Monday 2 September 2024

துணை இயக்குனர் தேவையே

                                                   மலேசியத் தமிழ்ப்பள்ளி  

மலேசிய தமிழ்க்கல்வி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், செயளாருமான  திரு. ம.வெற்றிவேலன் அவர்களின்  அறைகூவலை நாம் சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  நாம்  அனைவரும்  ஆதரவுகரம் நீட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ்ப்பள்ளிகள் சமபந்தப்பட்ட  பிரச்சனைகளில் நாம் பேசுவதற்கு  முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தில் வழிகள் இருந்தன. யாரிடமோ ஏதோ ஒரு பொறுப்பு இருந்தது. குறைந்தபட்சம் கல்வி துணை அமைச்சர் பதவியாவது இருந்தது.

இப்போது எதுவும் இல்லை.  இருக்கின்ற துணை அமைச்சர் சீனக் கல்வி பற்றி மட்டுமே  பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  ஆக, தமிழ்ப்பள்ளிகளுக்கு யாரும் இல்லை. ஏனோ  பிரதமர் அன்வார் இப்ராகிம்  தலமையாலான பக்காத்தான் அரசாங்கம் தமிழ்க்கல்வி பற்றி கண்டு கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ இந்தியர்களின் ஆதரவை பிரதமர் அன்வார் இழந்து வருகிறார் என்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பிரதமர் அன்வாருக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்காமல் நமது உரிமைகளைப் பேசி, சந்திப்புக்களை நடத்தி  பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் எடுக்க வேண்டும்.

தமிழ்க்கல்வி என்பது இந்நாட்டுக்குப் புதிதல்ல.  இருநூறு ஆண்டுகளுக்கு மேலான  பாரம்பரியத்தைக் கொண்டது.  தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் இந்திய ஆசிரியர்கள் தான் அரசாங்கத்தில்  பணிபுரிபவர்களாகக் கணக்கிடப்படுகின்றனர்.  இவர்களை விட்டால்  அரசாங்கத்தில்  இந்தியர்கள் யார் பணிபுரிகிறார்கள்?  மிக மிக சொற்பமே.

தமிழ்ப்பள்ளிகளில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  யாரிடம் பேசுவது என்கிற குழப்பம்? சீனரோ, மலாய்க்காரரோ  அதனைப் புரிந்துகொள்ள வைக்க முடியாது.  தமிழ்ப்பள்ளிகளில் கல்விகற்ற ஒருவர் இயக்குநர்களில் ஒருவராகப் பணி புரிந்தால்  பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டுசெல்ல எளிதாக இருக்கும்.  சீனக் கல்விக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதனையே தமிழ்க்கல்விக்கும் எதிர்பார்க்கிறோம்.

பிரதமர் அன்வார் அவர்களின், வழக்கம் போல, அவரின் தயவுக்காக  நாம் காத்துக் கிடக்கிறோம். நமது  இந்திய அரசு சாரா இயக்கங்களும் இதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த, கேள்விகள் எழுப்ப சரியான நேரம் இது.

பேச்சு வார்த்தைகளின் மூலம் எதுவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். வாழ்க நம் நாடு! வாழ்க நம் மக்கள்!

No comments:

Post a Comment