Sunday 29 September 2024

ஏழ்மையைப் போக்க கல்வி அவசியம்

 

ஏழ்மையைப் போக்க ஒரே வழி கல்வி மட்டும் தான்.  நம் கூட  வாழும் மற்ற  இனத்தவருக்கு தெரிந்திருக்கும் போது  அது ஏன் தமிழர்களுக்கு மட்டும் தெரியவில்லை? 

இன்றைய நிலையில் ஏழ்மையில் இருந்த பல குடும்பங்கள் இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டன.  ஒரு குடும்பத்தில் முதல் குழந்தைக்குக் கல்வியைக் கொடுத்துவிட்டாலே  அந்தக் குடும்பம் கரை சேர்ந்து விடும் என்பதை நாம் பார்க்கிறோம். 

கையில்  பணம் இல்லாத ஏழை குடும்பங்களுக்குக்  கையில் இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான்.  தங்கள் குழந்தைகளுக்கு  அதனை வழங்குவதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது. ஆனாலும் அதிலும்  நமக்குத் தயக்கம் உண்டு.  அதனால் தான் தோட்டப்புறத்தில்  வாழ்ந்த சமுதாயமான நாம் இன்னும் விடாப்பிடியாக  மூன்று நான்கு தலைமூறைகளாக  தோட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அப்படி வாழும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இலவசக் கல்வி கொடுத்தும் நாம் அதனைப் பயன்படுத்துவதில்லை. இப்போது தோட்டப்புறங்கள் குறைந்துவிட்டன. பலர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.  வேலை கலாச்சாரம்  மாறிவிட்டாலும், நகர்ப்புறம் வந்துவிட்டாலும்,  நமது புத்தி என்னவோ  தோட்டப்புறப்  பிடியிலிருந்து  மாறவில்லை.  

"வேலை செஞ்சால்  குடும்பக் கஷ்டத்திற்கு உதவியாக இருக்கும்"  என்கிற மனநிலையிலிருந்து இன்னும்  நாம் மாறவில்லை.  அப்படியே பழகிவிட்டோம்.  படித்தால் குடும்பமே முன்னேறும் என்கிற மனநிலைப் போய் வேலைக்குப் போனால் கொஞ்ச ஆடம்பரமாக வாழலாம்  என்கிற எண்ணம் புகுந்துவிட்டது.   கல்வியைவிட, கார், வீடு, தலைக்காட்சி, ஐஸ்பெட்டி  இது போன்ற அவசியமற்றவைகளில் செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர் இன்றைய தாய்மார்கள்.  கல்வி என்றால் யோசிக்கின்றனர்.

பொருள்கள் நம்மைவிட்டுப் போய்விடும். ஒரு வேளை திருடும் கூட போகலாம்.  ஆனால் கல்வி அப்படியல்ல. அதனை யாரும் நம்மிடமிருந்து திருடிவிட  முடியாது.  அது நம்முடனேயே  இருக்கும்.  நாலு பேருடன் தலைநிமிர்ந்து  நம்மால் வாழ முடியும்.  கல்வி அந்தளவு உயர்வானது.

கல்வியின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் அறியாமல் தான் இருக்கிறோம்.  நமது தாய்மார்கள் தான் அதற்கான சரியானத் தீர்வைக் காண முடியும்.  எதனையும் விட்டுக் கொடக்கலாம். கல்வியை மட்டும்  இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்.  அது மட்டும் தான்  நமது சமுதாயத்தை உயர்த்தும்.

No comments:

Post a Comment