Tuesday 20 June 2023

2500 இடங்கள் தேவை

 

சமீபத்தில்  ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கல்வி அமைச்சுக்கும் பிரதமர் அன்வாருக்கும்  அறைகூவல் ஒன்றை விடுத்திருக்கிறார்.

மெட்ரிகுலேஷன் கல்விக்கு இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2500 ஆக  உயர்த்த  வேண்டும்  என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பல ஆண்டுகளாக மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அனைத்தும் மா.இ.கா.வினர் கண்முன்னால் நடந்தவை! 'மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்' ம.இ.கா.வினர் பட்டபாடு  நமக்குத் தெரியும்.  இப்போது அவர்களுக்கும் பேச வாய்ப்புக்குக் கிடைத்திருக்கிறது, பேசுகிறார்கள்.  யாராவது பேசித்தான்  ஆக வேண்டும்.  இப்போது கொஞ்சம் தைரியமாகவே பேசுகிறார்கள், அவ்வளவு தான்!

இப்போது இதனைக் குறையுங்கள் என்று யாரும் சொல்லப் போவதில்லை. 2500 ஆக இருக்கட்டும்.  மெட்ரிகுலேஷன் கல்விக்கு மனு செய்பவர்கள்  பெரும்பாலும் பி 40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும். மேற்கல்வியைத் தொடர அவர்களுக்கு அது ஒன்றே வழி.

மேலும் இட ஒதுக்கீடு என்பது முறையாக இருக்கட்டும். சிறப்பு  தேர்ச்சி பெற்றவர்களுக்கு  முதலிடமும் அதன் பின்   மதிப்பெண்களுக்கு  ஏற்ப அடுத்த அடுத்த இடங்களும் ஒதுக்குவது தான் நியாயமாக இருக்கும்.  அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 'இடம் இல்லை' என்பதும் குறைவான மதிப்பெண் வாங்கியவர்களுக்கு  கல்லூரிகளில் இடம் கொடுப்பதும்  மாணவர்/பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும்.  

இந்த ஆண்டு, இந்தியர்களைப் பொறுத்தவரை, மெட்ரிகுலேஷன் கல்வி எதனை நோக்கிப் போகும்  என்பது தெரியவில்லை.  முன்பு போலவே கல்வி அமைச்சின் நோக்கங்கள் இருந்தால்  நமக்கு ஏமாற்றம் தான். நிலைமை மாற வேண்டும் என்பதை  அரசாங்கத்திற்கு இந்தியர்கள் 80 விழுக்காடு ஆதரவு அளித்ததன் மூலம் சொல்லிவிட்டோம். இப்போது பந்து பிரதமர் கையில்.

இப்போது 2500 இடங்கள் என்பதை ம.இ.கா.வினர் கூறியிருக்கலாம். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. நமக்குத் தேவை என்பது 2500 தான். ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஜ.செ.க., பி.கே.ஆர். கட்சிகளும்  இது பற்றி வாய்த் திறக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் அமைச்சரைவையில்  அழுத்தம் கொடுக்க வேண்டும். அல்லது நாடாளுமன்ற உறுப்பினகள்  அனைவரும் சேர்ந்து இந்தப் பிரச்சனையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஏதோ ஒன்றூ! ஆனால் பலன் தான் முக்கியம்!

No comments:

Post a Comment