Saturday 10 June 2023

கெடா மந்திரி பெசார் ஏன் இப்படி...?

 

        Chief Minister Chow Kon Yeow, Penang.                   Menteri Besar: Sanusi Nor , Kedah

கெடா  மாநில மந்திரி பெசாராக சனுசி நோர் எப்போது பதவியேற்றாரோ அப்போதிலிருந்தே  அண்டை மாநிலங்களுடன் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை!

மந்திரி பெசார்கள் மலாய்க்காரார்களாக இருக்கும்வரை அவர் வாயை மூடிக்கொண்டு இருப்பார். பினாங்கு மாநிலத்திலோ ஒரு சீனர் என்பதால்  அவருடன்  மோதுவதை  ஒரு விளையாட்டாகவே எடுத்துக் கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சானுசி நோர் அவருடைய பாஸ் கட்சியினரைப் போலவே  சீனர் இந்தியர் விரோதப் போக்கையே இவரும் கொண்டிருக்கிறார். 

அவர் மாநில மந்திரி பெசாராக பதவியேற்றதும்  முதல் வேலையாக  ஓர் இந்து கோவிலை உடைத்துத் தள்ளினார். அதுவே ஓர் அதிகாரத்திமிர் என்று பேசப்பட்டது. அடுத்து தைப்பூச விடுமுறையை ரத்து செய்தார். ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  இந்து சமயத்தினரைக் கூப்பிட்டு அவர் அவர்களுடன் பேசவில்லை. ஆலோசனை எதுவும் கேட்கவில்லை. அது தேவை இல்லை என்பது தான் அவரது நிலை. ஏன் அவரது கட்சியின் நிலைப்பாடும் கூட.  இவர்கள் எல்லாம் வட்டமேசையில் உட்கார்ந்து பேசுவார்கள் என்பதையே எதிர்பார்க்க முடியாது!

இந்து, இந்து சமயம் எதுவும் உட்கார்ந்து பேசக்கூடிய அளவுக்கு  ஒரு பெரிய விஷயம் அல்ல என்பது தான் அவரது கொள்கை. ஏன் அவரது கட்சியின் கொள்கையும் கூட. அதில் அவரது அதிகாரத்தைக் காட்டியிருக்கிறார். 

சரி இப்போது பினாங்கு மாநிலத்துடன் பிரச்சனை. முதலில் தண்ணீர் பிரச்சனை. இப்போது பினாங்கு மாநிலம் என்பது கெடா மாநிலத்தின் ஒரு பகுதி என்கிறார்!  என்ன செய்வது? பேசும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதற்காக கொஞ்ச அதிகமாகவே பேசுகிறார். மக்களுடன் கூட சுமுகமாக பேசும் தன்மை அவரிடம் இல்லை. பெண்களிடம் கேலி பேசுவது, கிண்டல் அடிப்பது,  சீண்டுவது என்பது அவருக்குக் கைவந்த கலை! அவர் எதனைச் செய்தாலும் அவரது கட்சி அவருக்குத் துணை நிற்பது  அவருக்கு கூடுதல் பலம்!

இப்போது பினாங்கு அரசாங்கம் இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. அது சரியான வழியாகவே பார்க்கப்படுகிறது. காரணம் ஒரு சில சமயங்களில்  கெடா மந்திரி பெசாரைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களைத் திருத்துவதற்கு, நீதிமன்றம் போவதைத் தவிர, வேறு வழியில்லை!

கெடா மாநிலம் ஒரு காலகட்டத்தில் ராஜராஜ சோழன் கட்டுப்பாட்டில் இருந்ததாக  சரித்திரம். நீதிமன்றத்தில் இதுபற்றியெல்லாம் பேசப்படுமா  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment