண்டும்.

தமிழ்க்கல்வி என்பது இந்நாட்டுக்குப் புதிதல்ல.  இருநூறு ஆண்டுகளுக்கு மேலான  பாரம்பரியத்தைக் கொண்டது.  தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் இந்திய ஆசிரியர்கள் தான் அரசாங்கத்தில்  பணிபுரிபவர்களாகக் கணக்கிடப்படுகின்றனர்.  இவர்களை விட்டால்  அரசாங்கத்தில்  இந்தியர்கள் யார் பணிபுரிகிறார்கள்?  மிக மிக சொற்பமே.

தமிழ்ப்பள்ளிகளில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  யாரிடம் பேசுவது என்கிற குழப்பம்? சீனரோ, மலாய்க்காரரோ  அதனைப் புரிந்துகொள்ள வைக்க முடியாது.  தமிழ்ப்பள்ளிகளில் கல்விகற்ற ஒருவர் இயக்குநர்களில் ஒருவராகப் பணி புரிந்தால்  பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டுசெல்ல எளிதாக இருக்கும்.  சீனக் கல்விக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதனையே தமிழ்க்கல்விக்கும் எதிர்பார்க்கிறோம்.

பிரதமர் அன்வார் அவர்களின், வழக்கம் போல, அவரின் தயவுக்காக  நாம் காத்துக் கிடக்கிறோம். நமது  இந்திய அரசு சாரா இயக்கங்களும் இதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த, கேள்விகள் எழுப்ப சரியான நேரம் இது.

பேச்சு வார்த்தைகளின் மூலம் எதுவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். வாழ்க நம் நாடு! வாழ்க நம் மக்கள்!

Sunday 1 September 2024

புறக்கணிக்கலாம் ....ஆனால்...

 

மலேசிய  உலாமாக்கள் சங்கம் சொல்ல வருவது நமக்குப் புரிகிறது.  இஸ்ராயேலுக்கு ஆதரவான நிறுவனங்களைப் பறக்கணியுங்கள்  என்பது சரியானது தான்.  நாம் எந்த வகையிலும் இஸ்ராயேலை ஆதரிக்கப் போவதில்லை.

ஆனால் நாம் ஒரு சிக்கலான நிலையில் இப்போது இருக்கின்றோம்.  இன்று நாட்டில் வேலையில்லாப்  பிரச்சனை என்பது மிக மோசமான நிலையில் இருக்கின்றது.  நமது மக்கள் வேலை தேடி வெளிநாடு போகின்றனர். இன்று நமது அண்டை நாடான சிங்கப்பூர் தான் நமது மக்களுக்கு வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இங்கு இருக்கின்ற வாய்ப்புக்களையெல்லாம் வெளிநாட்டவருக்குத் தாரைவார்த்தைக் கொடுத்து விட்டோம்.  அது நமது அரசியல்வாதிகளின் தாராள மனதைக் காட்டுகிறது.  ஆனால் இப்போது  நாம் சிங்கப்பூரிடம் கையேந்துகிறோம்.

நாம்,  சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொருட்களை வேண்டாமென்றால்  புறக்கணிக்கலாம்.  வேண்டுமா வேண்டாமா எனபதைப் பொது மக்களிடமே விட்டுவிடுங்கள். தடை போடாதீர்கள்.  யாரையும் தூண்டிவிடாதீர்கள்.

இதனை நீங்கள் சராசரி மனிதர்களின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும்.  இந்த நிறுவனங்களில்  வேலை செய்பவர்களின் குடும்பங்களையும் ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  அவர்கள் வேலை பார்த்தால் தான் சோறு  வேலையில்லாவிட்டால் துணி கூட மிஞ்சாது!   அவர்களெல்லாம் மாதம் முடிந்தால்  சம்பளம் பெறுபவரில்லை. சாப்பாடு அவர்கள் மேசைக்கு வராது. அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர்கள் நிறுவனங்கள் நடக்கட்டும். அவர்களின் பொருட்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.