Saturday 2 April 2022

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?

 

                                               File Picture

மழலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒருசில ஆசிரியர்களின்  செயல்கள் நம்மை அதிர வைக்கின்றன.

சமீபத்தில் மூவார் நகரின் மழலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியை ஒருவர்  குழந்தைகளிடம் மிருகத்தனமாக  நடந்து கொண்டாதாக  செய்திகள் வெளியாயின. இப்போது அவர்  போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்!

என்றாலும் இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. தொடர்ந்து இது போன்ற செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்னும் போதே அவர்கள் அனைவரும் குழந்தைகள் தான். மழலைப்பள்ளிகள் என்னும் போது அவர்களைவிட இவர்கள் இன்னும் சிறிய குழந்தைகள். இவர்கள் இன்னும் "பேம்பர்ஸ்" போடுகிற பழக்கம் உள்ளவர்கள்! என்ன செய்ய?  இதையெல்லாம் தெரிந்து தானே படித்துக் கொடுக்க வருகிறீர்கள்?

இந்தக் குழந்தைகள் அனைவருமே விளையாட்டுத்தனம், சுட்டித்தனம் இப்படி அனைத்துத் தனமும் அவர்களிடம் உண்டு. வீடுகளில்  அடக்க முடியவில்லை என்று இப்படி பள்ளிகளுக்குத் தள்ளிவிடும் பெற்றோர்களும்  உண்டு!

அதற்கான காரணங்கள் நமக்குத் தெரியும். ஆசிரியர்கள் பயிற்சி பெற்றவர்கள். குழந்தைகளின் மனநிலையை அறிந்தவர்கள். குழந்தைகளுக்கு ஓட வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும் - இப்படியெல்லாம் செய்து தான் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும்.

அடித்துத்தான் அவர்களைத் திருத்த வேண்டும் என்பது  இன்றைய நிலையில் சரிப்பட்டு வராது. அதுவும் இப்போது உள்ள குழந்தைகள் மிகவும் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள்! பெற்றோர்கள் அவர்களைவிட இன்னும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் குழந்தைகளிடம் பலிக்கவில்லை!

பாலர் பள்ளிகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகள் தாம். அவர்களால் தான் குழந்தைகளிடம் அன்பாய் பழக முடியும் என்பது பொதுவான கருத்து.  அவர்கள் பெரும்பாலும்  அன்பாகத்தான் இருக்கிறார்கள்.  பல சமயங்களில் குழந்தைகளின் ஆட்டம் அளவு மீறலாம். அவர்கள் தெரிந்து செய்வதில்லை. ஆசிரியர்கள் ஒரே ஆயுதம் என்றால் மிரட்டல் மட்டும் தான் அல்லது அன்பை கையில் எடுக்க வேண்டும். மற்றவை எதுவாக இருந்தாலும் வன்முறையில் போய் முடியும்!

குழந்தைகளை விரும்பும் ஆசிரியர்களால் தான் மழலைப்பள்ளி, பாலர் பள்ளி எதுவாக இருந்தாலும் அவர்களால் வேலை செய்ய முடியும். அதனை விட்டு வன்முறையை அவிழ்த்துவிட்டால்  கடைசியில்  சிறையில் தான் அடைக்கலமாக வேண்டி வரும்!

ஆசிரியைகளே, உங்களுடைய குணராசிக்கு எது பொருந்துமோ அது போன்ற வேலைகளைத் தேர்ந்தெடுங்கள்! காவல்துறைக்குப் போக வேண்டியவர்கள் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்! கற்றல், கற்பித்தலுக்குப்  போக வேண்டியவர்கள் கட்டடம் கட்டும் இஞ்சினியராக  ஆசைப்படாதீர்கள்!

உங்களுடைய வசதிகளுக்காகத் தான் மழலையர் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்களும் மழலையாக மாறி விடுங்கள்!

No comments:

Post a Comment