Thursday 15 June 2023

கழிவறையை சுத்தப்படுத்துவதா!

 

சமீபத்தில் பிரதமர் அன்வார் பள்ளி கழிவறைகளைச் சுத்தம் செய்ய மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதாகக் கூறியிருக்கிறார்.

இதி எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  கழிவறைகளைச் சுத்தம் செய்வது என்பதெல்லாம் ஒரு ஒழுங்குமுறை. 

ஒரு சில பெற்றோர்கள் வீட்டில் குப்பைகளைப் போடாமல் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்,கழிவறை உட்பட. ஆனால் வீட்டுக்கு வெளியேயும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அதன் விளைவு என்ன? வீட்டுக்கு  வெளியே என்ன நடக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.   ஆபத்து அவசரத்துக்குப் பொது கழிவறைகளைக் கூட பயன்படுத்த முடிவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் இப்படி, அந்த நாட்டில் அப்படி, இந்த நாட்டில் இப்படி என்று மற்ற நாடுகளைப் பற்றி பேசுகிறோம். ஏன் நமது நாட்டில் அப்படி செய்ய முடியாதா? சிங்கப்பூரில் குப்பை போட்டால் தண்டனைகள் உண்டு. அதனால் குப்பை பொது வெளிகளில் போடுவது குறைந்து விட்டது. அதுவே இப்போது அவர்களின் கலாச்சாரமாகி விட்டது. அது தான் அவர்களது நோக்கம், தண்டனைப் போட்டு பணம் வசூல் பண்ணுவது அல்ல.

ஆனால் நமது பள்ளிகளில் இன்றைய நிலைமை எனக்குத் தெரியவில்லை.  ஆனால் ஒன்று தெரியும். தேசியப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில்  படிக்கும் எனது  மலாய்ப்பேத்தி பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் முன்னே அருகில் உள்ள கடைக்குச் சென்று பாத்ரூமுக்குப் போன  பிறகு தான் வகுப்புக்குச் செல்லுவாள்..  காரணம் அவளது பார்வையில்,  பள்ளியில் உள்ள  கழிவறைகள் சுத்தம் இல்லை என்பது தான்.

ஆனால் வீடுகளைச் சுத்தமாக வைத்துக்  கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறோம் வீடுகளுக்கு வெளியேயும்  சுத்தம் சுகம் தேவை என்பது ஏனோ நமக்கு உறைக்கவில்லை.  வீட்டுக்கு வெளியே சுத்தம், இல்லையென்றால், பொதுக் கழிவறைகளில் சுத்தம் இல்லையென்றால்  அதனால் யாருக்குக் கேடு? நமக்குத் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுத்தம்,சுகம், என்பது எல்லாருடைய பொறுப்பு. அதன் மூலம் வியாதிகள் பரவத்தான் செய்யும். பள்ளி சிறாரிடையே இந்த சுத்தத்தையும், சுகத்தையும்  சொல்லித்தரப்பட வேண்டிய விஷயமே. இதில் ஏதும் பெருமை, சிறுமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

வருங்காலங்களில் இந்த நாடு சுத்தம், சுகாதாரமிக்க ஒரு நாடாக விளங்க வேண்டும். இத்தனை ஆணடுகளாக குப்பைக்  கூளங்களோடு வாழப் பழகிவிட்டோம்! அதிலிருந்து விடுபட வேண்டும்.

பிரதமரின் இந்த அறைகூவல் நல்லதொரு பார்வை! நமக்கும் அந்தப் பார்வை வரவேண்டும்!

No comments:

Post a Comment