இத்தனை ஆண்டுகள் அதிகாரிகளின் கண்களிலிருந்து இந்த நிறுவனம் எப்படித் தப்பித்ததோ நமக்குத் தெரியவில்லை.
வெளிநாட்டவர்கள் சொல்லுவது போல பணத்தைத் தள்ளினால் மலேசியாவில் எதுவும் நடக்கும் என்று கேள்விப்பட்டது உண்மை என்றே தோன்றுகிறது.
ஜாக்கிம் போன்ற அரசாங்க நிறுவனத்திற்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை. ஆனால் அவர்கள் தெரியாதது போல நடிக்கிறார்கள். இளஞ்சிறார்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது உலகிற்கே தெரிந்தாலும் இவர்களுக்கு மட்டும் தெரியாது! பல்வேறு காரணங்கள்! வெளியே சொல்ல முடியாத காரணங்கள். நாட்டில் மதத்தின் பெயரால் எதனையும் மறைத்துவிடலாம் என்பதைச் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்!
மற்றவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எக்கேடு கெட்டால் என்ன என்கிற அலட்சியம் தான் முக்கிய காரணம். இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள நேர்கிறது. இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் குழந்தைகளை எந்த எல்லைக்கும் இட்டுச் செல்வார்கள் என்பது மட்டும் உண்மை. குழந்தைகளை வேண்டுமென்றே முடமாக்குவார்கள். முடமாக்கி அவர்களை பிச்சை எடுக்க வைப்பார்கள். இது தானே நடைமுறையில் உள்ளது? பிச்சை எடுப்பதில் தானே பணம் புரளுகிறது?
பிச்சை எடுப்பது பெரும் தொழிலாக மாறிவிட்டது. மக்களின் இரக்க உணர்ச்சியே இந்த ஈனத்தொழிலில் ஈடுபட்டோருக்கு பெரும் மூலதனமாக மாறிவிட்டது. நல்லவர்களாக மக்கள் முன்னர் காட்டிக்கொள்ள பதத்தை நல்லதொரு கேடயமாக மாற்றிக்கொள்ள முடிகிறது!
இப்படியொரு கேவலமான செயலை இந்நாடு இதுவரைக் கண்டதில்லை. இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் எப்பேர்ப்பட்ட கொம்பன்களாக இருந்தாலும் சரி அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
ஜாக்கிம் எந்த அளவுக்கு இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் விசாரிக்க வேண்டும். இது மலேசியர் பிரச்சனை. ஏதோ மதம் சம்பந்தப்பட்டது அல்ல. குழந்தைகள் சம்பந்தப்பட்டது. உயிர்கள் சம்பந்தப்பட்டது.
நல்ல நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
No comments:
Post a Comment