வெற்றியை நிர்ணயிக்கும் துருப்புச்சீட்டாக மீண்டும் இந்தியர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
நமக்கு ஞாபகத்திற்கு வருவது ஒன்றுதான். துருப்புச்சீட்டு என்றாகும் போது தான் நமக்குச் சில அனுகூலங்கள் கிடைக்கும் என்பது நமது பொதுப்புத்திக்கு ஏற்றப்பட்டிருக்கிறது!
ஜொகூர், மக்கோத்தா இடைத்தேர்தலில் தான் நாம் துருப்புச்சீட்டாக்கப் பட்டிருக்கிறோம். இந்தத் துருப்புச்சீட்டு பாக்கியம் என்பது எப்போதும் நமக்குக் கிடைப்பதில்லை. யாராவது இறைவனடி சேர வேண்டும். அப்போது தான் அரசியல்வாதிகள் நமது காலடிகள் வந்து சேர்வார்கள்.
இந்த முறை இந்த துருப்புச்சீட்டுகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் உண்டா என்பது நமக்குத் தெரியவில்லை. மக்கோத்தாவே இதற்கு முன்னர் தெரியாது இப்போதும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அதுவும் இந்த முறை ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவருமே அம்னோ வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். அவரை எதிர்த்து யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?
'உரிமை' யிடம் யாரும் புகார் கொடுத்திருந்தால் ஒரு வேளை கடைசி நிமிடத்தில் ஏதேனும் எதிர்ப்புக் குரல்கள் வெளியாகக் கூடும். அல்லது ம.இ.கா.வினர் நமது என்.ஜி.ஒ.க்களின் குரலை நெரித்துக் கொண்டிருந்தால் எந்த செய்தியும் வெளியாகப் போவதில்லை. எல்லாம் சுபமே என்று நாமும் வாய்மூடிக் கொண்டிருப்பது தான் நமக்கு நல்லது.
நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்த துருப்புச்சீட்டுக் காலம் தான் நமக்கு ஏதாவது பிச்சைகள் கிடைக்கும் காலம். அதனைத் தவறவிட்டால் அது எப்போதுமே கிடைக்கப் போவதில்லை. அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது தான் நமது அறிவுரை.
ஜொகூர் மந்திரி பெசார், இந்தியர்களுக்கு நிறையவே உறுதியளித்திருக்கிறார். எல்லாமே நடக்கும். ஆனால் இப்போது அல்ல. அது அடுத்த தேர்தலுக்குப் பின்னராக இருக்கலாம். உடனடியாக 'கைமேல் பலன்' என்று ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.
இந்த முறை துருப்புச்சீட்டா அல்லது துருப்பிடித்த சீட்டா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
No comments:
Post a Comment