Saturday 3 June 2023

பெண்களே! துணிவோடு செயல்படுங்கள்!

 

இப்போது உள்ள பெண் பிள்ளைகளுக்கு துணிச்சலைப் பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. 

துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்பார்கள்.  இப்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் துணிவற்றவனாக இருந்தால் சோத்துக்கே வழியில்லாமல் போய்விடும்.

பணம் உள்ளவன் பிழைத்துக் கொள்கிறான். பணம் இல்லாதவனால் என்ன செய்ய  முடியும்?  

அதற்குத்தான் ஏதாவது தொழிலைக் கற்றுக்கொண்டு  உங்களது திறமையைக் காட்டுங்கள் என்று ஒருசிலராவது கத்திக் கொண்டிருக்கிறோம்.  அந்தக் கூச்சல் இப்போது பலனளித்துக் கொண்டிருக்கிறது  என்று நம்பலாம்.  "ஏன் ஆரம்பிக்க முடியவில்லை?" என்று காரணங்களை அடுக்கிக் கொண்டிருப்பவர்களை அலட்சியப்படுத்துங்கள். அவர்கள் வயிறு நிரம்பி இருப்பதால்  அவர்களுக்கு எதுவும் தேவையில்லை.   தொழில் தொடங்குவது என்பது சும்மா வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக அல்ல. தொழில் என்பது காலாகாலமும் அது உங்களது தொழில். உங்களது வாரிசுகளின் தொழில். தொழில் வளரும். முற்றுப்புள்ளி  தேவை இல்லை.  அப்படி யோசியுங்கள்.

இன்று நமது நாட்டை எடுத்துக் கொண்டால் சின்னஞ்சிறு தொழிலிருந்து பெரும் தொழில்வரை சீனர்கள் கையில் தான்  அத்தனை தொழில்களும் உழன்று கொண்டிருக்கின்றன. ஏன் அவர்கள் மட்டும் யாரிடமாவது கைகட்டி வேலை செய்வதில்லை என்று யோசித்தீர்களா?  இன்றும்  நாட்டின் பொருளாதாரம் அவர்களது கையில் தானே!   ஏன்? அவர்களுக்கு வேலை கொடுக்க ஆளில்லையா?

இன்றைய நிலையில் ஆண்களைவிட பெண்கள் தான் துணிச்சல் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.   அது சீன,மலாய், இந்தியர் யாராக இருந்தாலும் சரி தொழில் செய்வதில் பெண்கள் தான் முன்னணியில் நிற்கிறார்கள்.  ஒன்று: தங்களுக்குப் பொருளாதாரத் தடங்கல்கள் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். பிள்ளைகளின் கல்வி, குடும்பப் பொருளாதாரம் அனைத்துக்கும் தங்களது வருமானம் தேவை என்று நினைக்கிறார்கள்.  கணவரின் வருமானம் என்பது உறுதியற்ற  ஒன்று என்கிற நிலைதான் பெரும்பாலும்.

இன்றைய நிலையில் வீடுகளிலிருந்தே குடும்பப் பெண்கள் செய்யக்கூடிய தொழில்கள் நிறையவே உள்ளன. வீட்டுக்கு அருகிலேயே  தோசை, இட்டிலி,நாசிலெமாக்  ஐஸ் தண்ணி, இப்படி செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். இன்னும் பலர்  வீட்டிலேயே சமைத்து  உணவு விநியோகம் செய்கின்றனர்.  இப்போது பலர் கேக் செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு கேக் விற்பனை செய்கின்றனர். எதைச் செய்தாலும் சுவையாக இருந்தால் ஜெயிக்க முடியும்.

இன்றைய நிலையில் வெற்றி என்பது பொருளாதார வெற்றி தான். பணம் பத்தும் செய்யும் என்பார்கள். நமது சமுதாயப் பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லையே? காரணம் பொருள் இல்லா சமுதாயம் குப்பையியிலே!  அதைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

தொழில் செய்ய துணிவு வேண்டும். அது நம் பெண்களிடம் நிறையவே உள்ளது!

No comments:

Post a Comment