Sunday 25 June 2023

நீண்ட நாள் குற்றச்சாட்டு!

 

தமிழ்ப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களில் பலர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை  என்கிற குற்றச்சாட்டு ஒரு நீண்ட நாள் குற்றச்சாட்டு. அது பெற்றோர்களின் முடிவு அதனை நாம் மதிக்க வேண்டும்.

அன்று, அந்த காலகட்டத்தில், நான் வேறு விதமாக நினைத்தேன். அன்றைய தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் என்பது, அங்குத் தமிழ் இருக்கிறது என்பதைத் தவிர,  வேறு எந்த அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பெரும்பாலும் எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தன.

தரமற்ற கட்டடங்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தயங்கத்தான் செய்வார்கள். பெற்றோர்களின் தரம், அவர்களது தொழில் சார்ந்து தாழ்ந்திருந்த போது, கட்டடங்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே படித்து வளர்ந்துவிட்ட அடுத்த தலைமுறைக்கு அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லை.

ஆனாலும் தமிழ்ப்பள்ளிகள் பலவாறு மாற்றம் கண்டுவிட்டன.  கட்டடங்கள் மாறிவிட்டன.  இன்றைய பெற்றோர்கள் கட்டடங்களை வைத்துத்தான்  அனைத்தையும் மதிப்பீடு செய்கின்றனர். கௌரவம் என்று வரும் போது  வேறு வழியில்லை.

இன்று என் பேரன் படிக்கின்ற தமிழ்ப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள்  எல்லாம் வசதியான குடும்பங்களைச் சார்ந்தவர்கள். எல்லாம் மேல்தட்டு பெற்றோர்கள். மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.  பிரமாண்டமான கட்டடம் என்பதால்  அனைவரையும் அது ஈர்க்கிறது.

இன்னும் பழைய நிலையிலேயே இருக்கும் பள்ளிக்கூடங்கள் இப்போதெல்லாம்   பெற்றோர்களை ஈர்ப்பதில்லை. அந்த பெற்றோர்களில்  தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் அடங்குவர். இதிலும் ஒரு வகையினர் இருக்கின்றனர். தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் இவர்களே இங்கு தரமான கல்வி இருக்காது என்று நினைக்கிறனர்.  இவர்களைப் போலத்தான்  சோம்பறிகள் மற்ற பள்ளிகளிலும் இருப்பார்கள் என்கிற எண்ணம் அவர்களிடம் உண்டு.

எப்படியோ  இந்த குற்றச்சாட்டு என்பது  ஒரு நீண்ட நாளைய குற்றச்சாட்டு. அவர்கள் ஏன் அனுப்புவதில்லை  என்பது அவர்களுக்குத்தான் தெரியும். மொழிப்பற்று, வருங்காலம், பட்டம் பதவி, அதிகாரம் - இவைகளையெல்லாம் வைத்துத் தான் ஒவ்வொருவரும் இயங்குகின்றனர். அவர்களின் கணக்கில் மொழிப்பற்று என்பதெல்லாம் வருவதில்லை.

ஆனாலும் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. நமது மொழி நதிபோல என்றென்றும் ஓடிக்கொண்டிருக்கும்!

No comments:

Post a Comment