பிரதமர் அன்வார் எதிர்கட்சியினருக்குச் சவால் விட்டிருக்கிறார். "என் மேல் நம்பிக்கை இல்லாவிட்டால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வாருங்களேன்" என்று சவால் விட்டிருக்கிறார்!
ஆமாம், வருகிற அக்டோபர் மாதத்தில் நடைபெரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வாருங்களேன் என்கிற அவரின் சவால் எதிர்க்கட்சியினரை என்ன செய்யும் என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் நாம் வேறொன்றையும் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. அரசியலைப் பொறுத்தவரை யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாருமே பெரிய நிபுணர்கள் தான்.
'நம்பிக்கையில்லாத் தீர்மானம்" என்பது எதிர்க்கட்சிகள் முன்னமையே தாங்கள் கொண்டு வரவேண்டும், என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். காரணம் எதிர்க்கட்சிகள் என்று வந்துவிட்டால் ஆளுங்கட்சியுடன் முட்டலும் மோதலுமாகத் தான் இருக்க வேண்டும் என்பது தான் விதி. அவர்கள் அதனை எந்தக் குறையும் இல்லாமல் செய்வார்கள்!
அதனைத்தான் பிரதமர், அவர்கள் வாயில் வருமுன்னே இவர் முந்திக் கொண்டாரோ என்று தோன்றுகிறது! காரணம் எப்போதுமே எதிர்க்கட்சியினர் தாம் 'நம்பிக்கையில்லாத் தீர்மானம்' கொண்டுவருவோம் என்று சொல்லி பயமுறுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது அப்படிச் சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். ஒரு சுகம். அதாவது அவர்களின் நோக்கம் என்னவென்றால் பிரதமரை பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். பயமுறுத்துவது, அரசாங்கம் விரைவில் கவிழும் என்பது - இதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கு ஏதோ அல்வா சாப்பிடுவது போல. ஒன்றும் ஆகப்போவதில்லை என்று தெரிந்தும் கூட அந்தப் பயமுறுத்தல் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!
அதனால் தான் பிரதமர் இந்த முறை முந்திக் கொண்டார். "இந்தாப்பா நான் ரெடி! நீங்கள் ரெடியா? துணிவு இருந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவாருங்கள்" என்று எதிர்க்கட்சியினருக்குச் சவால் விட்டிருக்கிறார். அவர்களின் வாயை அடைத்திருக்கிறார். கேட்க நன்றாகவே இருக்கிறது!
இந்நேரத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? சரியோ தவறோ இப்போது ஒர் அரசாங்கம் அமைந்திருக்கிறது. அவர்கள் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யட்டும். அதன் பின், மனநிறைவு இல்லாவிட்டால், வேறு அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள். அது தானே மக்களால் ஆளப்படுகிற அரசாங்கம்? அதற்குள் ஏன் இந்த அடிபிடி?
நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டுங்கள். நாடாளுமன்றத்தில் சண்டைப் போடுங்கள். அத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். சும்மா நடிக்காதீர்கள்!
No comments:
Post a Comment