Friday 22 April 2022

விபத்துகளைத் தவிர்ப்பீர்!

 

இது ரம்லான் மாதம். இன்னும் ஒரு வாரத்தில் பெருநாள் காலம். ஊர் திரும்புபவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு தான் ஊர் செல்ல வேண்டும்.

வெளியூர்களிலிருந்து ஊர் செல்லுவோர் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆண்டுக்கு ஒரு முறை ஊர் செல்லுகிறார்கள். அவர்களுக்கு இரயில், பஸ், விமானம் என்று இப்படி பல வகையான போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சபா, சரவாக் போகிறவர்கள் விமானத்தைத் தான் பயன்படுத்த வேண்டும். விமான நிறுவனங்கள் டிக்கெட் விலைகளையும் படுபயங்கரமாக ஏற்றிவிட்டார்கள். அவர்களின் போக்கு வரத்துக்கு வேறு வழியில்லை.

நாம் இங்கு நினைத்துப் பார்ப்பது கார் விபத்துகளைத்தான். கார், மோட்டார் சைக்கள் விபத்துகள் தவிர்க்கமுடியாது என்று சொல்லுவதற்கில்லை. பெருநாள் காலங்களில் ஊருக்குப் போவதில் அனைவருக்கும் ஆசையுண்டு. காரணம் பழைய நண்பர்களைச் சந்திப்பது, பெரியவர்களுடன் உரையாடுவது - இவைகள் எல்லாம் ஆண்டுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். அதனை நழுவவிட யாருக்கும் மனம் வருவதில்லை.

உண்மை தான். ஆனால் விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் சில வழிமுறைகளைக் கண்டுபிடித்தாக வேண்டும்.  ஒரு சில ஒரு சிலருக்குச் சரியாக இருக்கும்.  சான்றுக்கு ஆசிரியர்களுக்குப் பெரும்பாலும் ஒரு வார விடுமுறை இருக்கும். பெருநாளின் முதல் நாள் அடித்துப் பிடித்துப் போவதவிட அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ ஊருக்குப் போகும் போது சாலைகள் வெறிச்சோடி கிடக்கும்! நமக்குப் பயணமும் சாதகமாக இருக்கும். திரும்ப வரும்போது ஒரு நாளோ இரண்டு நாளோ கழித்து வீடு திரும்பலாம். பயணம் சுகமாக அமையும்.

பிரச்சனையெல்லாம் அனைவரும் ஒரே நாளில் போவதும் பின்னர் அனைவரும் ஒரே நாளில் திரும்புவதும் தான் இப்போதுள்ள பிரச்சனை. ஹரிராயாவுக்கு மட்டும் அல்ல இந்தப் பிரச்சனை. சீனப்புத்தாண்டு, தீபாவளி போன்ற பெருநாட் காலங்களிலும் இதே பிரச்சனை உண்டு. 

முன்பெல்லாம் அவரவர் பெருநாள் வரும்போது மட்டும் அவரவர்கள்  ஊருக்குத் திரும்புவார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. எந்தப் பெருநாளாக இருந்தாலும் சரி "போவோம் ஊருக்கு!" என்கிற நிலைமைக்கு அனைவரும் வந்துவிட்டனர்!  அதுவும் இடையே சனி, ஞாயிறு வந்துவிட்டால்  போதும் அதுவே ஏதோ ஒரு பெருநாள் காலமாக மாறிவிடும்!

பெரும்பாலும் நாம் உழைக்கும் வர்க்கத்தினர். விடுமுறை வந்தால் அனைத்தையும் மறந்து ஊருக்குப் போய் வருவது  இன்று தேவையான ஒன்றாகி விட்டது!  அவசியம் ஓய்வு தேவை என்கிற நிலைமைக்கு வந்து விட்டோம்.

எதுவாக இருந்தாலும் நாம் அவசரகதியில் எதையும் செய்யக் கூடாது. நிதானித்து நமது காரியங்களைச் செய்வோம்.

பெருநாள் காலங்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். துயரத்தைக் கொடுக்கக் கூடாது என்பதே நமது நோக்கம்.

முடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்போம்! இதுவே நமது பெருநாள் செய்தி!

No comments:

Post a Comment