Thursday 5 September 2024

அடுத்தக்கட்ட வேலை ஆரம்பமாகிவிட்டன!


 நமது வாழ்க்கையில் என்ன அசம்பாவிதங்கள் நடந்தாலும்  அத்தோடு எதுவும் முடிந்துபோய் விடுவதில்லை.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடந்தது ஒரு விபத்து. அது நாட்டில் பெரியதொரு அனுதாப அலையை ஏற்படுத்தியது.  அதுவும் சில நாட்களில் மறைந்து போனது.  அவ்வளவு தான்.  எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும்  ஒருசில நாட்கள் தான். அப்புறம் அது காணாமல் போய்விடும்!  இயல்பு வாழ்வு தொடங்கிவிடும்.

அந்தப் பெண்மணி காணாமல்  போனதில் அனைவருக்கும் வருத்தம் தான். அதற்காக மற்ற வேலைகளை அப்படியே விட்டுவிட முடியாது.  மஸ்ஜித் இந்தியா இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். அங்கிருக்கும் வர்த்தக நிறுவனங்களை ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தொழில்களை நம்பி பல நூறு குடும்பங்கள்  இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது.  இலட்சங்கள், கோடிகளைச் சம்பாதிக்கும் நிறுவனங்கள் உள்ளன.  அவர்களின் தொழில்கள் பழைய நிலைக்குத் திரும்புவது அவசியம்.  

உடனடி தேவை எல்லாம்  பாதிக்கப்பட்ட இடங்கள் முற்றிலுமாக  சரிசெய்யப்பட வேண்டும் என்பது தான்.  அவசரம் அவசரம் என்று சொல்லி தரக்குறைவான வேலைகளைச் செய்யக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே 'சிஞ்சாய்' வேலைகள் என்று குறிப்பிடுவதுண்டு.  யாருக்கும் நல்லெண்ணம் இல்லை. இனிமேலும் வருமா என்று சொல்லுவதற்கில்லை.  காரணம் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்வரை 'சிஞ்சாய்' என்றே  சொல்லிப் பழகிவிட்டோம்.

ஏற்கனவே,  பழுது பார்க்கும் வேலைகள்  ஆறு மாதம்வரை இழுக்கும்  என்று அதிகாரிகளால் சொல்லப்பட்டது.  அப்படியென்றால் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லையோ!  சாக்குப்போக்குகள் சொல்லாமல் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பழுது பார்க்கும் வேலைகள் முடிக்கப்பட வேண்டும் என்பது தான் நமது  ஆலோசனை.

எப்படி இருந்தாலும் பழுது பார்க்கும் வேலைகள் மும்முரமாகவும் தீவிரமாகவும்  நடைபெறுவதில் நமக்கு மகிழ்ச்சியே!

No comments:

Post a Comment