Sunday 4 June 2023

நம் நாட்டவர்க்கே முன்னுரிமை!

 

மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் நாம் சொல்லி வருகின்ற கருத்தையே அவரும் சொல்லி இருக்கின்றார்.

முதலில் வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை என்பது மலேசியர்களுக்குத் தான் இருக்க வேண்டும்.  ஆனால் நிலைமை அப்படி இல்லை.  ஒவ்வொரு துறையிலும் வெளிநாட்டவரே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்றால் ஏன் உள் நாட்டினர் புறக்கணிக்கப்படுகின்றனர்?

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இப்போது வேலையில்லாமல் நமது நாட்டில் பலர் தங்கியிருக்கின்றனர். அதுவும் இலட்சக்கணக்கில்! அரசாங்கத்தின் கொள்கை தான் என்ன என்பது நமக்குப் புரியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுத்து உதவுவது என்பது மனிதாபிமானம் தான். இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக உள்நாட்டில் உள்ளவர்கள் பட்டினியில் வாட வேண்டுமா?

இது அரசாங்கம் செய்கின்ற பெரும் தவறு என்று தான் நமக்குத் தோன்றுகிறது. ஒரு சில வேலைகளை மலேசியர்கள் தவிர்க்கிறார்கள் என்றால் அந்த துறைக்கு மட்டும் தான் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க வேண்டும். எல்லா வேலைகளையும்  மலேசியர்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அப்படித்தான் மனிதவள அமைச்சு நம்புகிறது!

அப்படியென்றால் என்ன பொருள்? அரசாங்கத்தில் பணிபுரிய வெளிநாட்டினரை எடுக்கலாமே?  அவர்களுக்கும்  கல்வி அறிவு இருக்கின்றது தானே?  காவல்துறைக்கும் அவர்களை  எடுக்கலாமே! சிங்கப்பூரும் பல வேலைகளுக்கு வெளிநாட்டினரை எடுக்கத்தான் செய்கிறார்கள். அங்கு மட்டும் தேவைக்கு அதிகமாக யாரையும் எடுப்பதில்லையே? அங்கும் மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்?

ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது.  மூளை இல்லாதவர்களெல்லாம் ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லலாம். உள்நாட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வேலைகளையெல்லாம் வெளிநாட்டினருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது?  அவர்கள் சோம்பறிகள் என்றால் ஏன் அப்படி ஒரு நிலைக்கு அவர்கள் ஆளானார்கள்?  ஏன்? சோம்பறிகளைத் திருத்த முடியாதா? நமது நாட்டில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களை வைத்துத் தானே நடந்து கொண்டிருந்தன. எந்தப் புகாரும் இல்லையே?

ஆக, நாம் எங்கோ தவறு செய்து விட்டோம். சாதாரணத் தவறு இல்லை. பெரிய தவறு. அதனால் தான் இன்று இலட்சக்கணக்கில் வெளிநாட்டவரை இங்குத் தங்க வைத்து சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம்! உள்நாட்டவர்களுக்கு வேலை இல்லாமல் பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறோம்!

நம் நாட்டவர்க்கே முன்னுரிமை! அமைச்சரோடு நாமும் வேண்டுகோள் விடுக்கிறோம்!

No comments:

Post a Comment