மீண்டும் எந்தவொரு சம்பவமும் வேண்டாம் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பதில் ஒரு நியாயம் உண்டு. அதே போல இனி வருங்காலங்களில் எந்த அசாம்பவிதமும் நடக்கக் கூடாது என்று அரசாங்கம் நினைப்பதிலும் நியாயம் உண்டு.
காரணம் இதில் உள்நாட்டு மக்கள் மட்டும் அல்ல வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளும் அடங்குவர். எப்படிப் பார்த்தாலும் மக்களின் பாதுகாப்புக்குத் தான் முதலிடம். இது கடவுளின் செயல் என்று எல்லாருமே நினைத்துவிட்டால் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் இப்போது யாரும் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் மலேசியா ஒரு பாதுகாப்பான நாடு என்று உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை.
அங்குக் கடைவைத்து தொழில் செய்வோர் என்ன நினைக்கின்றனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் கோடீஸ்வரர்களாக இருக்கலாம். அனைவரும் அப்படி அல்ல. மிகப்பலர் நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள். தொழில் என்றால் என்னவென்று தெரியும். `மிகப்பலர் கொடுக்கல் வாங்கள், வட்டிக்கட்டுவது, மாதத்தவணைகள், கடை வாடகை இப்படி எத்தனையோ. அவர்களிடம் வேலை செய்பவர்களின் நலனையும் பார்க்க வேண்டும்.
இது மிகவும் சிக்கலான பிரச்சனை. அவர்களுடைய நெருக்கடி என்னவென்று அவர்களுக்குத்தான் தெரியும். இதன் மூலம் எத்தனை பேர் தொழிலை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்பது தெரியவில்லை. அப்படி நடக்காது என எதிர்பார்ப்போம். அப்படி நடந்தால் நமது சமுதாயத்திற்கு அது நஷ்டம் தான். தொழில் தொடங்க என்ன பாடுபடுகிறோம்? அது எளிதல்ல என்று நமக்குத் தெரிகிறது அல்லவா? அப்படியிருக்க நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொழிலை இழுத்து மூடிவிட்டுப் போவதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது?
என்ன தான் நாம் பேசினாலும் பாதுகாப்பு கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. நேரம் காலத்தை வீணடிக்காமல் எவ்வளவு சீக்கிரத்தில் பழுதினைச் சரிசெய்ய முடியுமோ அதனைச் சரிசெய்ய அவர்களிடமே விட்டுவிடுங்கள். அரைகுறை வேலைகள் எல்லாம் இனி எடுபடாது. மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எப்படியாவது செய்து, எதையாவது செய்து ஒப்பேத்தும் வேலைகள் இனி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அரசாங்கம் தனது கடமையைச் செய்யட்டும். அவசரப்படுத்தாதீர்கள். மீண்டும் பழைய நிலைமைக்குப் போகக் கூடாது என்பது தான் முக்கியம்.
மீண்டும் மஸ்ஜிட் இந்தியா ஒரு சுறுசுறுப்பான வியாபாரத் தலமாக மாறும் என் நம்புவோம்.
No comments:
Post a Comment