இன்றைய இளைஞர்கள், முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள், பெரும் கடன் சுமையில் சிக்கி இருப்பதாக இரண்டாவது நிதி அமைச்சர் கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகவே நமக்குப் படுகிறது.
முப்பது வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 53,000 பேர் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும் அவர்களின் கடன் சுமார் நூற்றுத் தொண்ணூறு கோடி என்பதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது ஒன்றும் புதிய பிரச்சனையாக நமக்குத் தோன்றவில்லை. என்று கடன் அட்டை நாட்டில் அறிமுகமானதோ அன்றே பிடித்தது பீடை. எல்லாரும் கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு நினைத்த போதெல்லாம் செலவு செய்கிற பழக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
அதுவும் இளைஞர்களுக்கு எதனையும் சொல்லிக்கொடுக்கத் தேவை இல்லை. ஆடம்பரத்தை விரும்பும் சமுதாயமாக இளைஞர் சமுதாயம் மாறிவிட்டது. பெரும்பாலும் படித்த இளைஞர்கள் தாம். ஆனால் என்ன செய்ய? சாதாரண நடைமுறையில் கூட கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் தான் வாங்குகின்றனர். ஆனால் எப்போதுமே இது சாத்தியமா?
அதைவிட மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் தங்களின் குடுமபத்தைக் காப்பாற்றும் திறனையும் பலர் இழந்து வருகிறார்களாம். தங்களின் தினசரி வாழ்க்கையை நடத்தக் கூட மற்றவர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பது தான் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம். வேலை செய்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் வேலை இல்லாதோர் நிலைமை எப்படி இருக்கும்?
உங்களை யாராவது "கஞ்சப் பிரபு" என்று சொன்னால் கவலைப்படாதீர்கள். உங்கள் குடும்பத்தின் நலனுக்காக கஞ்சத்தனமாக இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். மற்றவர்களிடம் கையேந்துவதைவிட சிக்கனம் மிக மிக உயர்வானது. கையில் பணம் இல்லையென்றால் நண்பர்கள் இல்லை, உறவுகள் இல்லை - எல்லாமே விலகி நிற்கும். அது தான் உலகம்.
நிதி அமைச்சர் கூறியிருப்பதை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். பணத்தில் சிக்கனம் இல்லை என்றால் குடும்பங்கள் சீரழியும். பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். பணத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்யுங்கள்.
கடன் இல்லா வாழ்வே நமக்குத் தேவை. அதுவே நமக்கு நிம்மதியைத் தரும்.
No comments:
Post a Comment