Monday 5 June 2023

சமயங்கள் விவாதப்பொருள் அல்ல!


சமய விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம். சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்ற வேண்டாம்.  விவாதப் பொருளாக பொது வெளியில் பேச வேண்டாம். இது தான் மாட்சிமை தங்கிய மாமன்னரின் பிறந்த நாள் வேண்டுகோளாக மலேசியர்களிடம் வைத்திருக்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகள், அதுவும் குறிப்பாக தேர்தல் காலங்களில், சமயங்களைப் பற்றிப் பேசி கைதட்டல்கள் வாங்குவது என்பது எப்போதும் உள்ளதுதான்.

ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது  என்பது ஆரோக்கியமான விஷயமாகக் கருத முடியாது.

அதுவும் அரசியல்வாதிகளுக்கு எப்போது சமயம், மொழி போன்ற விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது அத்துப்படி.  மக்களிடமிருந்து  கைதட்டல்கள் வரவேண்டும்,  அது வாக்காக மாற வேண்டும் ஏன்பது தான் அவர்களது நோக்கம்.  இந்த இரண்டு விஷயங்களுமே மிகவும் சக்தி வாய்ந்தவை. உணர்ச்சிகரமான விஷயங்கள்.  விரைவில் மக்களிடம் போய் சேர்ந்துவிடக் கூடியவை.

மக்களுக்கோ அரசியால்வாதிகள் பேசுவதில் உண்மை இல்லை என்று தெரிந்தாலும் எப்போதும் ஒரு சந்தேக மனநிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர். அப்படி நடந்துவிட்டால்?  இப்படி நடந்துவிட்டால்? மக்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை.  அவர்களில் பலருக்குக் கள நிலவரம்  தெரிவதில்லை.  நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்களின் சமயத்திற்கோ, மொழிக்கோ ஏதேனும் களங்கள் ஏற்பட்டிருக்கிறதா, பின்னைடைவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அவர்கள் யோசித்துப் பார்த்தாலே தெரியும்.  இதுவரை எதுவும் ஆகவில்லை இனிமேலும் எதுவும் ஆகப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சமயம். மொழி என்பது இப்போதும் எப்போதும்  அரசியல்வாதிகளுக்கு மிகவும் கைகொடுக்கும்  ஒரு சொல் என்பதால் அதனை அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். யார் இந்த அரசியல்வாதிகள்? பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் ஏன் அரசியலுக்கு வந்தோம் என்பதை மறந்தவர்கள்!  இலஞ்சம், ஊழல் என்றால் முதல் வரிசையில் நிற்பவர்கள்.  இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் சமயத்தின் பெருமையும் மொழியின் பெருமையும் அடிக்கடி தேவைப்படுகிறது! இல்லாவிட்டால் அவர்களே மறந்து போய்விடுவர்!

நாம் சொல்ல வருவதெல்லாம் சமயத்தையும் மொழியையும்   கேலி பொருளாக்காதீர்கள் என்பது தான்!

No comments:

Post a Comment