Saturday 9 April 2022

கார் பூட் ஆன்லைன் வகுப்பாக மாறியது!

 

                                 Online Class in her car boot!  Student, Anis Arina Aqilah Roslee 

சபா மாநிலத்தைச் சேர்ந்த  பல்கலை மாணவி, அனிஸ் அரினா,  23 வயது,  தனது கார் பின்னால் உள்ள கார் 'பூட்' டில் அமர்ந்து கொண்டு  தனது ஆன்லைன் மூலம்  படிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டிருக்கிறார்!

அனிஸ் வசிக்கும் கிராமத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் தீ விபத்தில் சேதமடைந்ததால் அந்தப் பகுதியில் இணையச் சேவை முற்றிலுமாகத்  துண்டிக்கப்பட்டது.  ஆனால் கல்வியை விட்டுவிட முடியாதே. 

அதனால் இணையச் சேவை கிடைக்க அவர் சுமார் பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவு தனது காரில் பயணம் செய்து இணையச் சேவையைப் பயன்படுத்துகிறார். தொலைவு தான் என்றாலும் வேறு வழியில்லை. கல்வியின் முக்கியத்துவம் அறிந்த மாணவி. பாராட்டுவோம்!

தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் என்னவானது?  கிராமத்தார் அதிகாரிகளிடம் அது பற்றி நடவடிக்கை எடுக்குமாறு கூறிவிட்டனர். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. பின்னர் இந்த மாணவியின் செய்தி வெளியான பின்னர் தான் நடவடிக்கை எடுப்பதில் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்!

இது தான் அரசாங்க ஊழியர்களின் இயல்பு! அவர்கள் எதனையும் கண்டு கொள்ளமாட்டார்கள்.  அதுவும் கிராமம் என்றால் இன்னும் மோசம்! கிராமம் என்றால் அவர்களுக்குச் சம்பளம் கிடைக்காதோ? புரியவில்லை! கொடுக்கின்ற சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்கிற பழக்கம் எல்லாம் அவர்களிடம் இல்லை!

இந்த மாணவியின் செய்தி மட்டும் வெளியாகாமலிருந்தால் அந்த கிராமத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்காது!

வேலை செய்யாமலே சம்பளம் வாங்கும் ஒரு ஜாதி என்றால் இந்த அரசாங்க ஊழியர்கள் தான்! அதுவும் ஒரு சில இடங்களில் இலஞ்சம் கொடுத்தால் தான்  காரியம் ஆகும் என்கிறார்கள்!

அநேகமாக இந்நேரம் அந்த கிராமத்து மக்கள் இணைய வசதியைப் பெற்றிருப்பார்கள் என நம்புவோம். 

இப்போதெல்லாம் கல்வி கற்பது என்பது முன்பு போல் அல்ல. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் தான்  நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தீ சேதமாக  இருந்தாலும் சரி அல்லது வேறு  ஏதாவது பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அதனைச் சரிசெய்ய வேண்டியவர்கள் அதனை உடனடியாகச் செய்ய வேண்டும்.  அதனை  இழுத்துக் கொண்டு போனால் அதனால் நிறைய பாதிப்புகள், குறிப்பாக மாணவர்களுக்கு ஏற்படும், என்பதை  இந்த நேரத்தில் நினைவுறுத்துவது நமது கடமை.

தனது கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து தன்னால் முடிந்த அளவு பத்து பதினைந்து மைல்களுக்கு அப்பால் சென்று தனது கடமையை நிறைவேற்றும் அந்த மாணவிக்கு நமது வாழ்த்துகள். அது மட்டும் அல்ல தனது கல்வியை முடித்து நல்லதொரு பட்டதாரியாக அவர் திகழ வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்!

No comments:

Post a Comment