Monday 30 September 2024

கல்வி மறுக்கப்படலாமோ?


எந்த வயதிலும் பெண்களின் கல்வி மறுக்கப்படக் கூடாது.  ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே  பயன் பெறும்.  அந்தப் பெண்ணின் குடும்பமே  கல்வி கற்ற குடும்பம் என மாற்றமடையும்.  அதனால்  தான் ஓர் ஆணை விட ஒரு பெண்ணிந் கல்வி முக்கியம் எனக் கருதப்படுகிறது. 

டிக்டாக்கில் ஒரு செய்தியைக் கேட்க  நேர்ந்தது. எஸ்.பி.எம். மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் டாக்டர் புனிதன் அவர்களின் வழிகாட்டும் உரைகளை  அவ்வப்போது கேட்பதுண்டு.  அப்போது தான் இந்தச் செய்தியை அவர் வெளிக்கொணர்ந்தார். 

ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருக்கிறார்களாம்.  அதுவும் குறிப்பாகப் பெண்களின் கல்விக்கு.  "நீ படிச்சி என்ன கிழிக்கப்போற?"  என்று  சொல்லுகிறார்களாம். இது எவ்வளவு பெரிய அசிங்கம் என்பது கூட  தெரியாத  நிலையில் இருக்கும்  அந்தப் பெற்றோர்களுக்கு நாம் என்ன தான் சொல்ல முடியும்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு.  இலங்கைத் தமிழர்களும், கேரள மலையாளிகளும்  நமக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு.  இலங்கைத் தமிழர்களின் இன்றைய முன்னேற்றம் என்பது கல்வியால் தான். ஆரம்ப காலங்களில் அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் தான் அல்லது நடுத்தர குடும்பங்கள்.  இப்போது அவர்கள் கல்வியை வைத்தே பெரும் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்.  ஆனால் அவர்களை விட  மலையாளிகள் இன்னும் சிறந்த எடுத்துக்காட்டு.  தமிழர்களோடு அவர்களும் பால் மரம் வெட்டியவர்கள் தான்.  கல்வியை மட்டும் அவர்கள் மறக்கவில்லை.  தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளை வைத்தே அவர்களின் முன்னேற்றம்  அமைந்துவிட்டது. அங்குக் கிடைத்த கல்வியை வைத்தே அன்றைய காலகட்டத்தில்  அவர்கள் ஆசிரியர்கள் ஆனார்கள். இன்றைய நிலையிலும் அவர்கள் தான்  முன்னணியில் நிற்கிறார்கள்.

நாம் எந்தக் காலத்திலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. "வேலை செய்தால் சம்பாதிக்கலாம்" என்கிற மனநிலை எப்படியோ உருவாகிவிட்டது. அதனை இன்னும் நம்மால் உடைக்க முடியவில்லை. இதனை  நமது என்.ஜி.ஒ. க்கள் தான் உடைக்க வேண்டும்.  ஏன் என்.ஜி.ஒ. க்கள்? அவர்கள் தானே அரசாங்க மானியம் பெறுகிறவர்கள்? 

எப்படியோ டாக்டர் புனிதன் அவர்கள் அதற்கும் தீர்வு காண ஏதேனும் திட்டங்கள் வைத்திருப்பார் என நம்பலாம்.  எல்லாவற்றையும்விட முக்கியமானது மாணவிகளே தங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது  என்று போர்க்கொடி தூக்கலாம். ஏன் போலிஸ்ஸுக்கும்  போகலாம்!   அது அவர்களது திறமை!

என்னவோ அடிமைகள் போல் வாழ்ந்துவிட்ட ஒரு சமுதாயத்தைத்  தூக்கி நிறுத்த இன்னும் பல முயற்சிகள் தேவை.

No comments:

Post a Comment