Saturday 23 April 2022

இசைமேதை இளையராஜா

 


இசைமேதை இளையராஜாவைப் பற்றியான விவாதங்கள் இப்போது தமிழ்நாட்டில்  காரசாரமாக நடந்து கொண்டிருக்கின்றன!

இளையராஜா  தமிழர்களால் போற்றப்படும் ஒரு மாமேதை. அதில் யாருக்கும் சந்தேகமில்லை.

என்ன ஆயிற்று? அவரிடம் ஒரு புத்தகத்திற்கு  முன்னுரை   எழுத  கொடுக்கப்பட்டது. அது தூண்டில் என அவர் அறியவில்லை. புத்தகத்தின் தலைப்பு:  அம்பேத்காரும் மோடியும். இந்தப் புத்தகம் "அம்பேத்கார் சொன்னார் மோடி செய்து காட்டினார்" என்பது போன்ற ஒரு ஒப்பீட்டுப் புத்தகம்.

இளையராஜா  "ஆமாம்! அம்பேத்கார் சொன்னதை மோடி செய்து காட்டியிருப்பது பெரிய சாதனையே!" என்று அந்த முன்னுரையில் இளையராஜா எழுதியிருக்கிறார்.

இது தான் இப்போதுள்ள பிரச்சனை. இளையராஜா எழுதியது சரியோ தவறோ அது அவரது கருத்து.   கருத்துச் சொல்ல அவருக்கும் உரிமை உண்டு.  அவரது கருத்தில் நமக்கு  உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனை விமர்சனம் செய்யலாம். அவரது கருத்தை வெட்டி ஒட்டி விமர்சனங்களை வைக்கலாம்.

ஆனால் நடந்ததோ வேறு. அதனை ஆளுங்கட்சியினரும் திராவிடர் கழகமும்  மடை மாற்றும் செய்து அதனை தமிழர் மீதான தாக்குதல்களாக மாற்றிவிட்டனர்! 

விமர்சனங்களை வையுங்கள். கருத்துப் பரிமாற்றம் செய்யுங்கள். அதனை அனைவரும் வரவேற்கிறோம்.  அது அனைவரின் உரிமையும்  கூட. 

ஆனால் இங்குப் பேசப்பட்டதோ இளையராஜாவின் பிறப்பைப் பற்றியும் அவர் சார்ந்த சமூகத்தையும் பற்றியும் இழிவாகப் பேசியதுதான்  இப்போது பிரச்சனை ஆனது. அவரிடம் பல குறைபாடுகள் இருக்கலாம். இருந்தால் என்ன? மேதைகள் பலர் வழுக்கி விழத்தான்  செய்கிறார்கள்.  அவர்கள் உலகமே வேறு. ஊரோடு அவர்களால் ஒத்துப்போக முடியாது!

விஞ்ஞானி ஒருவர் ஏதோ பயணத்தின் போது அவரின் பெயர் என்ன என்று கேட்டதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லையாம்! பெயரை மறந்து போனாராம்! அப்படித்தான் இளையராஜாவும். அவர் ஓர் இசை மாமேதை. அவருக்கு அரசியல் தெரியாது. இசை மாமேதையிடம் அரசியலைக் கேட்டால் அவர் என்ன செய்வார்? அவருக்குத் தெரிந்ததை அவர் எழுதினார்..  இதற்கு ஏன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவரிடம் சண்டைக்குப் போகிறார்கள்?

சண்டைக்குப் போனாலும் பரவாயில்லை. ஏன் அவரது ஜாதி, மதம் எல்லாம் கூடே வருகிறது? அவரது ஜாதி எதுவாக இருந்தாலும் அவர் தமிழர். அவரது ஜாதியைச் சொல்லிக் கேவலப்படுத்தினால் அது தமிழர்களைக் கேவலப்படுத்துவதற்குச் சமம். எங்களைப் பொருத்தவரை தமிழர்களிடம் ஜாதி இல்லை. ஆனால் இப்படி அடிக்கடி சொல்லிச்சொல்லி இந்த திராவிடக் கட்சிகள் ஜாதியை வைத்தே வயிறு வளர்க்கின்றன என்பது தான் உண்மை.

ஓர் இசைமேதையை இப்படிக் கேவலப்படுத்துவதன் மூலம் உங்கள் திராவிடப் புத்தியைக் காட்டிவிட்டீர்கள். தமிழர்கள் என்றுமே உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

வாழ்க மாமேதை இளையராஜா! வாழ்க தமிழினம்!

No comments:

Post a Comment