Friday 2 June 2023

வாழ்த்துகள் அக்கா நாசிலெமாக்!

 

                                                                இப்போது புதிய முகவரி
                                                              முன்பு தெரு ஓரம்

"அக்கா கடை நாசிலெமாக்" என்று அனைத்து மலேசிய மக்களால் அன்பாக அழைக்கப்படும் சங்கீதா அக்காவின் கடை புதிய இடத்திற்கு மாற்றம் கண்டிருக்கிறது.

ஒன்றும் பிரச்சனை இல்லை.  முன்பிருந்த கடையிலிருந்து ஓர் ஐந்து நிமிட நடை தான். உள்ளூர் மக்களுக்கு அத்துப்படியான இடம் என்பதால் அக்காவின் வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்த நேரத்தில ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். தொழில் செய்யும் தமிழர்களை எதையாவது சொல்லி அவர்களை மட்டம்தட்டி, மக்குகளாக சித்தரிப்பது ஒரு சிலருக்குக் கைவந்த கலை. நண்டு கதைகளைச் சொல்லி தமிழர்கள் இப்படித்தான் என்று  நட்டுவாக்கிளிகளாக ஒரு சிலர் செயல்பட்டதைப் பார்த்தோம்!

இது போன்ற கதைகள் எல்லாம் எதற்காகச் சொல்லப்படுகிறது என்பதை இப்போது நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இது தமிழர் மீதான உளவியல்  தாக்குதல் என்பது தான் உண்மை.

நண்டு கதைகளை மறந்துவிட்டு எறும்பு கதைகளைப்பற்றி சிந்திப்போம். இந்த எறும்புகள்  ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்து கொண்டு  ஒரே பாதையில் பயணம் செய்து அவைகளது உணவுக்காக  உழைத்து வாழ்வதை நாம் பார்க்கிறோம். எந்தவொரு தடங்களுக்கும் அவை அஞ்சுவதில்லை. ஒரே பாதை! ஒரே பயணம்! ஒரே வெற்றி! அதன்படி நாமும் உழைப்போமே. பாதை ஒன்று! பயணம் ஒன்று! ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பு! வெற்றி நமதே!

இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.  நாம் எதனைச் செய்தாலும் அதைக் குறை சொல்ல நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.அவர்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். யார் நல்லதைச் சொல்லுகிறார்கள், நல்லது பேசுகிறார்கள்  அவர்களை மட்டு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.  அட! ஒருவருமே இல்லையா?  "கடவுள் என்னோடு இருக்கிறார்! அவர் வழிகாட்டுவார்!" என்று ஒவ்வொரு நிமிடமும் கடவுளை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்! இது தான் எளிமையான வழி. கடவுள் உங்களோடு இருப்பதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!  நீங்கள் நல்லதைச் செய்யும்வரை அவர் உங்களோடு இருப்பதில் அவருக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கப் போவதில்லை! 

அக்கா சங்கீதா பல ஆண்டுகளாக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்.  ஆமாம், 13 ஆண்டுகள் என்பது நீண்ட பயணம் தான்.  அவரை இனி முடக்கிப் போடுவது என்பது நடக்கக் கூடிய காரியம் அல்ல. எல்லாப் பிரச்சனைகளையும் பார்த்துவிட்டார். அனுபவித்துவிட்டார்.  இனி என்ன? இந்தக் கழிசடைகளையெல்லாம் தூக்கி எறிய வேண்டும். அவ்வளவு தான்!

எனக்குள்ள ஒரே வருத்தம் என்னவென்றால் நமது பெண்கள் கூட வரிந்து கட்டிக்கொண்டு அவருடன் மல்லுக்கு நின்றதுதான். நமது சமுதாயத்தில் பெண்கள் தான் சிறு தொழில்கள் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை இப்படியெல்லாம் செய்து ஒரங்கட்ட பார்ப்பது எப்படியும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.  நமது சமுதாயம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட சமுதாயம். போட்டி பொறாமைகளைச் சந்தித்த சமுதாயம். இப்போது தான் அவைகளிலிருந்து நாம் விடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.  நல்லதே நடக்கும் என நம்புவோம்!

அக்காவை நாம் வாழ்த்துகிறோம். மீண்டும் பல வெற்றிகளைக் குவிக்க தமிழ் மக்கள் துண நிற்பர்!                                      

No comments:

Post a Comment