Saturday 14 September 2024

பரிட்சையே இல்லாத கல்வி!

 

பரிட்சையே இல்லாத கல்விமுறையை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  

இது சரியா தவறா என்கிற விவாதம் இப்போது  நடந்து கொண்டிருக்கிறது.  மற்ற நாடுகளில் எப்படியோ தெரியாது ஆனால் நம் நாட்டில் இது சரி என்று நம்மால் ஒப்புக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை.

மாணவர்களின் கல்வித்திறனை இது பாதிக்கவே செய்யும். பெற்றோர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களும் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல்  சம்பளத்தை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கும்  நிலை தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.  கடைசியில் எஸ்.பி.எம். எடுக்கும் போது அந்த வகுப்பு ஆசிரியர்கள் தான் படாதபாடுபடும்  நிலையில் இருப்பர்.  காரணம் பத்து ஆண்டுகள்  படிக்க வேண்டிய பாடங்களை அந்த கடைசி ஆண்டு தான் மாணவர்கள் விழுந்து விழுந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.  திறமை உள்ள மாணவர்கள் ஒரு சிலர் வெற்றி பெறுவார்கள்.  மற்றபடி  வெற்றி பெறுபவர்கள் அபூர்வமாகவே இருப்பர்.  ஆனாலும் இவர்கள் தான் டாக்டராக வேண்டும், எஞ்சினியராக வேண்டும், வழக்கறிஞராக வேண்டும், நாட்டின் அமைச்சர்களாக வேண்டும் - எல்லா 'வேண்டும்' களுக்கும் இந்த  மாணவர்கள் தான் நிறைவு செய்ய வேண்டும். 

இப்போதே அரசாங்க அலுவலுகங்களில் வேலை செய்யத் தெரியாதோர் பலர்  பொது மக்களையே செய்யச் சொல்லி வேலை வாங்குகின்றனர்!  நாட்டில் ஏற்படும் கல்வி வளர்ச்சி தான் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை. கல்வி வளர்ந்திருக்கிறதா?  உண்மையைச் சொன்னால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.   ஓர் இனத்தை  செயற்கையான  முறையில்  அறிவுள்ளவர்களாகக் காட்ட வேண்டும் என்கிற நிலையில் தான்  கல்வி அமைந்திருக்கிறது.  சிங்காரித்து அலங்கரிப்பது போன்ற ஒரு வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. பரிட்சையே வேண்டாமென்றால்  கல்வியே  தேவை இல்லை என்கிற நிலை தான் ஏற்படும்.

பரிட்சையே வேண்டாமென்றால்  பயன் பெறுபவர் யார்?  வசதி உள்ளவர்களின் வீட்டுப்பிள்ளைகள் தான். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்கப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் 'அனைத்துலகப்பள்ளி'களுக்குத் தான் தரமான கல்வி கற்க அனுப்புவர்.  அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இதில் அனைத்து இனத்தவரும் அடங்குவர். அதிகமானோர் மலாய்ப்பிள்ளைகள், சீனப்பிள்ளைகள் அடுத்து இந்தியர்.

நம்மைப் பொறுத்தவரை அரசாங்கம் தரமானக் கல்வியைத் தான் கொடுக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இவர்கள் கொண்டு போகும் நடைமுறை யாருக்கும் பயனில்லாதது. அதனால் பரிட்சைகள் வேண்டும்.   எஸ்.பி.எம். பரிட்சைக்கு முன்னர்  முன்பு நடந்துவந்த இரண்டு பரிட்சைகளும் தொடர வேண்டும் என்பதே  நமது கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment