நமது பள்ளிகளில் நச்சுணவு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆகக் கடைசியாக ஈப்போ தேசிய பள்ளி ஒன்றில் இதனை மீண்டும் கேட்கிறோம். ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. சீனப்பள்ளிகளிலோ, தமிழ்ப்பள்ளிகளிலோ இந்த நச்சுணவுப் பிரச்சனையை நாம் அடிக்கடிக் கேள்விப்படுவதில்லை. எப்போதோ ஒரு தடவை உண்டு.
ஆனால் தேசிய பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவது தான் நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. சமையல் என்பது என்னவென்று தெரியாதவர்கள் கண்டீன்களை நடத்துகிறார்களோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது! உண்மையான உணவுத் துறைகளில் உள்ளவர்களை மட்டுமே கண்டீன்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்.
இப்போது என்ன நடக்கிறது? அரசியல்வாதிகள் ஒவ்வொரு துறையிலும் தலையிடுகின்றனர்! தங்களை நிபுணர்கள் என்றே நினைக்கின்றனர்! என்ன செய்வது? நமது போதாத காலம் அவர்களை எல்லாம் நம்ப வேண்டியிருக்கிறது! இவர்கள் பெரும்பாலும் பள்ளிகளைக் கூட விட்டு வைப்பதில்லை.
அப்படி ஒரு பள்ளிக்கூடத்தில் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டும். கோழியை அரைகுறையாக வறுத்தெடுத்திருக்கிறார்கள்.குடிக்கும் சாக்லெட் பானத்தில் கெட்டுப்போன சாக்லெட்டைப் பயன்படுத்திருக்கிறார்கள். ஏதோ நாட்பட்டவைகள் மலிவாகக் கிடைக்கும் போல் தோன்றுகிறது. நாட்பட்டவைகளைச் சாப்பிட்டால் யாராக இருந்தாலும் அது கெடுதலைத்தான் உண்டாக்கும். இவர்கள் குழந்தைகள். என்ன ஆகும்? பாதிக்கத்தான் செய்யும். அது தான் நடந்திருக்கிறது.
நம்முடைய ஆதங்கள் எல்லாம் இதற்கு ஒரு முடிவே இல்லையா என்பது தான். வழக்கம் போல இவர்களுக்கான தண்டனைகள் எல்லாம் போதுமானவைகளாக இல்லை. அதுவும் அங்கு வேலை செய்யும் சிறு மீன்களைத்தான் பிடிக்க முடியும். பெரிய மீன்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்! பார்ப்போம்!
No comments:
Post a Comment