Sunday 15 September 2024

தாய் மொழியில் பேசுங்கள்



தாய் மொழியில் பேசுவதை எந்தக் காலத்திலும் நிறுத்தி விடாதீர்கள். எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.  எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். பேசலாம், படிக்கலாம்.  யார் என்ன குற்றம்  சொல்லப் போகிறார்கள்?  ஒருவரும் தவறு என்று சொல்லப் போவதில்லை.

நம் நாட்டில் நான்கு  மொழிகள் பிரதான மொழிகளாக இருக்கின்றன. மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ்  ஆகிய மொழிகள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நான்கு மொழிகள் அறிந்தவர்கள் பலர் இருக்கின்றனர். மூன்று மொழிகள் அறிந்தவர்கள் இன்னும்  அதிகமாகவே இருக்கின்றனர்.

நமக்குத் தமிழ் தெரியும் என்றால் அத்தோடு மலாய், ஆங்கிலமும் தெரியும்.  சீனர்களும் அப்படியே. மலேசியர்களில் பலர் மூன்று மொழிகளை அறிந்தவர்கள் தான்.  மூன்று மொழிகள் தெரிந்தவர்கள் தான்  வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை நாம் அவசியம் தாய் மொழியில் பேச வேண்டும்.  மொழி தாய்க்குச் சமம். தாய் மொழியை மறப்பதும் தாயை மறப்பதும் ஒன்று தான்.   மொழியை மறந்தால் இனம் அழிந்து விடும்.

தென் ஆப்பிரிக்கா,  டர்பன் மாநிலத்தில்  தான் இந்தியாவுக்கு அடுத்து இந்தியர்கள் அதிகமாக வாழ்கின்ற இடம் என்று சொல்லப்படுகிறது. அங்கு அதிகமான தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், குஜாராத்தியர்கள், பஞ்சாபியர்கள் - இப்படி  அனைத்து மொழி பேசும் இந்தியர்களும் வாழ்கின்றனர்.

சுமார் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அங்குப் போனவர்கள்  இப்போது தமிழை முற்றிலுமாக மறந்துவிட்டனர்.  பழைய தலைமுறையினர் ஓரளவு தமிழ் பேசினாலும் இப்போதைய தலைமுறையினர்  தமிழையே மறந்துவிட்டனர்.  ஆங்கிலமே தாய்மொழியாகி விட்டது!

ஆனால் நாம் கொடுத்து வைத்தவர்கள்.  இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக  நமது நாட்டில் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன.  ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக  தமிழ்ப்பள்ளிதான் முதல் முதலாக தொடங்கப்பட்டது இந்நாட்டில்.  தமிழ்ப்பள்ளிகள்  இன்னும்  பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அதுவே நமக்குக் கிடத்த மிகப்பெரிய பாக்கியம்.

ஆக, முடிந்தவரை தமிழரிடையே தமிழிலேயே  பேசுங்கள். தமிழ் தெரியும் போது வேற்று மொழி  பயன்படுத்துவதை தவிர்க்கவும்.  குழந்தைகளுடன்  தமிழிலேயே பேசுங்கள்.  அவர்கள் 'நாம் தமிழர்'  என்பதை அவர்களிடம் சொல்லி வளருங்கள்.

நம் மொழியை வளர்ப்போம். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment