Sunday 17 April 2022

சைக்கிளை மதியுங்கள்!

 

இளைய தலைமுறை அதுவும் பள்ளி மாணவர்கள் தங்களது சைக்கள்களின் மூலம் செய்கின்ற அட்டகாசங்கள் மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன!

இரவு நேரங்களில் பொது சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். பலமுறை விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. மரணமும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இவர்கள் பயன்படுத்தும் சைக்கிள் நமக்கு வினோதமாக இருக்கும். சைக்கிளில் உள்ள இருக்கை  கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சைக்கிளில் விளக்குகள் இருக்காது.  பிரேக்குகள் இல்லாமல் இருக்கும். தலைக்கவசம் அணிவதில்லை.  இவைகள் எல்லாம் இல்லாமல்  இருந்தால் தான் அவர்களுக்குச் சைக்கள் ஓட்டுவதில் ஒரு கிக் வரும்! இல்லாவிட்டால் அதனை அவர்கள் சைக்கிளாகக் கூட மதிக்க மாட்டார்கள்!

இவர்கள் எப்படி ஓட்டுவார்கள் என்பது கூட ஓரளவு நமக்குத் தெரியும். நின்றுக் கொண்டே ஓட்டுவார்கள். முன் பகுதி சக்கரத்தை  தூக்கிக் கொண்டே ஓட்டுவார்கள். படுத்துக் கொண்டே ஓட்டுவார்கள்.  ஒரு பக்கம் சாய்ந்து கொண்டே ஓட்டுவார்கள். இன்னும் பல வகைகளில் இருக்கலாம்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கினால் இப்போது இந்த பிரச்சனை மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. 

விபத்து நடந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர். விபத்து ஏற்பட்ட நேரம் காலை மூன்று மணி அளவில். அப்போது இந்த இளசுகள் சாலையில் தங்களது வீரதீர சாகஸங்களைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்து தான் இது. அப்போது கார் ஓட்டி வந்தவர் ஒரு பெண்மணி. என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை. தூக்கக் கலக்கமோ என்னவோ தெரியவில்லை. அப்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவம் நடந்த இடத்திலேயே ஆறு பேர் இறந்து போயினர். இருவர் மருத்துவமனைக்குப் போகும் வழியில் மரணமுற்றனர்.

இது ஒரு துயரச் சம்பவம் என்பதில் ஐயமில்லை. சிறு வயது பையன்கள் இப்படி நடு ரோட்டில் தங்களது சாகஸங்களைச் செய்வது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. ஆனாலும் உண்மை என்னவென்பது நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் எட்டு பேர் இறந்து போயினர் என்பது தான் கண்ணுக்குப் பெரிதாகத் தெரிகிறது. தன் மீது குற்றம் இல்லை என்கிறார் ஒட்டுநர்.

வழக்கு இன்னும் தொடர்கிறது.

நமது அறிவுரை எல்லாம் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சம் அக்கறைக் காட்டுங்கள் என்பது தான்.


No comments:

Post a Comment