Thursday 26 September 2024

அறிவு வளர!


 தமிழ் நாட்டில் முடிதிருத்தும் நண்பர்  ஒருவர் தனது கடையில் தொலைக்காட்சி பெட்டியை வைக்கவில்லை.  அனைவரும் வியக்கும்படி நூலகம் ஒன்றை வைத்திருக்கிறார்.

அறிவு வளர்ச்சி என்பது எத்துணை முக்கியம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.  இன்று தொலைக்காட்சி ஊடகங்கள் எந்த அளவுக்கு மக்களை  மடையர்களாக்கி வைத்திருக்கிறது  என்பது நமக்குத் தெரியாமல் இல்லை.  ஆனால் அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  நம்மைக் கெடுக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே அவைகள் நமது வீடுகளில் அடைக்கலமாயிருக்கின்றன!

ஆனால் புத்தகங்கள் என்பது வேறு.  இன்று நாம் பல்வேறு வகை செய்திகளைப் படிக்கிறோம்.  அதுவும் பொதுவாகத் தற்கொலைகள்.  இவைகள் ஏன் நடக்கின்றன?  ஒன்றை உறுதியாகச் சொல்லலாம்.  படிக்கும் பழக்கம் இல்லாமையே  காரணம்.

என்னதான் பெரிய பெரிய படிப்புகள் படித்திருந்தாலும் கதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று  பல்வகைப் புத்தகங்களைப் படிப்பது அவர்களுக்கு நன்மைப் பயக்கும்.  உண்மையில் இன்றைய பிரச்சனை  என்னவென்றால் யாரும் எதனையும் படிப்பதில்லை.  காரணம் படிப்பதற்கு அவர்களுக்கு ஒன்றுமில்லை. 

புத்தகங்களின் அருமை  மெத்த படித்தவர்களுக்கே  தெரியவில்லை. அவர்கள் துறை சாராத பல பத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.  எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.  எழுத்தாளர்களின் சிந்தனைகள், அனுபவங்கள்  கொட்டப்பட்டிருக்கின்றன.  பாரதியார், பாரதிதாசன், டாக்டர் மு.வ. பொன்ற அறிஞர் பெருமக்கள் எழுதிய புத்தகங்கள் அனைவருக்குமானது.  எந்தத் துறையில் இருந்தாலும் படிக்கலாம்.

படிக்கவே நேரமில்லாக் காலம் இது.  கேட்டால்  "அதுக்கெல்லாம் எங்கே நேரம்" என்கிற பதில் தான் வருகிறது.  மற்றவர்களின் அனுபவங்களைப் படிக்கும் போது  நமது சிந்தனைப் போக்கு மாறலாம்.  நமக்குத் தேவையான சில விடைகள் கிடைக்கலாம்.  வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் புத்தகங்களில் கிடைக்கும்.

புத்தகங்கள் என்பது நமது வளர்ச்சிக்குத்தான். கடசிவரை உங்களை ஆற்றலோடு வைத்திருக்கும்.  முடிதிருத்தும்  அந்த நண்பர்  வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பார் என்பதில் ஐயமில்லை.  புத்தகம் உங்களை வாழ வைக்கும். உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காட்டும். கடைசிவரையில் உங்களை வெளிச்சத்தில் வைத்திருக்கும்.

புத்தகங்கள் படி! அது வாழ்க்கைப்படி!

No comments:

Post a Comment