Friday 13 September 2024

இளைஞர்களே இப்படியா?


 சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

நமது இளைஞர்களைப் பற்றிய செய்தி தான்.  இவர்கள் எல்லாம் படிக்காதவர்கள்  என்று சொல்ல முடியாது.  படித்தவர்களோ படிக்காதவர்களோ  பொதுவாக மலேசியர்களுக்குத்தான் கெட்ட பெயர்.

முதலில் இவர்கள் கொம்யூட்டரில் பயணம் செய்வதற்கு அது ஆண்களுக்கானதா அல்லது பெண்களுக்கான  பெட்டிகளா என்று பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ஆனால் இந்த இளைஞர்கள் வேண்டுமென்றே, கலாட்டா செய்யும் நோக்கத்தோடே, பெண்கள் பயணிக்கும் பெட்டியில் பயணம் செய்திருக்கிறார்கள்.  அதுவே குற்றம்.

சரி அப்படியேபயணம் செய்தாலும் 'நல்ல பிள்ளைகளாக'  அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் மற்றவர்கள் எதிப்பார்ப்பார்கள்.
ஆனால் அவர்கள் அப்படியும் நல்ல பிள்ளைகளாக  நடந்து கொள்ளவில்லை.  அங்கும் அவர்கள்  தங்களது  'விளையாட்டுத்தனத்தைக்' காட்டியிருக்கிறார்கள்.  இரயில் பெட்டியிலிருந்த வயதானப் பெண்மணி ஒருவர், ஆஸ்திரேலியப் பெண்மணி என்று சொல்லப்படுகிறது,  அந்த இளைஞர்களுக்கு  ஓர் ஆசிரியர் பிள்ளைகளிடம் கடிந்து கொள்வது போல கடிந்து கொண்டிருக்கிறார்.

இவர்களெல்லாம் ஆசிரியர்களையே மதிக்காத பிள்ளைகள் என்று தெரிகிறது!  அதனால் அவர் சொன்னதைச்  சட்டைச் செய்யவில்லை.  மேலும்  ஒரு  சில நண்பர்களையும் பெட்டிக்குள் வரச் சொல்லி  இன்னும் கொஞ்சம் கலகலப்பாக கலாட்டாவில் இறங்கியிருக்கின்றனர். பேசாமல் கலாட்டாவோடு இருந்திருந்தால்  அத்தோடு அந்தப் பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மேல் போய் 'இது எங்க ஊரு மலேசியா!  நீ யாரு எங்களைப் பார்த்து  சத்தம் போடாதே என்று சொல்ல?"  என்பதாக நையாண்டி பண்ணியிருக்கிறார்கள்!   தவறு செய்யும்போது கூட "நாங்கள் மலேசியர்" என்று  கூறியது தான் நமக்கே  சங்கடத்தை ஏற்படுத்துகிறது!  

நாம் மலேசியர் என்று பெருமைப்பட ஏதாவது சாதனைகள் புரிந்திருந்தால்  பெருமைப்படலாம்.    தவறு செய்கிறோம் என்று தெரிந்திருந்தும், பெண்கள் பெட்டியில் ஏறுவதும், அங்குக் கலட்டா பண்ணுவதும், அதில் என்ன அப்படியொரு பெருமையைக் கண்டு விட்டார்கள் என்பது நமக்கும் புரியவில்லை.

இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல தான்.  ஆனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனை.  வெளி நாடுகளிலிருந்து  சுற்றுப்பயணிகள் நாட்டுக்குள் வரவேண்டும்  என்று அரசாங்கம் தவித்துக் கொண்டிருக்கிறது.  இது போன்ற சில்லறைத் தனங்கள் நாட்டின் பெயரை கெடுத்துவிடும்.   ஏற்கனவே மஸ்ஜிட் இந்தியா நாட்டின் பெயரைக் கெடுத்துவிட்டது.  இது அதைவிட இன்னும் மோசம்.

நமது இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று என்றால் இன்னும் புரியவில்லை. காரணம் எல்லாமே ஏதோ 'கடமைக்கு' என்று போதிக்கப்படுகிறது.  அதனால்  எல்லாமே சும்மாகிடைக்கிறது என்கிற எண்ணத்தோடு இளைஞர்கள் திரிகின்றனர்.  இது நல்லதல்ல. 

இளைஞர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்கள் இல்லை. அதனால் வருகிற விபரீதம் இது. நல்லதே நடக்கட்டும். வாழ்க மலேசியா!


No comments:

Post a Comment