Saturday 17 June 2023

எதிரிகள் ஜாக்கிரதை!

 

ம.இ.கா. வினர் திருந்திவிட்டார்களா என்பது நமக்குத் தெரியாது. அறுபது, எழுபது வருஷத்து பழக்க வழக்கங்களை சும்மா ஆறு  ஏழு மாதத்தில் திருத்திவிட முடியாது! அவர்கள் இன்னும் நமது எச்சரிக்கைக்கு உரியவர்கள் தான்.

ஆனால் அவர்கள் இந்திய சமூகத்திற்கு எதிரிகளாக என்று கேட்டால்  ஒரு பாரம்பரியமான கட்சியை அப்படியெல்லாம் சொல்ல மனம் வரவில்லை.  அதன் தலைவர்களால் அப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பதில்  பெரிய குற்றமாகவும் கருத முடியவில்லை.

அவர்கள் மீதான கோபம் அப்படி ஒன்றும் இன்னும் தணிந்து போனதாகவும் இல்லை.  கோபம் அப்படியே தான் இருக்கிறது.  தோட்டப்புறங்களில்  வேலை செய்துவந்த போது கூட இந்தியர்கள் ஓராங் அஸ்லி நிலைமைக்குத் தள்ளப்படவில்லை. இன்று இந்தியர்களை  - ஓராங் அஸ்லி அளவிற்கு   மாற்றிய புண்ணியவான்கள் இவர்கள்.  அவர்களை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியுமா?

சரி அதை விடுவோம். சில பதவிகளிலிருந்து டத்தோ சிவராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.ஏன் இந்த பதவி நீக்கம் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறார் சிவராஜ்..  ம.இ.கா. தலைவருக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு என்பதால் அவர் யாரையும் பதவி நீக்கம் செய்யலாம்.  மத்திய செயற்குழு என்று ஒன்று அவசியமில்லை தான். ஏதோ பெயருக்கு வைத்திருக்கிறார்கள், அவ்வளவு தான்.

ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.  சாமிவேலு காலத்தில் இப்படியெல்லாம் நடந்தது  நமக்குத் தெரியும். மத்திய செயற்குழுவுக்கு வேலையே இல்லை. சகல அதிகாரமும் படைத்தவர் அவர். சகலமும் அவரே என்பதால் இந்திய சமூகம்  என்று ஒன்று இருப்பதையே மறந்து போனார். இப்போது, இன்றைய தலைவர் அதனைத் தொடர்கிறார்! ஏனோ தெரியவில்லை படித்தவர்களைக் கண்டாலே  ம.இ.கா. தலைவர்களுக்குப் பிடிப்பதில்லை! இதொரு சாபக்கேடு தான், என்ன செய்வது?

நாம் சொல்ல வருவது அதுவும் அல்ல.  ம.இ.கா.விலிருந்து வேளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி அவர்களை பி.கே.ஆர். கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது தான் நாம் சொல்ல வருவது. அவர்கள் வருவார்களா, வரமாட்டார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கதவு திறந்தால் தான் காட்சி தெரியும்! ஆனால்  எந்த மண்ணும் வேண்டாம்.  அவர்கள் பி.கே.அர். கட்சிக்குள் இணைந்துவிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

அவர்கள் நமக்கு எதிரிகள் தான் அதில் சந்தேகம் வேண்டாம். ஒரு சமுதாயத்தையே அழித்தவர்கள்  இப்போது தங்களின்  அழிவுக்காகக் காத்திருக்கிறார்கள்! அது நடக்கத்தான் செய்யும்!

No comments:

Post a Comment