Wednesday 28 June 2023

தொழில்நுட்ப பயிற்சிகள்

 


சமீபத்தில் தான் எஸ்.பி.எம். தேர்வுகள் வெளியாயின. வெற்றி தோல்விகள் சகஜம். பலர் மேற்கல்வியைத் தொடர்கின்றனர். இன்னும் பலர் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். 

இனி கல்வியே வேண்டாம் என்று நினைப்பவர்கள் அவர்களுக்குத் தோதான கைத்திறன் பயிற்சிகள்  மூலம் புதியதொரு  கல்வி முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.  ஆமாம். நேரடியாகக்  களத்தில் இறங்க வேண்டியது தான்.

அரசாங்கம் பலவிதமான பயிற்சிகளைக்  கொடுக்கின்றனர்.  குறுகியகால பயிற்சிகள் நீண்ட  கால  பயிற்சிகள் - இப்படி பல பயிற்சிகள் உண்டு. பயிற்சி காலத்தில்  படிப்பணமும் அரசாங்கம் கொடுக்கின்றது. கையில் காசும் கொடுத்து, உணவும் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து, சந்தையில் வேலையும் வாங்கிக் கொடுத்து - வேறு என்ன தான் உங்களுக்கு வேண்டும்?

ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த செய்திகள் எந்த அளவுக்கு பொது மக்களுக்குப் போய்ச் சேருகிறது? மாணவர்களுக்கு இந்த செய்திகள் போய்ச் சேர வேண்டும்.  அக்கறையான மாணவர்கள் தேடிப்போய் செய்திகளைச் சேகரித்துக் கொள்கின்றனர். பெற்றோர்களில் பலர்  தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக  தக்கவர்களிடம் சென்று பயிற்சிகள் பற்றி  அனைத்தையும் அறிந்து கொள்கின்றனர்.

ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகள் தங்களைவிட்டு பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக  வெளியே அனுப்ப மறுக்கின்றனர்.  பெற்றோர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படித்தான் நாம் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். உங்கள் குழந்தைகளை நீங்கள் நம்ப வேண்டும்.  

இன்றைய நிலையில் நமது இளைஞர்கள் ஏதாவது ஒரு துறையில் பயிற்சி பெற்றிருக்கத் தான்  வேண்டும்.  அரசாங்கம் தனது பங்காக அனைத்தையும் செய்கிறது.  நாம் எல்லாகாலங்களிலும்  ஏதோ ஒரு குற்றச்சாட்டை  அரசாங்கத்தின்  மீது வைக்கிறோம்.  அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி. இளைஞர்களுக்கான  பயிற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் தமிழ் இளைஞர்களின் பங்கு என்பது பாராட்டும் அளவுக்கு இல்லை.  கட்சிகளும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.

ஆக நாம் ஏகப்பட்ட குறைகளை அரசாங்கத்தின் மீது சொல்லிவிட்டோம். அல்லது கட்சிகளின் மீது சொல்லிவிட்டோம்.  நமது குறைகள் மட்டும் நமக்குத் தெரிவதில்லை. அரசாங்கம் கொடுக்கும் இலவச பயிற்சிகளை நீங்கள் புறக்கணித்தால் தனியார் பயிற்சி நிலையங்களில் நீங்கள் பணம் போட்டு தரமற்ற பயிற்சிகளைத்தான் நீங்கள் பெற வேண்டி வரும்! ஏற்கனவே இப்படித்தான் நடந்தது. 

அரசாங்க பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தரமான பயிற்சிகளை மேற்கொள்ள எனது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment