Thursday 21 April 2022

நல்ல யோசனையே!

        தடுப்புக்காவல் மையங்களிலிருந்து தப்பிக்கும் ரோஹிங்ய கைதிகள்

முன்னாள் பிரதமர் நஜிப் நல்லதொரு கருத்தைக் கூறியிருக்கிறார். அவர் காலத்தில் இந்த ரோஹிங்ய அகதிகளப் பற்றி பெரிதாக  அவர் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் இப்போதாவது அவருக்குக் கொஞ்சமாவது  வலி எடுத்திருக்கிறதே அது பற்றி பெருமைப்படலாம்.

இந்த மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது பற்றி நமக்கு ஆராய்ச்சி தேவையில்லை.  அவர்களின் தாய் நாடான மியன்மார் அவர்கள் தேவையில்லாதவர்கள்  என்று கூறி அவர்களை ஒதுக்கிவிட்டது.

அவர்கள் எப்படியோ தப்பித்தவறி நமது நாட்டிற்குள் புகுந்துவிட்டார்கள். இப்போது எந்த நாடும் அவர்களைப் பங்கு போடத்  தயாராகயில்லை. இந்த நிலையில் அவர்களை எத்தனை ஆண்டுகள் தான் ஓர் இடத்தில் அடைத்து வைத்து சோறு போட்டுக் கொண்டிருக்க முடியும்?  ஐக்கிய நாடுகள் சபை உதவுகிறது என்றாலும் இந்த அகதிகள் வேலை செய்யும் ஆற்றல் உள்ளவர்கள். சும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களைத் தருவிப்பதைவிட இந்த அகதிகளை நமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதைத்தான் நஜிப் கூறியிருக்கிறார்.  அவர்கள் வேலை செய்கின்ற காலத்திலேயே ஒரு சிலர் வேறு நாடுகளுக்குப் போவதை நான் பார்த்திருக்கிறேன்.  முடிந்தவரை அவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட வாய்ப்புக் கிடைத்தால் அவர்களாகவே போகட்டும். யாரும் சுமை இல்லை. இங்கு அகதிகள் என்று கூறி அவர்களை அடைத்து வைத்திருப்பது மிகவும் பாவமான செயல்.

இன்னொன்றும் என் மனதில் உள்ளது. இந்த அகதிகள் தஞ்சம் புகும் நாடுகள் எல்லாம் ஏன் கிறிஸ்துவ நாடாகவே உள்ளன?  ரோஹிங்ய அகதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள். அவர்கள் ஓர் இஸ்லாமிய நாடான மலேசியா போன்ற நாடுகளில் தான் வாழ விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனாலும் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.  அதற்கான காரணமும் நமக்குத் தெரியவில்லை.

எது எப்படியோ நஜிப் சொன்ன கருத்து என்பது சிந்திக்க வேண்டிய கருத்து தான்.  இன்று வங்காளதேசிகளை வலுக்கட்டாயமாக இறக்குமதி செய்வதாகத்தான் பொது மக்களிடையே உள்ள கருத்து. இங்கு வருபவர்கள் எத்தனை பேர் மீண்டும் தங்களது நாட்டுக்குத் திரும்புகின்றனர். இங்கே தங்குபவர்களின் புள்ளி விபரங்கள் ஏதேனும் உண்டா என்கிற கேள்விகள் எழுகின்றன.

நம்மைப் பொறுத்தவரை ரொஹிங்ய அகதிகளுக்கு இங்கு வேலை கொடுத்து அவர்களைக் கௌரவமாக வாழ வழி செய்வது நமது மலேசிய நாட்டிற்கும் அந்தப் பொறுப்பு உண்டு என்பது தான்.

நஜிப் சொன்ன கருத்தைக் கொஞ்சம் சிந்திக்கலாம்!

No comments:

Post a Comment