Tuesday 3 September 2024

ஆதரவு குறைகிறதா?

 

மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வு ஒன்றில் மலேசிய இனங்களிடையே உள்ள  உறவுகள் பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் எதுவும் முடிந்த முடிவாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஆனாலும் ஒரு சில விஷயங்களை நாமும் யோசித்துப் பார்க்கலாம்.   நாம் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறோம் என்பது தான் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது.  இன்றைய நிலை தான் நம்மைக் கீழ் நோக்கி இழுத்துக கொண்டுப் போகிறது  என்பது தான் குற்றச்சாட்டு. 

அரசாங்கத்திற்கு நம்முடைய ஆதரவு குறைகிறது என்பதற்கு முக்கிய காரணம் நமது அரசியல்வாதிகள் தான்.  தங்களது வாக்குவங்கியை நிரப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் தொடர்ந்து இந்தியர்களை  இழிவுபடுத்தி வருவதுதான். ஒரு வேளை அது பிற இனத்தவரிடையே மகிழ்ச்சி அளிக்கலாம்!

உண்மையில் இந்தியர்கள் எந்தக் காலத்திலும் அரசாங்கத்திடம் கையேந்தும் கூட்டம் அல்ல.  அப்படியொரு நிலையை உருவாக்கியவர்கள்  நமது அரசியல்வாதிகள்.  நாம் ஒரு கௌரவமான இனம். நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைக் கொடுத்தால் யாரிடமும் நாம் கையேந்தும் நிலையில் இருக்க மாட்டோம்.  நம்மிடமிருந்து அனைத்தையும் அபகரித்துவிட்டு நம்மைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டனர் நமது தலைவர்கள்.  எல்லா அயோக்கியதனத்தையும் செய்துவிட்டு இப்போது  "எங்களைப்பற்றி அவதூறு பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று  சவடால்தனம் பண்ணுகின்றனர்!

கல்வியில் நாம் தகுதி குறைந்தவர்களா? ஆனாலும் உயர்கல்வி நமக்கு மறுக்கப்படுகின்றது.  மருத்துவம் நமக்குக் கைவந்த கலை. ஆனாலும் நமக்குத் தகுதி இல்லையாம்.  சிறு சிறு தொழில்களில் ஈடுபட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. நமது அங்காடிகள் உடைக்கப்படுகின்றன.  கேட்பார் யாருமில்லை. வழிபாட்டுத் தலங்கள்  உடைபடுகின்றன. தமிழ்ப்பள்ளிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றன.

இந்த நிலையில் நாம் ஏன் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.  அதன் விளைவு தான் நமது ஆதரவு இன்றைய அரசாங்கத்திற்கு குறைந்து வருகிறது.  28 விழுக்காட்டினர் ஆதரவு தருகிறார்கள் என்றால் அவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்!  அவர்கள் தான் எந்த அரசாங்கம் வந்தாலும்    கவிழ்வதில்லை!

ஆதரவு குறைகிறதா கூடுகிறதா என்பது அடுத்து வரும் தேர்தலில் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment