Thursday 28 April 2022

வேதனையிலும் வேதனை!

                                               
இரு தினங்களுக்கு முன்னர், கஞ்சா கடத்தலுக்காக, நாகேந்திரன்  தர்மலிங்கம் சிங்கப்பூரில் தூக்கலிடப்பட்டார். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எல்லா முயற்சிகளும் வீண் போயின. நமது மாமன்னர், நமது பிரதமர் என்று அனைத்துத் தரப்பினரும் செய்த முயற்சிகள் எதுவும் பலனிக்கவில்லை.

நாம் யாரையும் குறை சொல்லுவதற்கில்லை. எல்லா நாடுகளிலும் சட்டங்கள் உள்ளன.  அங்கு நாம் போகும்போது அந்த நாட்டு சட்டங்களை மீற முடியாது. சிங்கப்பூருக்குள் கஞ்சா கடத்தினால் மரணத் தண்டனை நிச்சயம். மலேசியாவுக்குள் கடத்தினாலும் அதே நிலை தான். இந்த இரு நாடுகளில் உள்ளவர்களுக்கு இது தெரிந்த விஷயம் தான். எந்தக் காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆனால் அதிர்ச்சி தரும் விஷயம் வேறொன்றும் உண்டு. சிங்கப்பூரின் மனித உரிமை வழக்கறிஞர் திரு எம் ரவி அவர்கள் வருத்தம் தரும் செய்தியையும் வெளியிட்டார். சிங்கப்பூரில் கஞ்சா கடத்தலுக்காக தூக்குத்தண்டனையை எதிர்நோக்கும் வெளிநாட்டவர்களில் மலேசிய இந்தியர்களே அதிகம் என்னும் செய்தி நம்மை அதிர்ச்சிக்கு   உள்ளாக்குகிறது. இவர்களில் பெரும்பாலும் இளைய தலைமுறையினராகவே   இருக்க வேண்டும். வயதானவர்களிடம் கஞ்சா கடத்தும் "போஸ்ட்மேன்" வேலையைக் கொடுப்பது குறைவாகவே இருக்கும்.  ஆனாலும் எதனையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

திரு ரவி அதனை விளக்கும் போது ஏழ்மை நிலையில் உள்ளவர்களே இதில் ஈடுபடுகிறார்கள் என்கிற செய்தியையும் சொன்னார். கொரோனா காலத்திற்குப் பின்னர் என்றால் ஏழ்மையைச் சுட்டிக்காட்டலாம்.  மிக மோசமான ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அது நமது இனத்தின் மேல் நமக்கு உள்ள நம்பிக்கை. அவர்களை நாம் அப்படிப் பார்த்ததில்லை. ஆனால் களத்தில் உள்ளவர் ரவி அவரகள். அவர் சொல்லுவதை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

நம் இனம் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே என்று நினைக்கும் போது மனம் தடுமாறுகிறது.  யாரைக் குற்றம் சொல்வது? வேலை வாய்ப்புக்கள் அவர்களுக்கு இல்லை என்று சொல்லலாம். அவர்கள் விரும்புகிற வேலை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

எத்தனை காரணங்களை நாம் சொன்னாலும்  கடைசியாக வளர்ப்புமுறை சரியில்லை என்று தான் போய் முடியும். அப்பா அம்மா சரியாக வளர்க்கவில்லை என்கிற பழி அவர்கள் மீது வந்து சேரும். 

இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாள்வது  என்பதை நமது தலைவர்கள் சிந்திக்க வேண்டும். நம்மிடையே ஏகப்பட்ட இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள், கழகங்கள் இருக்கின்றன. எல்லாமே இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இன்னும் அதிக முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

வேதனையிலும் வேதனை தான். என்ன செய்வது? நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

No comments:

Post a Comment