சமீபகாலமாக, மேற்குறிப்பிட்ட புத்தகம் மிகவும் பிரபலமாக பேசப்படும் புத்தகமாக மாறியிருக்கிறது. இதற்குக் காரணமானவர் நடிகர் அரவிந்த்சாமி.
பொதுவாக நான் சினிமா நடிகர்களின் பேட்டிகளை காணொளிகளில் கேட்கும் பழக்கம் மிக மிகக் குறைவு. அதே போலதான் அர்விந்தசாமியுடனான பேட்டியும். நான் அக்கறைக் காட்டவில்லை. ஆனால் பேட்டி எடுத்தவர் நீயா நானா கோபிநாத் என்பதால் நான் அக்கறைக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் அவரது ரசிகன்.
பொதுவாக அந்தப் பேட்டி ஒரு நடிகருடன் என்பதைவிட அது ஒருவகையில் தன்முனைப்பு சம்பந்தமான, வாழ்வியல் சம்பந்தமான பேட்டியாக அமைந்தது. அந்தப் பேட்டியின் போது அரவிந்த்சாமி குறிப்பிட்ட புத்தகம் தான் மேலேயுள்ள The Psychology of Money. அதே புத்தகம் தமிழிலும் மொழிபெயர்ப்பு இருப்பதாக கோபிநாத்தும் குறிப்பிட்டிருந்தார். தமிழில் அதன் தலைப்பு "பணம்சார் உளவியல்" தேசிய மொழியிலும் இந்தப் புத்தகம் வெளியாயிருக்கிறது.
உண்மையில் இந்தப் புத்தகத்தை நம் நாட்டில் பிரபலப் படுத்தியவர் வழக்கறிஞர் சங்கர் அவர்கள் தான். அதன் பின்னர் தான் இப்போது பலர் பேசுகின்றனர். நம்முடைய நோக்கம் எல்லாம் நம் இனத்தவர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. வளமாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருப்பவர்கள் இந்தப் புத்தகத்தை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாருக்குமே வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வழக்கறிஞர் சங்கர் சொன்னது போல இந்தப் புத்தகம் தேசிய மொழியில் ஓர் இலட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறதாம். நம் நாட்டின் மூன்று மொழிகளிலும் இந்தப் புத்தகம் வெளியாயிருக்கிறது. சீன மொழியில்....? சொல்லவே வேண்டியதில்லை.அது தனி உலகம்.
இது சினிமா சம்பந்தப்பட்ட புத்தகம் அல்ல. முற்றிலும் வாழ்க்கையில் வளத்தோடு வாழ கற்றுக்கொடுக்கும் புத்தகம். நடிகர் அரவிந்த்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது, அவர் நடிகர் தானே என்று நினைக்கலாம். நடிப்பு அவருக்குப் பொழுதுபோக்கு அவ்வளவுதான். அவர் ஒரு தொழிலதிபர். பல கோடி சொத்துகளுக்கு அதிபதி என்று சொல்லப்படுகிறது. பேட்டியின் போது அவர் குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தும் அவருக்கு வழிகாட்டியிருக்கின்றன. நமக்கும் வழிகாட்டும்.
நம் நோக்கம் நமது மக்கள் அனைவரும் வளமாக வாழ வேண்டும் என்பது தான். கொள்ளையடிக்காமல் கண்ணியத்தோடும், கௌரவத்தோடும், வளத்தோடும் வாழ்ந்தாலே போதும் நமது மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். வாழ்க! வளர்க!
No comments:
Post a Comment