Sunday 18 June 2023

தாதியரின் உடையில் என்ன குறை?

 

மேலே தாதியர்கள் அணிந்திருக்கும் உடைகளைப் பாருங்கள்.  நாம் மருத்துவமனைக்குப் போனால் இவர்கள் இப்படித்தான் உடை உடுத்துவதை நாம் பார்க்கிறோம்.

நாம் குறை சொல்லுகின்ற அளவுக்கு அவர்களின் உடைகள் அப்படி ஒன்றும் அசிங்கமாக இருப்பதாகச் சொல்ல முடியாது. 

ஆனால் பாஸ் கட்சியினருக்கு மட்டும் அவர்களின் பார்வை எப்படி வித்தியாசமாக இருக்கிறது என்பது நமக்குப் புரிவதில்லை.  அதுவும் தேர்தல் காலம் வந்துவிட்டாலே அவர்களின் பார்வை மாற்றம் அடைந்துவிடும்!  தேர்தல் காலங்களில் ஆப்கானிஸ்தானுக்கப் போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவார்களோ!

நமக்கு ஒரு கேள்வி உண்டு. பாஸ் கட்சியில் உள்ள வீட்டுப் பெண்கள் வேலைக்கே போகாதவர்களோ? அப்படிப் போகுபவர்களாக இருந்தால் அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி உடை அணிவார்கள்?  அவர்களும் அரசாங்க வழிகாட்டுதலில்  தானே உடைகள் அணிய வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இது பற்றி ஒன்றுமே அறியாதவர்களா இவர்கள்?

தேர்தல் காலங்களில் மட்டும் தான் இவர்களுக்கு ஞானோதயம் பிறக்குமோ! ஆனால் இது போன்ற மலிவு பிரச்சாரங்கள் அவ்வளவாக எடுபடாது  என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் தேர்தல் காலங்களில் எடுக்கின்ற ஆயுதங்களில் இதுவும் ஒன்று என்றாலும்  அவர்களிடம்  மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது கிறிஸ்துவம்.  தேர்தல் காலங்களில் அவர்கள்  பொதுவாகப் பயன்படுத்துபவை  என்றால்: "நாட்டை கிறிஸ்துவர்கள் தான் ஆளுகின்றார்கள். இஸ்லாமியர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். நாட்டின் கலாச்சாரமே கிறிஸ்துவ கலாச்சாரம் தான். பெண்கள் கல்வி என்பதே கிறிஸ்துவ கலாச்சாரம் தான்."  இப்படித்தான்  இவர்களின் தேர்தல் பிரச்சாரமே அமைந்திருக்கும்!

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கின்றது.  அப்பொழுது இவர்களின் பிரச்சாரங்களை இன்னும் தெளிவாகக் கேட்கலாம். பாஸ் கட்சியினர் நாட்டுக்கு என்ன செய்வோம், தாங்கள் ஆளும் மாநிலங்களில் என்ன செய்வோம்  என்று பேசுவது என்பது  அவர்கள் சரித்திரத்திலேயே இல்லை!

என்ன செய்வது?  நாட்டை முன்னேற்றுவது எப்படி என்பதுபற்றியெல்லாம் அவர்களிடன் எந்தத் திட்டமும் இல்லை.  நாட்டில் சரியான திட்டமிடுதல் இல்லாமல் அழிவுகள் ஏற்படும் போது  "அது கடவுளின் செயல்!"  என்று மிக எளிதாக கடவுளின் மீது பழிபோடுவது என்பது அவர்களுக்குக் கைவந்த கலை! இப்படியே தான் அவர்கள் அரசியலை நடத்துகிறார்கள்!

அவர்களின் நிலையான கொள்கை தான் என்ன? பெண்கள் உடுத்தும் உடைகளைக் குறை சொல்லுவது. பெண்களின் கல்வியைக் குறை சொல்லுவது. இவைகள் தான் அவர்களின் வாழ்க்கை முறை! மக்கள் அவர்களை நம்பும்வரை அவர்கள் இதனைக் கைவிடமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்!

No comments:

Post a Comment