Sunday 11 June 2023

இருபத்து ஏழாவது முறை!

விடா முயற்சிக்கு நாம் உதாரணமாகக் கொள்வது கஜினி முகமது. அதாவது கஜினி முகமது இந்தியாவின் மீது பதினேழு முறை படை எடுத்ததாகவும் அதில் அவர் தோல்வி அடைந்ததாகவும்  பதினேழாவது  முறையே அவர் வெற்றி பெற்றதாகவும்  சொல்லக் கேட்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் தெளிவு இல்லை.

ஆனால் சீனாவில் ஒரு கோடிஸ்வரர் கஜினி முகமதுவையும் மிஞ்சிவிட்டார் என்பது தான் இப்போது நமக்குப் புதிதாக வெளிவந்திருக்கும் செய்தி.

எந்த பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியில் கோடிஸ்வரனாக மாறியிருக்கும்  லியாங் ஷி என்பவர் தான் அவர். ஓர் உண்மையை அவர் இப்போது உணர்ந்திருக்கிறார்.  கோடிஸ்வரனாவது எளிது. ஆனால் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு அதற்கான நுழைவுத்தாளில் வெற்றி பெறுவது  என்பது எத்துணைக் கடினமானது  என்பதை இப்போது தான் அவருக்குப் புரிந்திருக்கிறது!

லியாங்கிற்கு இப்போது வயது 56. தனது 16-வயதிலிருந்து  தனது கனவான பல்கலைகழகத்தில் சேர இருபத்தாறு முறை தேர்வை எழுதி அவரால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது அவர் எடுப்பது 27-வது முறை. ஒரு வேளை  அவர் வெற்றி பெறலாம். 

லியாங்கிற்குக் கல்வித் தாகம் எப்போதும் உண்டு. தனது கல்வி முழுமை பெறவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. ஓர் உயர்தர பல்கலைக்கழகத்தில் தான் பட்டம் பெற வேண்டும் என்கிற தணியாத் தாகம் உண்டு.  அவருடைய மகன் அதே பரிட்சையை எழுதி பல்கலைக்கழகத்திற்குப் போய்விட்டான்!  மகன் கோடிஸ்வரர்  வீட்டுப் பையன்.  அப்பா அப்படியா? தொழிலையும் கவனித்துக் கொண்டு கல்வியில் சாதனையும் செய்ய வேண்டும் என்கிற இலட்சியத்தையும் கொண்டிருக்கிறார்!   வாழத்தப்பட வேண்டியவர்.

நமக்கும் அதில் ஒரு படிப்பினை உண்டு.  நான் பணக்காரன், இலட்சாதிபதி, கோடிஸ்வரன் எல்லாம் சரிதான் தகுதியான கல்வி அறிவைப் பெற்றிருந்தால், பணத்தையும் பெற்றிருந்தால், நாம் தான் தலைவனுக்குள்ள தகுதியைப் பெற்றிருக்கிறோம். நம்மைத் தான் உலகம் தலை நிமிர்ந்து பார்க்கும்.  அரசாங்கம் நம்மைத்தான் ஆலோசனைகளை வழங்க கூப்பிடும்.

கோடிஸ்வரனாவது எவ்வளவு முக்கியமோ அதே போல  தரமான கல்வி அறிவைப் பெற்றிருப்பதும் முக்கியம்.

சீனாவின் கோடிஸ்வரர், லியாங் ஷி  இம்முறை  தேர்வில் வெற்றி பெற நமது பிரார்த்தனைகளையும் இறைவனிடம் சமர்ப்பிப்போம்!
 

No comments:

Post a Comment