Monday 12 June 2023

வர்த்தகர்களே பயன் பெறுங்கள்!

 

                    நன்றி: வணக்கம் மலேசியா

சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சம்மேளனம் சமீபத்தில் சிறு, குறு நடுத்தர  தொழில்களுக்கான ஒரு தேசிய மாநாட்டை நடத்தியது.  இந்த மாநாட்டில்  தொழில் முனைவர் கூட்டுறவு துணையமச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி  தொடக்கி வைத்தார்.  வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 500 வர்த்தகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்: வர்த்தகர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் பல கோடிகளை ஒதுக்குகிறது.  அவர்களின் வர்த்தக மேம்பாட்டிற்காக.  ஆனால் இது பற்றியெல்லாம் நமக்கு  எதுவும் தெரிவதில்லை. இது நாள்வரை நமக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன் நமது தலைவர்களுக்காகவது தெரிந்திருக்குமா என்பதும் தெரியவில்லை! அதுபற்றி யாரும் வாய் திறக்கவில்லை!  அப்படியென்றால் அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை என்பது தானே  பொருள்?

சரி,  போனது பொனது தான்.  அது பற்றி பேசுவதில் பயனில்லை. ஆனாலும் இனி மேல் வர்த்தக சமூகம் வாய்மூடி மௌனியாக இருப்பதில் பயனில்லை.

எப்படியோ நமக்குத் தெரிந்ததெல்லாம் மித்ரா மட்டும் தான்.  பல ஆண்டுகள் மித்ராவையும், செடிக்கையும் திட்டிக் கொண்டு தான் இந்த வர்த்தக சமூகம் பயணம் செய்திருக்கிறது. இன்னும் பல வழிகள் இருக்கின்றன என்பதைக் கூட  நமக்குத் தெரியப்படுத்தவில்லை.

ஆனால் இந்த முறை நிலைமை மாறிவிட்டது.  இப்போது எல்லாருமே பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்திய சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றியவர்கள்  இப்போது ஏமாந்து போய் தெருவுக்கு வந்துவிட்டார்கள்! இனி மேல் இந்த சமூகத்தை ஏமாற்றமுடியாது  என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

இந்த நாட்டில் உள்ள மற்ற சமூகத்தினரைப் போல இந்தியர்களும் வர்த்தகத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.  நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பது தவறு.  ஏன் நமது பிரதமர் கூட இந்திய தலைவர்களிடையே ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள் என்று அறிவுரைக் கூறியிருக்கிறார். தலைவர்கள் என்றால் ஒற்றுமைப்படுவார்கள். திருடர்களைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

இனி நமது  வர்த்தக சொந்தங்களுக்கு ஒரு சில அறிவுரைகள் உண்டு. உங்களின் தொழில் வளர்ச்சிக்கு எந்தவொரு தயக்கமும் இல்லாமல்  மித்ராவை நாடுங்கள். கடன் கிடைக்கவில்லை என்றால் அதற்கான காரணங்கள் பொது வெளியில் வைக்கப்பட வேண்டும். அது மித்ராவின் கடமை.  வங்கியில் கடன் என்றால் ஏகப்பட்ட நெருக்கடிகளைக் கொடுப்பார்கள். இந்தியர்கள் என்றால் கடன் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.  மித்ராவும் அதே நடைமுறையைக் கடைப்பிடித்தால்  நாம் எங்கே போவது?

நம்முடைய வேண்டுகோள் எல்லாம் கடன் வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை.

வாருங்கள்! வர்த்தகம் நமது வாழ்வியல்! வெற்றி பெறுவது நமது கடமை!

No comments:

Post a Comment