Monday 4 April 2022

""பீஸ்ட்" அடி விழுமா?

 

    

ஒவ்வொரு விஜயின் படமும் வெளியாகும் போது கொஞ்சம் அமர்க்களமாக வெளியாவது வழக்கம்!

ஏதோ ஒரு காரணத்தைக் கூறி "அது தடை! இது தடை! தடை செய்யுங்கள்! படத்தை ஓட விடமாட்டோம்!" போன்ற கோஷங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆர்ப்பரிப்புகள் என்று வந்து போவது வழக்கமான ஒன்று!  இது ஒரு வகையான "இலவச விளம்பரம்"  படத்திற்குக் கிடைக்கிறது! அந்த இலவச விளம்பரத்தை விஜய் விரும்புகிறார்! என்ன தான் தளபதி விஜய் என்றாலும் தளபதிக்கு இந்த இலவச விளம்பரம் இல்லாமல்  படத்தை ஓட்ட முடியாது என்கிற பயமும் உண்டு!

இந்த யுக்தியை விஜய் தனது ஒவ்வொரு படத்துக்கும் கடைப்பிடித்து வருகிறார் என்பது நமக்குத் தெரியும்.

இப்போது இந்த படம் குவைத்தில் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் நாட்டிலும் "தடை செய்!" என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. மற்ற இஸ்லாமிய நாடுகளும் அதனைப் பின்பற்றும் என நம்பலாம்.

நம்மிடம் உள்ள ஒரு கேள்வி. முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பது விஜய்க்குத் தெரியாதா? அல்லது படத்தை இயக்கிய இயக்குநருக்குத் தெரியதா?  தெரிந்தும் ஏன் அவர் அப்படி செய்ய வேண்டும்? ஒரே காரணம் தான். முதலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்த வேண்டும்! பின்னர் "அதை மாற்றிவிட்டோம், இதை மாற்றிவிட்டோம்" என்று சொல்லி படத்தை வெற்றிகரமாக வெளியிட வேண்டும். இப்படித்தான் அவர்  தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்!

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இதிலும் ஓரு அரசியல் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆமாம்!  முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினால் இந்திய நாட்டை ஆளும் தரப்பினரின்  உள்ளம் குளிர்ந்து போகும்! அவர்கள் இந்தப் படத்தை வரவேற்பார்கள்!

இப்படி ஆளுங்கட்சியான பா.ஜ.க. வுக்கு  விஜய் தனது  ஆதரவைக் கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்தப் படத்தின் மூலம் சொல்ல வருகிறாரா? அதற்கான வாய்ப்பும் உண்டு. எதையும் சொல்வதற்கில்லை!

தமிழ்  நாட்டை ஆள வேண்டும் என்கிற வேட்கை நடிகர்களுக்கு உண்டு. இப்போதைக்கு அது விஜய்க்குக்  கொஞ்சம் அதிகமாகவே உண்டு.  நடிகர் ரஜினி "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!" என்று ஒதுங்கிக் கொண்டார்! நடிகர் விஜய்க்கும் அதே நிலைமை தான் வரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தங்கள் சுயநலத்திற்காக இனங்களுக்கிடையே மோதலை உருவாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது, மிருகங்கள் அதனைச் செய்வதில்லை. மனிதன் தான் மிருகத்தனமாக அதனைச் செய்கிறான்.

"பீஸ்ட்" படத்தைப் பற்றியான எந்த விமர்சனமும் நமக்குக் கிடைக்காத  நிலையில் நாம் அதைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியவில்லை. குவைத் நாடு சொல்லுகின்ற காரணம் சரிதான் என்று தெரியவந்தால்  விஜய் தனது கணிசமான ரசிகர்களை இழக்க வேண்டி வரும்.

"பீஸ்ட்" படத்திற்கு அடி விழுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment