Saturday 7 September 2024

இப்படித்தான் பேசுவதா?

விஜயலட்சுமி என்றாலே நாடறிந்த பெயராகி விட்டது.  மஸ்ஜித் இந்தியா என்றாலே அவர் தான் என்றென்றும் ஞாபகத்திற்கு வருவார். இந்திய சமூகத்திடமிருந்து இனி அவரைப் பிரிக்க முடியாது.

அவர், நிலம் உள்வாங்கியதில் போனவர் தான். போயே விட்டார்.  இனி கிடைப்பார் என்கிற எந்த அறிகுறியும் இல்லை.  இனி அடுத்த "வேலையைப் பாருங்கப்பா" என்கிற நிலைமைக்கு அரசாங்கமும் வந்துவிட்டது.

இப்போது விஜயலட்சுமிக்குக் கொடுக்கப்பட்ட  நிவாரணத் தொகை பேசுபொருளாக மாறியிருக்கிறது! எப்படிக் கொடுக்கப்பட்டது, எப்படி கணக்கிடப்பட்டது,  இது போன்ற சம்பவங்கள் மற்ற நாடுகளில் நடந்திருந்தால்  அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவாரணம் எப்படிக் கணக்கிடப்பட்டது  என்று  அலசிஆராய  நமக்கு எந்த வழியும்  தெரியவில்லை.  ஒரு வேளை உலகளவில் இதுவே முதல் சம்பவமாகக் கூட இருக்கலாம். இதனை ஆய்வு செய்ய நம்மால் இயலாது.  வேண்டுமானால் குறைகள் சொல்ல ஏகப்பட்ட வழிகள் உண்டு! 

நம்முடைய ஆதங்கம் எல்லாம் நமது தலைவர்களைப் பற்றி தான். இந்தத்  தொகைக் குறைவு என்பதாக தலைவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். உண்மை என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இப்படிக் குறை சொல்லுவதை தலைவர்களுக்கு முன்பே குப்பனும் சுப்பனும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்!  நாம் என்ன பேசுகிறோமோ அதைத்தான் தலைவர்களும் பேசுகிறார்கள்!  நாங்கள் பேசுவதற்குக் காப்பிக்கடைகள் நீங்கள் பேசுவதற்கு நாடாளுமன்றம்.  ஆனால் அங்குப் பேசுவதற்கு உங்களால் முடியவில்லை.  எங்களைப் போலவே நீங்களும் பேசுகிறீர்கள் இன்னும் அறிக்கை விடுகிறீர்கள். ஏறக்குறைய காப்பிக்கடை பேச்சாளராக ஆகிவிட்டிர்கள்! நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளலாமே! எதற்கு ஒய்பி என்கிற அடைமொழி.

இதற்குப் பதிலாக தலைவர்கள் ஒன்று சேர்ந்து,   அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஒன்று சேர்ந்து,  கோலாலம்பூர் மேயர் அல்லது அதன் தொடர்பான அமைச்சரை  சந்தித்து இந்தப் பிரச்சனையை  அணுகியிருக்கலாமே?  அதற்கு யாருமே தயாராக இல்லை  காரணம் உங்களிடம் ஒற்றுமை இலலை. நீங்கள் ஒற்றுமையாய் இருங்கள் என்று நாங்கள் தான்  சொல்ல வேண்டியிருக்கிறது!  ஒற்றுமை அரசாங்கத்திற்கு இப்படி ஒரு நிலையா?  வேதனை! வேதனை!

எங்களுடையக் காப்பிக்கடை உரிமையைத் தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள்!  நாம் பேசுவதையே அவர்களும் பேசுகிறார்கள். இனி நமக்காக யார் பேசுவார்? நமக்கு நாமே பெசிக்கொள்ள வேண்டியது தான்!

No comments:

Post a Comment